அறிவை மழுங்கடிக்கிற ஆன்மிகக் கதைகளைப் போட்டிபோட்டுக்கொண்டு வெளியிட்டுவருகிறார்கள் நம் பத்திரிகையாளர்கள். பகுத்தறிவு வளர்ப்பில் ஈடுபாடுள்ள படைப்பாளர் எவரும் மூடநம்பிக்கைகளைச் சாடும் கதைகளைப் படைப்பதில் ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை.
சற்று முன்னர், இவ்வகையிலான படைப்புகளைத் இணையத் தளங்களில் தேடியபோது, கீழ்க்காணும் 'நாத்திக இராமன் கதை' தட்டுப்பட்டது[சற்றே ஆறுதல் அளிக்கும் கதை]. மகிழ்வுடன் பகிர்கிறேன்.
அதிகாலை நேரம், எல்லோரும் வரிசையாக நின்று பால் வாங்கிக் கொண்டிருந்தார்கள். வரிசையில் நின்றுகொண்டிருந்த நாத்திக இராமனும் காசு கொடுத்து, சிறிய கிண்ணத்தில் 100 மி.லி. பால் வாங்கினான்.
வழக்கமாக 500 மி.லி. வீட்டிற்கு வாங்கிச் செல்லும் இராமன் இன்று ஏன் வெறும் 100 மி.லி. மட்டும் வாங்குகிறான் என்று யோசித்த பால்காரன், கூட்டம் அதிகம் இருந்ததால் இராமனிடம் பேச்சுக் கொடுக்காமல் பால் ஊற்றினான்.
நாத்திக இராமன் அந்தப் பாலை வாங்கிக்கொண்டு வரிசையைக் கடந்து, எல்லோரும் பார்க்கும்படியாகப் பாலைத் தரையில் கொட்டிவிட்டு மீண்டும் வரிசையில் நின்றான்.
இரண்டாவது முறையாக வாங்கிய 100 மி.லி. பாலையும் முன்பு போலவே தரையில் கொட்டிவிட்டு வரிசையில் இணைந்தான்.
இவனுடைய செயலைக் கவனித்துவந்த பால்காரன், மூன்றாவது முறையாகப் பால் கேட்டு வரிசையில் வந்த இராமனுக்குப் பால் ஊற்ற மறுத்தான்.
நாத்திக இராமனோ, "எனக்குச் சும்மாவா பால் ஊத்துறே? காசு கொடுக்கிறேனே, ஊத்து" என்றான் கண்டிப்பான குரலில்.
பால்காரன், "நீ விலை கொடுத்துப் பால் வாங்கினாலும் அதைத் தரையில் கொட்டுறே. காசு கொடுத்தாலும் உனக்கு இனிமேல் பால் ஊற்ற மாட்டேன்" எனறான் திட்டவட்டமாக.
பால் வாங்க வந்தவர்கள் இவர்களைச் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.
இராமன் விடாப்பிடியாக, காசைக் கொடுத்து பால் ஊற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருந்தான். நேரம் வீணாவதால் கடுப்பாகிப்போன பால்காரன், இராமனிடம், "இந்தத் தடவை, பால் வாங்கித் தரையில் ஊற்றி வீணாக்க மாட்டேன் என்று உறுதியளித்தால் தருகிறேன்" என்றான்.
நாத்திக இராமன், "அதெல்லாம் முடியாது. நான் காசு கொடுத்து வாங்கிய பாலை என்ன வேண்டுமானாலும் செய்வேன். எல்லோருக்கும் கொடுப்பதைப்போல எனக்கும் காசை வாங்கிக்கொண்டு பேசாமல் பாலை ஊற்று" என்று சொன்னான்.
கூட்டத்திலிருந்த ஒரு பெரியவர், "பாலை இப்படி வீணாக்குறியே, இது நியாயமா?" என்று குரலில் கனிவு பொங்கக் கேட்டார்.
நாத்திக இராமன், "நான் 200 மி.லி. பாலை வீணாக்கிவிட்டேன் என்று பால்காரர் பால் ஊற்ற மாட்டேன்னு சொல்றார். பெரியவர் நீங்களும் மத்தவங்களும் வருத்தப்படுறீங்க" என்று சொன்ன ராமன், அருகிலிருந்த ஓர் ஆளைச் சுட்டிக்காட்டி, "இதோ நிற்கிறாரே இவர், நேற்று அபிசேகம் பண்றதாச் சொல்லி 200 லிட்டர் பாலை வாங்கிட்டுப் போய், சிலை மேல ஊத்தி வீணடிச்சார். இது, இந்தப் பால்காரருக்கும் தெரியும். இவருக்குப் பால் ஊத்த மாட்டேன்னு சொல்லுவாரா?" என்றான்.
"உன்னோட எல்லாம் விவாதம் பண்ணி ஜெயிக்க முடியாது. பாத்திரத்தை நீட்டு" என்று சொல்லிப் பால் ஊற்றி நாத்திக இராமனை அனுப்பி வைத்தார் பால்காரர்.
===============================================================
நன்றி: ச. கந்தசாமி, அருப்புக்கோட்டை. http://periyarpinju.com/2008/200812/page10.php