அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 21 நவம்பர், 2020

மக்களை மக்குகள் ஆக்கும் சத்குரு ஜக்கி வாசுதேவ்!!!

ஞானி என்றும் யோகி என்றும் குரு என்றும் நம் மக்களில் பலராலும் போற்றப்படுகிற ஆன்மிகவாதி சத்குரு ஜக்கி வாசுதேவ் ஏராளமான தத்துவக் கட்டுரைகளை எழுதியுள்ளார்; அவற்றை நூல்களாகவும் வெளியிட்டுள்ளார். மக்களுக்குத் தத்துவம் போதிக்கும்போது, தேவப்படும் இடங்களில் கதைகள் சொல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அவர் சொல்லும் உதவாக்கறைத் தத்துவங்களைப் போலவே, கற்பித்துக் கூறும் கதைகளும் கேட்போரை மதி மயங்கச் செய்வனவாகவே உள்ளன என்பது என் எண்ணம். எடுத்துக்காட்டாகச் சில கதைகள். நீட்சி அஞ்சி, கதைகளின் கருதுகோள் சிதையாத வகையில் சுருக்கிப் பதிவு செய்திருக்கிறேன்.

கதை ஒன்று: மிதக்கும் மாட்டு வண்டி... 

ஒரு தாய் கடவுள் பக்தனான தன் ஒரே மகனிடம் காசிக்குச் சென்று தன் உடலைவிடும் ஆசையைத் தெரிவித்தார்.

இருவரும் காசி நோக்கி நடந்தார்கள். தாயால் நடக்க இயலாத நிலை வந்தபோது, அவரைத் தோளில் சுமந்து நடந்தான் மகன். தனது முழுபலமும் தீரும்நிலையிலும்கூட தனது தாயின் ஆசையை என்ன விலைகொடுத்தாவது பூர்த்திசெய்துவிட வேண்டுமென்ற முனைப்பு அவனுக்கு இருந்தது. ஆனாலும், களைப்பு அதிகமாகிக்கொண்டே இருந்தது.

ஒரு காட்டின் அடர்ந்த மையப் பகுதியில் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டி வந்துகொண்டிருந்தது. தனது தாயைத் தோளில் சுமந்து சென்றுகொண்டிருந்த அந்த மனிதனின் அருகில் அது நின்றது.

"உள்ளே ஏறுங்கள்" என்றார் மாட்டுவண்டி ஓட்டுநர். தன் தாயை வண்டியினுள்ளே பத்திரமாக அமரவைத்த மகன் தானும் ஏறிக்கொண்டான். வண்டி நகரத் துவங்கியது. 

மேடுபள்ளங்களில் ஏற்படும் அதிர்வுகள் இன்றி மிதந்து செல்வது போல் மகன் உணர்ந்தான். வண்டியின் சக்கரங்களைக் கவனித்தபோது அவை சுழலவில்லை என்பது தெரிந்தது. வண்டியை இழுக்கும் காளையோ கால்மடக்கி அமர்ந்தவாறு இருந்தது. ஆனாலும், வண்டி சென்றுகொண்டிருந்தது.

வியப்புக்குள்ளான மகன் ஓட்டுநரைப் பார்த்தான். முகமில்லாத ஒரு மேலாடை மட்டுமே இருந்தது. அது, "வெறுமையான முகம்." அந்த ஆடைக்குள் ஒன்றும் இல்லை! அவர் தனது தாயைப் பார்த்தான். அவர் பிரகாசமாய் ஜொலித்துக் கொண்டிருந்தார்.

அந்தத் தாய் உடனே எழுந்து உட்கார்ந்து, “நாம் வந்து சேர்ந்துவிட்டோம்! அவர் இங்குதான் இருக்கிறார். நான் போகும் நேரம் வந்துவிட்டது" என்று சொல்லி, தனது உடலை அங்கேயே துறந்தார். https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/mithakkum-mattu-vandiyil-mugamilla-manithar

மாட்டு வண்டி அதிர்வில்லாமல் மிதந்து போனதாம். சக்கரங்கள் சுழலவில்லையாம். ஆடை மட்டுமே ஓட்டுநரா இருந்து வண்டியை ஓட்டிச்சாம். வண்டியை இழுக்க வேண்டிய மாடு கால் மடக்கிக் குந்திகிட்டிருந்ததாம். நம்ம காதுகளில் நல்லாவே பூ சுத்துறாரு சத்குரு!

சத்குருவுக்கு  நம் வேண்டுகோள்:

இனியும் இப்படி 'வெத்து'க் கதைகள் சொல்லாம, மக்களுக்குப் 'புத்தி' வளர்ற மாதிரி ஏதாவது சொல்லுங்கய்யா.


இரண்டு: "நரகம்தான் வேண்டும்!"

வின்டோஸ் சாப்ட்வேரை உருவாக்கிய பில்கேட்ஸ் ஒரு நாள் இறந்து போனார். அவர் செய்த நல்ல காரியங்களாலோ என்னவோ அவர் சொர்க்க வாசலை அடைந்தார். சொர்க்கத்து வாசலில் காத்துக்கிடந்த செயின்ட் பீட்டர், “உங்கள் வின்டோஸ் கண்டுபிடிப்பின் மூலம் இந்த உலகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள், உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்துள்ளீர்கள், அதனால் தேர்வை உங்கள் கைகளில் விட்டுவிடுகிறோம், சொர்க்கமா நரகமா நீங்களே சொல்லுங்கள்” என்றார்.

அதற்கு பில்கேட்ஸ், “நான் முதலில் நரகத்தை சுற்றிப் பார்க்க விரும்புகிறேன்,” என்றார். ஒரு எலிவேட்டரில் கீழே சென்றார். அங்கே கதகதப்பான கடற்கரை, அற்புதமான கால்ஃப் மைதானம், பிகினியில் பெண்கள் என்று அவர் விரும்பியபடியே இருந்தது அந்தச் சூழல். சியாட்டில் நகரில் அவருக்கு வெகு பரிச்சயமான விஷயங்கள் ஆயிற்றே இவையெல்லாம். “இது நன்றாகவே இருக்கிறது,” என்று திருப்தி கொண்ட பில்கேட்ஸ் அடுத்து சொர்க்கத்தை அடைந்தார்.

சொர்க்கத்தின் கதவுகள் பில்கேட்சுக்காகத் திறந்தன. அங்கே ஒரே மேகமூட்டமாக இருந்தது, தேவதைகள் பாதி உடல்களுடன் மிதந்து கொண்டிருந்தனர், யாழிசை இசைந்துக் கொண்டிருந்தது. அத்தனை பெரும் ஆனந்தப் பரவசத்தில் இலயித்துக் கொண்டிருந்தனர்.

இரண்டு இடங்களையும் பார்த்த பில்கேட்சுக்குத் தெரிவு சுலபமாய்ப் போனது. “ஒருநாள் நான் இந்தச் சொர்க்கத்தில் இருக்கும் நிலைக்கு வளர்வேன் என்று நினைக்கிறேன்[சொர்க்கத்தில் இடம் தரப்பட்டதுன்னு சொன்ன ஜக்கி குழப்புகிறாரே?!], ஆனால் தற்சமயம் நரகம்தான் எனக்குப் பொருத்தமாய்த் தெரிகிறது. ஒருவேளை நரகம் எனக்கு அலுத்துப் போனால் யாழிசை கேட்கும் சொர்க்கத்திற்கு நான் வருகிறேன்” என்றார்.

அடுத்த கணம் நரகத்தின் பதிவேட்டில் பில்கேட்சின் பெயர் பொறிக்கப்பட்டது. எலிவேட்டர் கீழே சென்றது. நரகத்தில் கால் பதித்த பில்கேட்சுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு எரியும் நெருப்பு, தகிக்கும் அனல், பைத்தியம் பிடித்த மனிதர்கள், கொடூரமான சித்திரவதைகள் என்று கண்ணால் பார்க்க முடியாத பல விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன. அதிர்ந்து போன பில்கேட்ஸ், “என்ன இது, கடற்கரை, கால்ஃப் மைதானம், அந்தப் பெண்கள் எல்லாம் என்னவானார்கள்?” என்றார். அதற்குச் சாத்தான், “உங்களை வசீகரிக்க நாங்கள் செய்திருந்த விளம்பர டெமோ அது” என்றார்.

பில்கேட்சுக்கும் ஜக்கிக்கும் ஏதேனும் பிரச்சினையா? உயிரோடு இருக்கிற மனுசனைக் கொன்னுட்டாரே!

இந்தக் கதையின் வாயிலா சத்குரு என்ன சொல்ல நினைக்கிறார் ஒரு மண்ணும் புரியலையே!? https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/naragamthan-vendum

இந்த மாதிரி வெறும் குப்பைக் கதைகளை எழுதுறது கடவுளுக்கே குருவான[சத் - பிரம்மம் > பரம்பொருள்] ஜக்கி வாசுதேவுக்கு அழகல்லவே!


மூன்று: இறந்தவர்கள் நல்லவர்கள்?![இந்தக் கதை கொஞ்சம் தேவலாம்]

ஒருமுறை ஒரு தாயும், அவரது ஏழு வயது மகனும் அவர்கள் வீட்டிற்கு அருகிலிருந்த கல்லறைத் தோட்டத்திற்குச் சென்றார்கள். அது போன்ற ஒரு இடத்திற்கு அந்தச் சிறுவன் அப்போதுதான் முதல் முறையாகச் செல்கிறான்.

அவனது தாய் ஒரு குறிப்பிட்ட கல்லறையை நோக்கி நடந்து சென்று அங்கே அமர்ந்து கொண்டார். அந்தச் சிறுவனுக்குக் கல்லறை மைதானத்தை முழுமையாகச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசை. ஒவ்வொரு கல்லறையாகச் சென்று அதில் எழுதப்பட்டவற்றைப் படித்தான்.

இப்படி கல்லறை முழுக்க சென்று படித்து விட்டு, தன் தாயிடம் திரும்ப வந்து, “அம்மா, கல்லறைகளில் புதைக்கப்பட்டவங்க எல்லாருமே நல்லவர்களாவே தெரியறாங்க! மோசமானவர்களை எல்லாம் எங்கே புதைப்பார்கள்?” என்றான்.

பையன் கேள்விக்கு அம்மா பதில் சொல்லல. ஜக்கியும் சொல்ல வைக்கல. தலைப்பில் பதில் இருக்கு.

'இறந்தவர்கள் [எல்லோரும்] நல்லவர்களே.'

===============================================================