வழக்கமான வரவேற்பு, அறிமுகங்களுக்குப் பின்னர் ‘பெண் பார்க்கும்’ சடங்கு ஆரம்பமாகியிருந்தது. பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு, ‘குழம்பி’ குடித்து, மணப்பெண் பத்மாவதியைக் காணும் ஆவலுடன் மாப்பிள்ளை வீட்டார் காத்திருந்தார்கள்.
பத்மாவதி ஒரு முதிர்கன்னி; கறுப்பி; வயது முப்பத்தி மூன்று; ஒரு வெல்ல மண்டிக் கணக்குப்பிள்ளையின் மூன்றாவது மகள்; அழகு விசயத்தில் சராசரிக்கும் கீழே. அது இருந்திருந்தால் காதல் கத்தரிக்காய் பண்ணி எவனையாவது தொத்திகொண்டிருப்பாள். ஒரு பெண் என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு கல்யாணச் சந்தையில் விலை போக முடியுமா? பாவம் பத்மாவதி!
முகத்தில் ‘ரெடிமேட்’ புன்னகை தவழ, சற்றே குனிந்த தலையுடன் அனைவரையும் கும்பிட்டுவிட்டு அறையொன்றில் அடைக்கலம் புகுந்தாள் அவள்.
முகத்தில் ‘ரெடிமேட்’ புன்னகை தவழ, சற்றே குனிந்த தலையுடன் அனைவரையும் கும்பிட்டுவிட்டு அறையொன்றில் அடைக்கலம் புகுந்தாள் அவள்.
“மாப்ள, பொண்ணு பிடிச்சிருக்கா?” கேசவனின் காதைக் கடித்தார் அசோகன்; மணமகனின் தாய்மாமன்.
“அதுகிட்டத் தனியாப் பேசிட்டுச் சொல்றேன் மாமா” என்றான் கேசவன்.
அவன் விருப்பத்தை அறிந்த பெண் வீட்டார், பத்மாவதி இருந்த அறைக்குள் அவனை அனுமதித்தார்கள்.
செயற்கைப் புன்னகையுடன் அவனை வரவேற்ற அவள், அவனை ஓர் இருக்கையில் அமரச் சொல்லி, இன்னொன்றில் தானும் அமர்ந்தாள்.
“உன்கூட மனம் திறந்து பேச விரும்பறேன். முதல்ல நான் கொஞ்சம் கேள்விகள் கேட்குறேன். அப்புறம் நீயும் கேளு. வந்து.....நீ யாரையும் காதலிச்......”
“கொஞ்சம் பொறுங்க.....” குறுக்கிட்டாள் பத்மாவதி; சொன்னாள்: “ஏழெட்டு வருசமா அப்பா மாப்பிள்ளை பார்த்துட்டு வர்றார். எனக்கு வயசு முப்பத்தி மூனு. இதுவரைக்கும் ஐம்பது பேரு என்னைப் பெண் பார்த்துட்டாங்க. கேள்வி மேல் கேள்விகள் கேட்டாங்க. நானும் பதில் சொல்லியிருக்கேன். கசப்பான அந்த என் அனுபவங்களை ஒன்னுவிடாம எழுதி வெச்சிருக்கேன். உங்க வீட்டுக்குப் போயி சாவகாசமா படிச்சிப் பாருங்க. மேலே எதுவும் கேட்கத் தோணினா ஃபோன் பண்ணுங்க. பதில் சொல்றேன். என்னைக் கட்டிக்கறீங்களோ இல்லியோ, மறக்காம இதைத் திருப்பிக் கொடுத்துடுங்க. இது விசயம் யாருக்கும் தெரிய வேண்டாம்.” -வறண்ட புன்னகையுடன் ஒரு சிறிய ‘டைரி’யைக் கேசவனிடம் நீட்டினாள்; அவனுக்கு விடை கொடுக்கும் விதத்தில் எழுந்து நின்று கை கூப்பினாள் பத்மாவதி.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக