மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மனித நேயத்தை ஊட்டி வளர்த்தால்...சாதி, மதம், கடவுள் ஆகியவற்றின் தேவை முற்றிலும் ஒழியும்.

Monday, September 5, 2016

வயிற்றில் டாலர் கட்டினால் நோய் குணமாகுமா?!

டத்தில் இருக்கும் பெண்மணியின் பெயர்: ‘மோனிகா பெஸ்ரா’.

கொல்கத்தாவிலிருந்து 400 கி.மீ.தொலைவிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். இவரின் வயிற்றில் முற்றிய புற்றுநோய். எத்தனையோ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். அப்புறம் ஒரு நாள்[ஒரே நாளில்...சில மணி நேரங்களில்] குணமானதாம். எப்படி?

அவரே சொல்கிறார்[தி இந்து, 05.09.2016].....

“ஒரு நாள் அன்னை தெரசாவின் ‘மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி’யில் இருந்து வந்த சகோதரிகள் என் வயிற்றில் ஒரு டாலர் கட்டிவிட்டனர். சில மணி நேரங்களில் வயிற்று வலி போய்விட்டது. தூங்க முடியாமல் இருந்த நான் நன்றாகத் தூங்கினேன்.

அதிகாலை ஒரு மணிக்குக் கண் விழித்தேன். புற்றுநோய் மறைந்துவிட்ட உணர்வு தோன்றியது. வயிற்றிலிருந்த வீக்கமும் காணவில்லை. அருகிலிருந்த பெண்களிடம் சொன்னேன். வீக்கம் இல்லாததை அவர்களும் உறுதிப்படுத்தினார்கள்.”

மூளை பாதிக்கப்பட்டுக் கோமாவில் இருந்த பிரேசில் நாட்டவர் ஒருவரும் அன்னை தெரசாவை வேண்டிப் பிரார்த்தனை செய்ததால் தான் குணமடைந்ததாகத் தெரிவித்தாராம்.

“இந்த இரண்டு அற்புதங்களையும் பல்வேறு வகைகளிலும் ஆய்வு செய்து உறுதி செய்த பின்னர் அன்னை தெரசாவுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்படும்” என்று கடந்த மார்ச் மாதம் போப் பிரான்சிஸ் அறிவித்ததாகவும், அதன்படி இப்போது பட்டம் வழங்கப்பட்டதாகவும் பத்திரிகைச் செய்திகள் சொல்கின்றன.

மேற்சொன்ன அற்புதங்கள் நிகழ்ந்தது உண்மையாயின், டாலர்கள் கட்டியே தீராத எத்தனையோ நோய்களைத் தீர்க்க முடியுமே. செய்வார்களா?

“இவற்றில் அற்புதங்கள் ஏதுமில்லை; மருத்துவ அறிவியலே காரணம்” என்கிறார்களாம் மருத்துவ அறிஞர்கள். அவர்களேனும், தாமாக முன்வந்து புற்றுநோய் குணமானதற்கான  காரணங்களை மக்களுக்கு விளக்கிச் சொல்வார்களா?

இது நம் விருப்பம். ஆனால், இவற்றில் எந்த ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பது நாம் அறிந்ததே.

அனாதைகளாகக் கைவிடப்பட்டுத் தெருவில் திரியும் குழந்தைகள், நெருங்குவதற்கோ தொடுவதற்கோகூட நாம் அஞ்சுகிற தொழுநோயாளிகள், எயிட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள், காச நோயாளிகள் என்று சமூகத்தால் கைவிடப்பட்ட அத்தனை ஏழை எளியவர்களுக்காகவும்  தம் வாழ்வை அர்ப்பணித்தவர் அன்னை தெரசா; இதன்மூலம் புகழின் உச்சியைத் தொட்டவரும்கூட.

இந்த மண்ணில் மனித இனம் அழியாதவரை அவர் நினைவும் அழியாது; புகழும் குறையாது. என்றென்றும் அவர் போற்றப்படவேண்டியவர்; பின்பற்றப்பட வேண்டியவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

மேற்கண்டவை போன்ற நிகழ்வுகளை எடுத்துக்காட்டி, அவை அவரால் நிகழ்த்தப்பட்ட அற்புதங்கள் என்று சம்பந்தப்பட்டவர்களும் ஊடகங்களும் பறைசாற்றிக்கொண்டிருப்பது உள்மனதை உறுத்துகிற செயல் என்பது என்[சாமானியன்] கருத்து. 

இக்கருத்தை வெளிப்படுத்தவே இப்பதிவு. அன்னை தெரசாவின் புகழுக்குப் பங்கம் விளைவிக்கும் நோக்கம் எனக்குக் கிஞ்சித்தும் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

நன்றி.
***********************************************************************************************************************
முக்கிய குறிப்பு:
பதிவை இணைத்தபோது, ‘புதிய இடுகை இல்லை’ என்று குறிப்பிட்ட தமிழ்மணம் பின்னர் இணைப்பு வழங்கியுள்ளது. ஒன்றும் புரியவில்லை!!!!!No comments :

Post a Comment