கோரமான கோரமண்டல் ரயில் விபத்தும் அதனால் மக்கள் அடைந்த பெரும் துயரங்களும் ஆண்டுகள் பல கடந்தாலும் நம் நெஞ்சைவிட்டு அகலாதவை. மிகு துன்பம் சூழ்ந்த இந்தச் சூழலில்.....
சற்று முன்னர் ‘யூடியூப்’இல் வெளியாகியிருந்த ஒரு காணொலி, மனதைக் கவ்விக் கிடந்த கவலையைப் போக்கிச் சற்று நேரம் மெய் சிலிர்த்து ஆனந்தப் பரவசத்தில் ஆழ்ந்திடச் செய்தது.
விபத்தில் உயிர் பிழைத்த ஓர் அம்மாவும் மகனும் அளித்த இந்தக் காணொலிப் பேட்டியில், ஏசுநாதரை, “ஏசுவே” என்று கூவி அழைத்தவுடன் சாய்ந்த நிலையிலிருந்த அந்தவொரு ரயில் பெட்டி, கவிழ்ந்துவிடாமல் அப்படியே நின்றுவிட்டதாம்.
இது நம்மை விவரிக்க இயலாத இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
சாய்ந்து நின்ற பெட்டியைக் கவிழாமல் நிறுத்திய ஏசுவின் கருணையால், விபத்தில் சிக்கிச் சாகவிருந்த பல பயணிகள் உயிர் பிழைத்திருப்பார்கள் என்பது உறுதி. அது குறித்து விசாரித்தறிந்து, பிழைத்தவர்களுக்கான பட்டியலை இவர்கள் வெளியிட்டிருந்தால் ஏசுவின் புகழ் மக்களிடையே வெகுவாகப் பரவியிருக்கும்.
தாயும், வளர்ந்த சேயும் அதைச் செய்திடத் தவறிவிட்டார்கள்.
இவர்கள் ரயில் ஏறிப் பயணத்தைத் தொடங்கும்போதே, ஏசுவை நினைந்து பிரார்த்தனை செய்திருந்தால் கோரமண்டல் ரயில் விபத்தே நிகழ்ந்திருக்காது.
எது எப்படியோ, இவர்கள் இருவரும், இனி ஒருபோதும் ரயில் விபத்துகளே[மற்ற விபத்துகளும்தான்] நிகழாதிருக்க வழிகாட்டியிருக்கிறார்கள்.
இனி எங்கும் எப்போதும் விபத்துகளே ஏற்படாமலிருப்பதற்கான அந்த ஆகச் சிறந்த வழி.....
மக்கள் அனைவரும் தமக்கான பயணத்தைத் தொடங்கும்போதே ஏசுவின் நாமத்தைப் பயபக்தியுடன் உச்சரிப்பதே.
அனைவரும் ஏசுவை நினைமின்! கர்த்தரைப் போற்றுமின்!!