ஞாயிறு, 22 நவம்பர், 2020

மருட்டும் மனநோயும் மதி மயங்கும் மனிதகுலமும்!!!

"இந்தியாவில் மனநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ஆதங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு மனநோயாளிகளாக இருக்கிறார்கள். இது ஜப்பான் நாட்டின் மொத்த மக்கள் தொகையைவிட அதிகம். இதயநோய், சர்க்கரை நோயைவிட மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மனநோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகமாக உள்ளது."  -பெங்களூரு, தேசிய மனநலச் சுகாதார மற்றும் நரம்பு அறிவியல்(நிமான்ஸ்) நிறுவனம் சார்பில் நடைபெற்ற 22ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, டாக்டர்களுக்குப் பட்டங்கள் வழங்கி உரையாற்றுகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இவ்வாறு கூறினார்[https://www.dailythanthi.com/amp/News/Districts/2017/12/31050146/Mental-patients-in-India-Increase-in-number.vpf].

இந்திய மாநிலங்களில் 1990 முதல் மனநலக் கோளாறுகளின் போக்குகள் மற்றும் தற்போதுவரை அதனால் ஏற்பட்டுள்ள நோய்ச் சுமை குறித்த விரிவான மதிப்பீடுகள் The Lancet Psychiatry இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

'நாட்டிலுள்ள மக்களில் 1 லட்சம் பேரில் குறைந்தது 836 பேர் மனச்சோர்வுக் கோளாறுகளால்[மன நோய்] ஒருவிதக் குறைபாட்டைச் சந்தித்துள்ளனர்' என்பது பற்றியும், 'ஏராளமான மக்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்?' என்பது குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

1990 மற்றும் 2017-க்கு இடையில் மனநலக் கோளாறுகளின் நோய்ச் சுமை இரட்டிப்பாகியுள்ளது. 2016ஆம் ஆண்டில் 4.3 சதவீத இயலாமை(Disability) மற்றும் இறப்புகளுக்குத் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்ளும் குணமான சுய தீங்கு(Self-harm) என்பது காரணமாக இருக்கிறது. இதுவே 1996இல் 3.6 சதவீதமாக இருந்தது. 2017இல் ஏழு இந்தியர்களில் ஒருவர் மனச்சோர்வு, பதற்றம், [Schizophrenia, Bipolar disorders, Idiopathic developmental intellectual disability] நடத்தைக் கோளாறுகள், மாறுபட்ட தீவிரமான ஆட்டிசம் உள்ளிட்ட மனநலப் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

மனச்சோர்வு மற்றும் கவலைக் கோளாறுகளால் ஒவ்வோர் ஆண்டும் உலகப் பொருளாதாரத்திற்கு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அல்லது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 71 லட்சம் கோடிவரை இழப்பு ஏற்படுவதாக உலகச் சுகாதார நிறுவனம் தலைமையிலான ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏழு இந்தியர்களில் ஒருவர் மனநலக் கோளாறுகளின் தீவிரப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். அதில் மனச்சோர்வு மற்றும் பதற்றம் போன்ற பாதிப்புகள் பொதுவானவையாக உள்ளன என்று 2017இல் Lancet Psychiatry என்கிற மருத்துவ இதழில் வெளியான ஆய்விலும் மதிப்பிடப்பட்டுள்ளது[http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3461&id1=101&issue=20200201]

இந்தச் சமூகம் யாரை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருக்கிறது. ஆனால், மன நோயாளிகளை மட்டும் ஏற்க மறுக்கிறது. 

சொந்த உறவுகளே இவர்களைக் கவுரப் பிரச்சினையாகக் கருதுகிறார்கள். மூளை நரம்புகளில் ஏற்படும் மாற்றங்களால்தான் மனநோய் வருகிறது என்ற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. அதனால்தான், மனநோய் என்பது கடவுளின் சாபம், பேய்க் கோளாறு, சூனியம் என்று ஏதேதோ சொல்லி மனநோயாளிகளைப் புனிதத் தலங்களில் கொண்டுபோய் விடும் கலாச்சாரம் இன்னமும் தொடர்கிறது. ராமேஸ்வரம், ஏர்வாடி, திருச்சி குணசீலம், நெல்லை மாவட்டம் புளியம்பட்டி, வேளாங்கண்ணி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க இதுவே காரணம்.

தென்னகத்தின் காசி என்று சொல்லப்படும் ராமேஸ்வரத்தில் சமீபகாலமாக மன நோயாளிகள் வந்திறங்குவது அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பகுதியினர் ஆந்திரம் மற்றும் பீகார், உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இவர்களில், தானாகத் தப்பித்தோ வழிதவறியோ வந்தவர்களைவிட, யாத்திரை வருவது போல் அழைத்து வந்து உறவுகளால் தெரிந்தே தொலைக்கப்பட்டவர்களே அதிகம்.

தமிழ்நாடு மனநலத்திட்டத்தின் மாநிலத் திட்ட ஒருங்கிணைப்பாளரும், மனநல மருத்துவருமான செ.ராமசுப்பிரமணியன், "மனநோயும் ஒரு வியாதிதான் என்பதை உணராதவர்கள் இதைத் தீர்க்கவே முடியாது என்ற முடிவுக்குச் சென்றுவிடுகின்றனர். அதேசமயம், இதற்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர்கள் இந்தியா முழுவதுக்குமே மொத்தம் ஐயாயிரம் பேர்தான் உள்ளனர். மனநோயாளிகள் தங்கிச் சிகிச்சை பெற இந்தியாவில் 42 ஆயிரம் படுக்கைகள் மட்டுமே இருக்கின்றன. மேலும், இந்தச் சிகிச்சைக்கான எல்லா மருந்துகளுமே விலை அதிகம். இதில்லாமல், சாப்பாடு, போக்குவரத்துச் செலவுக்கும் பணம் தேவை. இந்தச் சிகிச்சை ஓரிரு நாளிலும் முடியக்கூடியதும் இல்லை. தொடர்ந்து 2, 3 ஆண்டுகள் மருந்து எடுக்கவேண்டும். இதற்கெல்லாம் நடுத்தர, ஏழைக் குடும்பங்கள் தயாரில்லை; அவர்களிடம் அதற்கான விழிப்புணர்வும் இல்லை. இதனால், குணப்படுத்தக்கூடிய ஒரு வியாதியைக் குணப்படுத்த முடியாததாகவே ஆக்கிவிடுகிறார்கள்.

மனநலப் பிரச்சினையையும், மனநோயாளிகளையும் சமூகம் சார்ந்த பிரச்சினையாகக் கருதினால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு காண முடியும். 2001இல் ஏர்வாடி மனநலக் காப்பகத் தீ விபத்து நடந்தது. அதன்பிறகு, மனநலத் துறையின் மூலம், மனநோயாளிகளைக் காக்க எல்லா மாவட்டத்திலும் மனநல மருத்துவர்களையும், மன நல மருத்துவமனைகளையும் உருவாக்கி உள்ளனர். மறுவாழ்வுத் துறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 நோயாளிகளை வைத்துப் பாதுகாக்கும் வகையில் காப்பகங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனாலும், மன நலத்துறைக்கான தேவைகள் அதிகமாகவே இருக்கின்றன'' என்றார் அவர்[https://m.dailyhunt.in/news/nepal/tamil/the+hindu+kamadenu-epaper-thehinta/bunithath+talama+mananoyalikal+madama+avathiyil+ramesvaram-newsid-125387804].

இதுகுறித்து உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது:

உலக நாடுகளில் மனநலம் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நீண்டநாள் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகம். தற்போது கொரோனா தாக்கம் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் கடும் நெருக்கடி உண்டாகி உள்ளது. இதனால் அவர்களது உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட முக்கியமான துறைகளில் இதுவும் ஒன்று.

கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உலகச் சுகாதார நிறுவனம் 130 நாடுகளில் கணக்கெடுப்பு மேற்கொண்டது. '35 சதவீத நாடுகளில் நீண்டநாள் மனநோய்ப் பாதிப்புகொண்ட நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.

குறிப்பாக, 193 நாடுகளில் 93 சதவீத நாடுகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சிகிச்சை வசதி இன்றி, கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

மருத்துவமனைகள் முழுவதும் நோயாளிகள் நிரம்பி வழிவதால் மனநல நோய்ப் பாதிப்பு உடையவர்களுக்குப் படுக்கை வசதிகூட இல்லாமல் பின்தங்கிய நாடுகள் பல சிரமத்திற்கு உள்ளாகி உள்ளன.' -இவ்வாறு உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது[https://www.dinamalar.com/news_detail.asp?id=2627317]