திங்கள், 16 நவம்பர், 2015

மணமாகாமல் விதவைக்கோலம் பூண்ட ஒரு பிரபல நடிகை & பாடகி!

#நான்  கட்டிலில் படுத்திருந்தேன். “ராஜா மாதிரி ஒருத்தர் உன்னைப் பார்க்க வந்திருக்கிறார்” என்று என் தாய் என்னிடம் வந்து சொன்னார். நான் எழுந்திருந்து முகத்தைச் சுத்தம் செய்துகொள்ளுமுன்னமே ‘அவர்’ என் கட்டிலில் வந்து அமர்ந்துகொண்டார்.

நான் பிரமித்துப்போனேன். கூச்சநாச்சம் இல்லாமல் என் கட்டிலில் அவர் உட்காரலாமா என்று எண்ணினேன். அவரோ என் தவிப்பைக் கண்டுகொள்ளாமல் பேச ஆரம்பித்தார். அவர் பேசப் பேச.....

‘அடடா... என்ன கம்பீரத் தோற்றம்! எப்பேர்ப்பட்ட காந்தக் குரல்!’ இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ எண்ணி எண்ணி மனம் கிறங்கினேன். என் கந்தர்வன் என்னைத் தேடி வந்துவிட்டதாகவே நான் நம்பினேன்.

[நாடகத்தில் என்னோடு நடிப்பதற்காக இலங்கைக்கு வரவழைக்கப்பட்டிருந்த] அவர், “மேடை ஏறுவதற்கு முன்னால் ஒத்திகை பார்க்க வேண்டும்” என்றார். 

“வேண்டாம்” என்றேன்.

“என் பாட்டு அலாதியானது என்பது எல்லோருக்கும் தெரியும். உன்னால் ஈடுகொடுக்க முடியுமா?” என்றார்

“சமாளிப்பேன்.” - நான்.

“தோற்றுவிடுவாய்.” - அவர்.

“தோற்பது யார் என்பது நாடகம் முடியும்போது தெரியும்” என்றேன் சிதறாத புன்னகையுடன்.

உரையாடல் முடிந்த பின்னரும் அவர் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். நானும் அவரின் அழகிய வதனத்தைப் பார்வையால் விழுங்கிக்கொண்டே இருந்தேன்............

எங்களை இன்பத்தில் ஆழ்த்திய இந்தச் சம்பவம் எங்களின் முதல் சந்திப்பில்[இலங்கையில்] நடந்தது. அன்றுமுதல் அவர் மறையும்வரை நாங்கள் பிரியவேயில்லை.

அவர் மறைந்ததும் நான் விதவைக்கோலம் பூண்டேன்#

இப்படிச் சொன்னவர்..........
‘கொடுமுடி கோகிலம்[கோகிலம் - குயில், கிளி] என்றழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள்.

“கல்யாணம் ஆகாமலே விதவைக்கோலம் பூணலாமா?” - வைதிகர்கள் இப்படிக் கேட்டார்கள்: கொதித்தார்கள்; நகைத்தார்கள். இவைபற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைகொள்ளவில்லை சுந்தராம்பாள்.

கிட்டப்பாவை, “என் ஆத்துக்காரர்” என்று அழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவர், கிட்டப்பா இறந்த செய்தி அறிந்ததும், ரூபாய் 18000 எடுத்துக்கொண்டு புறப்பட்டார்; அவர் வைத்துவிட்டுப்போன கடன்களைக் கட்டினார். தன் ஆத்துக்காரர் ‘கடனாளி’யாகச் செத்துப்போனார் என்று பழிக்கப்படுவதை விரும்பாத அந்தக் கொடுமுடிக் குயில்.

காலஞ்சென்ற[அக்டோபர்,1980] கே.பி.சுந்தராம்பாள் ஓர் அபூர்வப் பாடகி மட்டுமல்ல; ஓர் அதிசயப் பெண்மணியும்கூட!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உதவிய நூல்: ‘வ.ரா.’வின் ‘தமிழ்ப் பெரியார்கள்’[மே, 2015], விகடன் பிரசுரம். விகடனுக்கு நன்றி.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக