வெள்ளி, 16 செப்டம்பர், 2016

'கர்னாடகா கலவரம்’ -கர்னாடகத்தில் வாழும் எழுத்தாளர் வாஸந்தியின் கருத்து

வாய்ப்புக் கிடக்கும்போதெல்லாம் அங்குள்ள தமிழருக்கு எதிராக அராஜகத்தில் ஈடுபடும் கன்னடத்தாரின் உள்நோக்கம் புரியாமல், இப்போதைய கலவரம் குறித்து ‘நடுநிலை வாதம்’ புரிவோர் கவனத்திற்கு இப்பதிவு.
’தி இந்து[16.09.2016]வில் வெளியான எழுத்தாளர் வாஸந்தியின் கட்டுரை:

நீர் என்பது உணர்வுபூர்வமான விஷயம். வெறுப்பைக் கக்கும் அபாயம் அதனுடன் பிணைந்திருப்பது; ‘தமிழனுக்கு ஒரு சொட்டு நீர் கிடையாது’ என்கிற வாட்டல் நாகராஜின் வாக்கியம் வெறியேற்றுவது.

ஆனால், கன்னட அமைப்புகளே திகைக்கும் வகையில் பிரச்சினை சென்ற வாரம் கைமாறி, தீயாய்ப் பரவி, மாநிலத்தை, அதன் கௌரவத்தைப் பொசுக்கிற்று. ஊரடங்குச் சட்டம் போடும் அளவுக்குத் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமான பெங்களூரு  ரணகளமாகிப் பற்றி எரிந்தது.

தொலைக்காட்சிப் பதிவுகளைப் பார்க்கும்போது, காட்சிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடக்கும் கலவரத்தைவிட மோசமானதாக வயிற்றைக் கலக்கியது. 40 வாகனங்களுக்கு மேல்[100க்கும் மேல் என்பது பின்னர் வந்த ஊடகச் செய்தி] தீக்கிரையாகிப்போனது நம்ப முடியாத அராஜகமாகத் தோன்றியது. அவர்களை அடக்க நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இரண்டுபேர் மரணமடைந்தார்கள். அவர்கள் அப்பாவிகள் என்று செய்தித்தாள் சொல்கிறது. 

அதை ஊதிப் பெருக்குவது அரசியல் மட்டுமல்ல, பெங்களூருவின் பொருளாதார வரைபடத்தை அலைக்கழிக்கும் சமூகவியல் காரணங்களும்தான்.

[பெங்களூருவில்] வன்முறை என்பது கடந்த 30 ஆண்டுகளாகத்தான். 

தமிழ்நாட்டுப் பேருந்துகளைச் சுட்டுப் பொசுக்கியவர்களுக்கும் காவிரிப் பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை என்பதுதான் இதில் இருக்கும் நகை முரண். தலைக்குத் தலை அம்பலமாக, சட்டத்தைக் கையில் எடுத்து ராட்சச வெறியுடன் அலைந்தவர்கள் எல்லாம் கன்னட இளைஞர்கள். 

அவர்கள் விவசாயம் பொய்த்துப்போன கிராமப் பகுதியிலிருந்து வேலை தேடித் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவுக்கு வந்தவர்கள். ஆட்டோ ஓட்டிகள், பெட்ரோல் பங்கில் வேலை செய்பவர்கள், வேலை கிடைக்காமல் அலைபவர்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பெங்களூரு இப்போது இல்லை.

எங்கள் குடும்பம் ஐந்து தலைமுறைகளாக கர்னாடகத்தில் வசிக்கிறது. என்னுடைய தாயும் அவருடன் பிறந்தவர்களும் கன்னடம்தான் படித்தார்கள். என்னுடைய பாட்டி பிசிபேளா ஹூளிஅன்னாவையும் ஒப்பட்டுவையும் செய்து, யுகாதியை, கன்னட வருடப் பிறப்பைக் கொண்டாடுவார். தமிழரும் கன்னடியரும் வெகு இணக்கமாக இருந்த காலம். தமிழர்கள் கன்னட சமூகத்துடன் ஒன்றியிருந்த காலம்.

முகம் மாறிய கன்னடம்

இப்போதிருக்கும் பெங்களூரு தகவல் தொழில்நுட்பத் தலைமுறைக்கும் கன்னடியருக்குமே ஒட்டுறவு இல்லை. தகவல் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சி கன்னட முகத்தையே மாற்றிவிட்டது. பூங்காவிலும் மால்களிலும் திரையரங்குகளிலும் கன்னட மொழி காதில் படுவதில்லை. அவர்களுக்கு விளங்காத ஆங்கிலமும் இந்தியும்தான் ஒலிக்கின்றன.

வறண்ட கிராமங்களிலிருந்து வேலை தேடி பெங்களூரு வந்து வேலை கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்கள், எல்லா வேலை வாய்ப்புகளையும் வெளி மாநிலத்தவர் அபகரித்துவிட்டதாகக் கருத ஆரம்பித்தனர். தங்கள் வயதொத்த வாலிபர்கள், யுவதிகள் மாதத்துக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் வாங்குவதாகக் கேள்விப்படுகிறார்கள்.

பெங்களூருவின் நிலத்தையெல்லாம் வெளியூர் ஆட்கள் வாங்கி அடுக்குமாடி கட்டுகிறார்கள். தகவல் தொழில்நுட்ப இளைஞர்கள் வேலைக்குச் சேர்ந்த ஓர் ஆண்டுக்குள் ஃபிளாட் வாங்குகிறார்கள். கப்பல் போல வாகனம் வாங்குகிறார்கள்.

அவர்கள் வருகையால் அடுக்கு மாடிகள் பெருகிவிட்டன. நிலம் நீர் வரண்டுவிட்டது. குடிசைப் பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்கும்போது, பணம் உள்ளவர்களுக்கு டாங்கரில் நீர் செல்கிறது.

கோபத்தின் வடிகாலா அராஜகம்?

பெங்களூருவின் ஒரு பகுதி அக்கினிக் குண்டமாக மாறிவருவதைச் சமூகவியலாளர்கள் கவலையுடன் கவனித்துவருகிறார்கள். கன்னட நடிகர் ராஜ்குமார் இறந்த அன்றும் மறுநாளும் இப்படித்தான் ஒரு வெறியாட்டம் நடந்தது. துக்கம் கோபமாக, வெறியாக உருப்பெற்றது. பன்னாட்டு நிறுவனங்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. தமிழ்நாட்டு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

நான் அப்போதுதான் சென்னையிலிருந்து அங்கு குடிபெயர்ந்திருந்தேன். தமிழ்நாட்டுப் பதிவெண் உடைய என் காரை காரேஜில் மூடி வைக்க வேண்டியிருந்தது.

இந்த வெறியர்களுக்கு எந்த உணர்வுபூர்வமான விஷயமும், அவர்களது உள்ளார்ந்த கோபத்துக்கு வடிகாலாகிவிடுவதுதான் சோகம். இது வெறும் நீர்ப் பிரச்சினை இல்லை. ஒரு சமூகவியல் பிரச்சினை. அதன் தீவிரத்தை உணராமல் கன்னட அமைப்புகளும் அரசுகளும் அரசியல் செய்தால் கர்னாடகத்துக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே ஆபத்து. ஜனநாயகப் பண்புகளுக்கு ஆபத்து.
===============================================================================
வருகை புரிவோர் மிக எளிதாகக் கட்டுரையை வாசிப்பதற்குப் பத்திகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளேன். சில கருத்துகளின் அதி முக்கியத்துவத்தை அறிவதற்காக அவற்றிற்கு வண்ணம் சேர்த்துள்ளேன்.

கட்டுரையின் ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான ‘வாஸந்தி’ அவர்கள் என்னை மன்னித்திட வேண்டுகிறேன்.

அவருக்கும் கட்டுரையை வெளியிட்ட, ‘தி இந்து[ 16.09.2016]’வுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக