வியாழன், 19 நவம்பர், 2020

'குமுதம்' போட்டி... 300 ரூபாய்க் கதைக்கு ரூ3,00,000/= லட்சம் பரிசு!!!!!

[குமுதம் ஆசிரியர்]

'சுசீலா'ன்னு 35 வயசு முதிர்கன்னி.
சிங்கப்பூரில் டாக்ஸி ஓட்டிச் சம்பாதிக்கிறாள். வர்ற வருமானம் வீட்டுச் செலவுக்குப் போதுமானதா இல்ல.

அது ஏன்னா, ஓய்வு பெற்று வீட்டோடு இருக்கிற அப்பாவையும், வேலைக்குப் போகாத சீக்காளி அம்மாவையும் இவள்தான் பாதுகாக்கிறாள். அதனாலதான்,  திருமணம் செய்துகொள்ளாமல் 35 வயதாகியும் முதிர்கன்னியாகவே இருக்கிறாள்.

நம்ம ஊர்ல, முதிர்கன்னி ஆனாலும் முழு ஆயுளையும் கன்னியாகவே கழிச்சுட்டு மரணத்தைத் தழுவுற பொண்ணுக இருக்காங்க. சிங்கப்பூர் பொண்ணுங்க எப்படீன்னு தெரியல. தன் கதைக்கு(கிருமி கண்ட காதல்) ரூ3,00,000/= லட்சம் பரிசு வாங்கின 'சித்துராஜ் பொன்ராஜ்' அவர்களைத்தான் கேட்கணும். 

கதையின் கதாநாயகி சுசீலாவால் காம இச்சையைக் கட்டுப்படுத்த இயலாததால், 'அருண்'கிற ஒருத்தரோட உறவு வைச்சிக்கிறாங்க இதைக் கதாசிரியர் அப்பட்டமா எழுதியிருக்கலாம். 'அவனது முதுகின் விசாலமும் தோள்களின் திண்மையும், முன்தினம் அவளைத் தன்[அருண்] தொடையில் அமர வைத்து அவள் மேனி நிறத்தைப் புகழ்ந்ததையும், அவள் விரல்களை அவன் கைக்குள் குவித்துவைத்து ஒவ்வொரு விரலாய் முத்தமிட்டதையும் [சுசீலாவின்]நினைவுக்குக் கொண்டுவந்தன' என்று விவரித்ததன் மூலம் நாசூக்காய் நமக்குப் புரிய வைக்கிறார்.

இவளுடைய இந்தக் கள்ள உறவு[சிங்கப்பூர்வாசிகளின் நாகரிகத்தின்படி இது 'நல்ல' உறவாக இருக்கலாம்] இவளின் வளர்ப்புப் பெற்றோரான[இது குறித்த விளக்கம் அப்புறம்] சண்முகத்துக்கும் புஷ்பம்மாவுக்கும் தெரியாதா என்றால், அப்பாவுக்குத் தெரியாது; அம்மாவுக்குத் தெரியும்.

அம்மா கண்டிக்கலையான்னு கேட்க நினைக்கிறீங்கதானே? 

உங்களின் கேள்விக்கான பதில்:

"கல்யாணமான மனுஷனோட சுத்துறியேடி. மத்தவங்களுக்குத் தெரிஞ்சா நம்ம மூஞ்சியில காறித் துப்ப மாட்டாங்க?" என்று அம்மா கண்டிப்பதாகக் கதாசிரியர் சொல்லியிருக்காருங்க.

அதோடு, அம்மாவின் குணாதிசயம் பற்றிய சுசீலாவின் மதிப்பீட்டையும் சொல்லியிருக்காரு. அது நம்மை அதிர வைக்குதுங்க.,

சுசீலா சொல்கிறாள்: "என்னை[சுசீலாவை] அருணோடு வைத்து அம்மா எங்கேயோ பார்த்திருக்கிறாள்[அருண் கல்யாணம் ஆனவன் என்பது அவள் அம்மாவுக்கு எப்படித் தெரிந்தது?]. 'அப்பாவைப் பத்தித் தெரியும்ல. அவருக்கு நீ இப்படிக் கல்யாணமான ஒருத்தனோட சுத்துறது தெரிஞ்சா கொலை விழும்' என்பதுதான் ரகசியம் பேசுவது போல் கிசுகிசுப்பாய்ப் பேசியதற்கு அம்மா சொன்ன காரணம். ஆனால், அப்பாவுக்குத் தெரியாத ரகசியங்களைத் தெரிந்து வைத்திருப்பதிலும், விஷயத்தை ஜவ்வு இழுப்பது போல் இழுத்து அதைப் பற்றி நீண்ட நெடுநாட்களாய்ப் பேசுவதிலும் அம்மாவுக்கு ஆர்வமும் மகிழ்ச்சியும் அதிகம் என்று சுசீலா சிறிய வயதிலேயே அறிந்து வைத்திருந்தாள்.

அம்மாவைப் பற்றிய சுசீலாவின் இந்த அபிப்ராயத்தைத்தான்[அடிக்கோடிட்டது] நான் அதிர வைப்பதாகக் குறிப்பிட்டேன்.

எவனோ ஒருவனுடனான மகளின்(சுசீலா) கெட்ட சகவாசத்தை[சிங்கப்பூரில் 'நல்ல' சகவாசமோ?!] தன் கணவனிடம்கூடச் சொல்லாமல் ரகசியமாகத் தன் மனதில் பாதுகாத்து மகிழ்ச்சி அடைபவள் 'அம்மா' (புஷ்பம்மா) என்பது எந்த நாட்டு நாகரிகத்தில் சேர்த்தி?

இப்படிப்பட்ட தாய்மார்கள் சிங்கப்பூரில் இருப்பதாகச் சித்துராஜ் பொன்ராஜ் இந்தக் கதையின் மூலமாக உணர்த்துகிறாரா?

இந்தக் கதையை வாசிக்கும் சிங்கப்பூர்வாசிகளின் எதிர்வினை என்னவாக இருக்கும்? யாம் அறியேம் பராபரமே!

சீன இனப் பெண்ணான 'பெய் ஹ்சியன்', ஒரு தீ விபத்தில் பெற்றோரை இழந்தது; குழந்தைப் பேறு இல்லாத சண்முகம் புஷ்பம்மா தம்பதியரால் தத்தெடுத்து, 'சுசீலா' என்று தமிழ்ப் பெயர் சூட்டித் தமிழ்ப் பெண்ணாகவே வளர்த்தது; 16 வயதில் படிப்பு வராததால் 35 வயதில் வாடகைக்கார் ஓட்டுனர் ஆனது என்பன பற்றியெல்லாம் விமர்சனம் செய்ய ஒன்றுமில்லை.

இரு பதின்பருவப் பெண்களுக்குத் தந்தையான அருண், மகள்களுடனும் மனைவியுடனும் சுசீலாவின் டாக்ஸியில் பயணம் செய்ய நேரும்போது, அவளுடனான[சுசீலா] தன் தொடர்பை அவர்கள் அறியாத வகையில் நடந்துகொள்கிறான் என்பது மட்டுமே இந்தக் கதையின் உள்ளடக்கம் ஆகும். குறிப்பிடத்தக்க 'கதை' என்று எதுவுமில்லை.

'சுசீலா அமர்ந்திருந்த வாகனம், நீளமான நாக்கை வெளியே தொங்கப்போட்டு, மடித்து வைத்திருக்கும் பின்னங்கால்களில் உடம்பின் எடையைத் தூக்கிப் போட்டபடி, பாயக் காத்திருக்கும் நாயைப் போல மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது' என்னும் கதையின் தொடக்க வரிகள், 'சூரியன் 'புளிச்' என்று காரின் மீது துப்பியதுபோல் காரின் முன்புறம் கண்ணாடி முழுக்க எதிர் வெயில்' என்பதான வர்ணனை, 'வெமண்மஞ்சள் நிறமாய் அகலமான நெற்றியும், இடது பக்கமாய் வகிடெடுத்துச் சீவிய வாளிப்பான நீண்ட தலைமயிரும், சீராய் ஒதுக்கப்பட்டிருந்த நீண்ட புருவங்களும், வெண்கல நிறத்தில் ஒளிர்ந்த அழகிய நீள்வட்டக் கண்களின் மேல்பாதியும்' என்னும் சுசீலாவின் உருவ அமைப்பு குறித்த பதிவும் என்றிப்படிக் குறிப்பிடத் தக்க சிறப்பம்சங்கள் கதையில் மிக மிக மிகக் குறைவே. [பிரசுரத்துக்கான கதை இது என்று வேண்டுமானால் சொல்லலாம். போட்டி தவிர்க்கப்பட்டிருந்தால், குமுதம் இதற்கு ரூ.300/= மட்டுமே கொடுக்கும்!]

ரூ3,00,000/= பரிசுக் கதைக்கு இவை மட்டுமே போதுமான தகுதியல்ல என்பதைச் சொல்வதற்கு ஒரு சராசரி வாசகன் போதும்; தேர்ந்த ஒரு விமர்சகன் தேவையில்லை.

'கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம்' என்று தொடங்கும் 'குறுந்தொகை'ப் பாடல் ஒரு பரத்தையின் [விலைமகள்] கூற்றாக அமைந்தது.

'என்னைப் புணர வரும்போது என்னைப் புகழ்ந்து பேசுகிறான் தலைவன். தன் தலைவி[மனைவி]யிடமும் இணக்கமாக நடக்கிறான். அவளை அவன் ஏமாற்றுகிறான்(எந்தவொரு உரையாசிரியரும் தெளிவானதொரு விளக்கத்தைத் தரவில்லை)  என்பது தெரியாமல் அவள்[தலைவி] என்னை இழித்துப் பேசுகிறாள்' என்னும் பொருள்பட விலைமகள் தன் தோழியிடம் நக்கலாகக் கூறுவது இதன் உள்ளடக்கம்.

'கதை நாயகி சுசீலா, விலைமகள் அல்ல எனின், கெட்ட நடத்தை உள்ளவளா?  அருணுடனான தொடர்பு, இச்சையைத் தீர்ப்பதற்கு மட்டுமா, பணம் பண்ணுவதற்குமா?' என்னும் கேள்விகளுக்கு இக்கதையில் விடை தேடினால் கிடைக்காது.

மேற்கண்ட குறுந்தொகைப்பாடலின் உள்ளடக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்டதாக நடுவர்களால் ஏற்கப்பட்ட கதை இது. இது ஏற்புடையதுதானா என்பது கொஞ்சம் சிந்தித்தாலே புரியும்.

கேட்க மறந்த ஒரு முக்கியக் கேள்வி:

உடலுறவு சுகத்துக்காக ஏங்கித் தவிக்கிற ஒரு 35 வயசுக்காரியை, 2 பதின்பருவப் பெண்களின் தகப்பனான ஒரு ருசி கண்ட பூனை, தன் தொடையில் உட்கார வைத்துத் தடவுவதற்குப் பெயர் காதலா?!(கதையின் தலைப்பு: கிருமி கண்ட காதல்).

'கிருமி கண்ட காமம்' என்று பெயர் வைத்திருக்கலாம்.

இது. சாதாரணக் கதை அல்ல; கிருமி கண்ட கதை!

===============================================================

குமுதம் ஆசிரியருக்கு,

இந்த விமர்சனத்திற்கு, போட்டிக்கு நான் அனுப்பிய கதை புறக்கணிக்கப்பட்டதால் உண்டான காழ்ப்புணர்ச்சி காரணமல்ல; மிகப் பெரியதொரு போட்டியில் பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த எச்சரிக்கை தேவை என்பதை வலியுறுத்துவது மட்டுமே!

நன்றி.