அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 10 ஏப்ரல், 2024

'ஞான நோய்' மருத்துவர் ஜக்கி வாசுதேவ்!!![கதை > சிரிக்கவும் சிந்திக்கவும்]

னநல மருத்துவர் மாசிலாமணியிடம் சிகிச்சை பெறக் காத்திருந்தவர்களில் ஆரோக்கியசாமியும் ஒருவர்.

தனக்கான முறை வந்ததும் மருத்துவர் அறைக்குள் சென்று அவர் சுட்டிக்காட்டிய இருக்கையில் அமர்ந்தார் சாமி.

“சொல்லுங்க, என்ன பிரச்சினை?” என்றார் டாக்டர்.

சுற்றி வளைக்காமல் நேரடியாக விசயத்துக்கு வந்தார் நம்மவர்.

“போன மாசம் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கப் போனேன். தரிசனம் முடிந்து ஊர் திரும்பும்போது, என் உள் மனசு ஒரு கேள்வி கேட்டுது... ” -சொல்லி நிறுத்தி மருத்துவரின் முகம் பார்த்தார் சாமி.

“முழுசும் சொல்லி முடிங்க” -மருத்துவர்.

“உனக்கு வயசு எழுபது ஆகுது. சாகறதுக்குள்ளே இன்னும் எத்தனை தடவை திருப்பதி வருவேன்னு என் உள் மனசு கேள்வி கேட்டுது.”

“இதுல என்ன பிரச்சினை உங்களுக்கு?”

“பிரச்சினையே இங்கதான் ஆரம்பிச்சுது டாக்டர். இது மாதிரி கேள்வியை அடிக்கடி அது கேட்குது.”

“புரியும்படி சொல்லுங்க.”

“கடைக்குப் போய் முடி வெட்டிக்கும்போது, உன் ஆயுசுக்குள்ள இன்னும் எத்தனை வாட்டி முடி வெட்டிக்க வருவேன்னு அது கேட்குது. செட்டிநாடு ஓட்டலில் பிரியாணி சாப்பிடும்போதும் இதே கேள்விதான். குளிக்கும்போதும் சரி, பெண்டாட்டியோடு சண்டைபோடும்போதும் சரி, தலைக்கு ‘டை’ அடிக்கும்போது சரி, வேறே எதைச் செய்யும்போதும் குறுக்கிட்டு ‘இதை இன்னும் எத்தனை தடவை செய்வேன்னு கேட்டுக் கேட்டு என்னைப் பயமுறுத்துதுங்க. உங்களைப் பார்க்க வரும்போதுகூட, இனிமேலும் எத்தனை முறை இந்தப் பைத்திய டாக்டரைப் பார்க்க வருவேன்னு கேட்டுதுங்க” -குரல் தழுதழுக்கச் சொன்னார் ஆரோக்கியசாமி.

“உங்களுக்குள்ள பிரச்சினை புரியுது. இது மன நோயல்ல. என்னிடம் நீங்க வந்திருக்கக் கூடாது” -மருத்துவர் உறுதிபடச் சொன்னார்.

“வேறு எங்கே போறது?”

“இது ஒருவித ஞான நோய். ஞானிகளால்தான் இந்த நோயைக் குணப்படுத்த முடியும். ஈஷா யோகா மையம் பக்கத்தில்தானே இருக்கு. ஆதி ஞானி ஜக்கி வாசுதேவைப் போய்ப் பாருங்க” என்றார் மாசிலாமணி.

“அவர் பேசுறது எதுவுமே புரியுறது இல்லேன்னு சொல்லுறாங்களே?”

“புரியலேன்னாலும் இடைவிடாம அவர் போதனைகளைக் கேட்டீங்கன்னா அரைப் பைத்தியம் ஆயிடுவீங்க. அப்புறம் உங்க உள்மனசு இப்படிக் கேள்வி கேட்டுக் குடைச்சல் கொடுக்காது. போய்வாங்க, சாரி... போங்க” என்று தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று[“உங்க ஆயுளில் இன்னும் எத்தனை நோயாளிகளைப் பார்ப்பீங்க?” என்று கேட்ட உள்மனதை “அடச்சீ, சும்மா இரு” என்று கடிந்துகொண்டே] கைகூப்பினார் மனநல மருத்துவர் மாசிலாமணி.