வியாழன், 19 நவம்பர், 2015

‘ஊரு நல்ல ஊரு’.....புத்தம்புதிய ஒரு பக்கக் கதை!

எச்சரிக்கை! இது முன்னணி இதழ்களால் நிராகரிக்கப்பட்ட கதை. என் எழுத்தை நேசிப்பவர்கள் வாசிக்கலாம்!!

டமாறுதல் ஆணை வந்ததும் புதிய ஊருக்குச் சென்று பணியில் சேர்ந்த சில நாட்களில் ஊர் திரும்பினான் திருமலை.

“ஊர் எப்படிங்க?” கேட்டாள் அவன் மனைவி வெண்ணிலா.

“விசாரிச்சதில் இங்கவிட அங்க வீட்டு வாடகை அதிகம்.”

“அப்புறம்?”

“இங்க ரெண்டு நாளைக்கு ஒரு தடவை குடிநீர் சப்ளை. அங்க நாலஞ்சி நாளைக்கு ஒரு தடவைதான்னு சொன்னாங்க.”

“அப்படியா?” சலித்துக்கொண்டாள் வெண்ணிலா.

“இங்க மாதிரி ஃப்ரெஷ்ஷா காய்கறி கிடைக்காது. சுத்து வட்டாரம் ரொம்ப வறட்சி. விவசாய நிலங்களில் போதுமான விளைச்சல் இல்ல. ஆனாலும்.....”

“சொல்லுங்க.”

“அங்குள்ள ஜனங்க, போக வேண்டிய இடத்துக்கு வழி கேட்டா, பொறுமையா நின்னு வழி சொல்லிட்டுப் போறாங்க. பொருள் வாங்காம நூறுக்கும் ஐநூறுக்கும் சில்லரை கேட்டாலும் கடைக்காரங்க முகம் சுழிக்காம தர்றாங்க. தெருவில் நடக்கும்போது மத்தவங்க வழிவிட்டு ஒதுங்கிப் போறதைப் பார்க்கும்போது மனசுக்குச் சந்தோஷமா இருக்கு. ‘வாங்க போங்க’ன்னு அவங்க பேச்சில் மரியாதை நிறைஞ்சிருக்கு. ஆக மொத்தத்தில், அந்த ஊர் ஜனங்களை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு” என்றான் திருமலை.

“வசதிகள் கூடக்குறைய இருந்துட்டாலும் பரவாயில்ல. ஜனங்க நல்ல மாதிரி இருந்தா அது போதும்” என்றாள் வெண்ணிலா, முகத்தில் திருப்தி பரவ.
=============================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக