//உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையானை வாழ்வில் ஒருமுறையேனும் அருகிலிருந்து தரிசிக்கும் ஆசை எல்லோருக்கும்[3 முதல் 30 மணி நேரம் காத்துக் கிடந்தும்கூட சில நொடிகள் மட்டுமே அவரைத் தரிசிக்க முடிகிறது. இதற்குப் பணக்காரர்களும் நாட்டை ஆளுவோரும் விதிவிலக்கு] உண்டு.
இது நேற்றுவரை சாத்தியப்பாடாமலிருந்தது.
இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது திருப்பதி தேவஸ்தானம், ‘திருமலை ஆர்ஜித் சேவா’ என்னும் திட்டத்தின் மூலம்.
வெறும் ரூ.120 செலுத்தி[புக் செய்து] சிரமம் எதுவும் இல்லாமல் திருப்பதிப் பெருமாளை ஓர் அடி தூரத்தில் நின்று தரிசனம் செய்யலாம்; நின்று நிதானமாகச் சுவாமி கும்பிட்டுவிட்டு வெளியே வரலாம். யாரும் 'ஜருகண்டி ஜருகண்டி' என்று சொல்லமாட்டார்கள்//. இது, https://tamil.nativeplanet.com/ செய்தி.
ஓரடியோ ஒன்பது அடியோ இடைவெளி ஒருபுறம் இருக்கட்டும், ஒட்டுமொத்த ஏழுமலையானின் உடம்பையும் அபிரித ஆடை அணி அலங்காரங்கள் மூலம் மூடியிருக்கிறார்கள்.
காதுகள் கண்களில் படவில்லை. மூக்கையும் அரை நெற்றியையும், பாதி பாதிக் கண்களையும் நாமம் தீட்டி மறைத்திருக்கிறார்கள்[கேள்வி கேட்டால, புரியாத தத்துவார்த்தமான பதிலைத் தருவார்கள்; அல்லது, தகாத வார்த்தைகளால் திட்டுவார்கள்].
ஏழுமலைக் கடவுளின் இயல்பான தோற்றத்தை எவரேனும் கண்டு மனம் பூரித்ததுண்டா?
“இல்லை” என்பதே மனசாட்சியுள்ள எவரொருவரின் பதிலாக இருக்கமுடியும்.
அப்புறம் எதற்கு மணிக்கணக்கில் கால்கடுக்க வரிசையில் நின்றும், கட்டுக்கட்டாய்ப் பணத்தைக் கட்டணமாகச் செலுத்தியும் பக்தர்கள் திருப்பதியானைத் தரிசிக்கிறார்கள்?!
ஆடை அணிகலன்களையும் வரையப்பட்ட பட்டை நாமத்தையும்[திருநாமம்] பார்த்துவிட்டு, ஏழுமலையானையே தரிசித்ததாகத் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் இந்தப் பக்தர்களின் பித்தம் தெளிவது எப்போது?
சாமிகள்[ஜக்கி வாசுதேவ், ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர், பாபா ராம்தேவ் போன்ற ஆசாமிகளும்தான்] சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என்றால் ஆட்சிபீடத்தில் அமர்ந்து கோலோச்சுபவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதாலும், நீதிமன்றங்களும் தலையிடா என்பதாலும் ஆண்டுகள் பலவாயினும் இவர்கள் திருந்தமாட்டார்கள்; திருத்துவாரும் இல்லை.
திருப்பதி ஏழுமலையான் பெயரால் மேற்கண்டது போன்ற மூடநம்பிக்கை வளர்ப்பு தொடருமெனின், ஒரு காலக்கட்டத்தில்.....
ரூ 120 என்ன, ரூ1200என்ன, ரூ1,20,000 போல் கட்டணங்கள் பெற்றுக்கொண்டு ஏழுமலையானைக் கட்டியணைத்துப் பேரானந்தத்தில் திளைத்திட திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களை அனுமதிக்குமா?
இது நாம் மனப்பூர்வமாய் எழுப்பும் கேள்வி[எடக்குமடக்காகக் கேள்விகள் கேட்டு, பதிவுக்கான ‘பார்வை’ எண்ணிக்கையை அதிகரிப்பது நம் விருப்பம் அல்ல].
புகார், வழக்கு போன்றவற்றைத் தவிர்த்து அவர்கள் மனப்பூர்வமாய் தரும் பதிலை எதிர்பார்க்கலாமா?