மனித இனம் எப்போது தோன்றியது என்பது குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. வாலில்லா மனிதக் குரங்குகள் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின என்றும் பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் பெரிய மூளையையும், கூர்மையான கண்களையும், வலிமையான கைகளையும் கொண்ட ஆதி மனிதன் தோன்றினான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
ஆக, பத்து லட்சம் ஆண்டுகள் போல மனித இனம் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால், அவதாரமாகட்டும், மகானாகட்டும், ஜகத்குருவாகட்டும், சத்குருவாகட்டும் எந்தவொரு தனி மனிதனும் இருந்துகொண்டிருந்ததில்லை; இருக்கப்போவதுமில்லை. அவனுக்கு வாய்த்திருப்பது அற்ப ஆயுள் மட்டுமே.
பல லட்சம் ஆண்டுகளாக இருந்துகொண்டிருக்கும் மனித இனம் இன்னும் மிகப் பல பல பல லட்சம் ஆண்டுகளுக்கு இருந்துகொண்டே இருக்கக்கூடும். இதை எண்ணி உயிரோடு இருப்பவர்கள் பெருமைப்பட்டுக்கொள்வது ஒருவித மயக்கம் என்றே சொல்லலாம்.
பெருமைப்பட்டுக்கொள்கிற எவரும் தன் இனம் இருக்கும்வரை இருக்கப்போவதில்லை என்பதை மறந்துவிடுகிறார்கள்.
ஆகையினால்,
அடுத்த நூற்றாண்டிலோ, மில்லியன், ட்ரில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகோ உலகம் அழியப்போகிறது என்று ஆதாரபூர்வமாக அறிவியலாளர்கள் அறிவித்தாலும் கவலைப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.
ஆதி மனிதன் தோன்றுவதற்கு முற்பட்ட காலங்களில்[கணக்கிடப்படவில்லை; கணக்கிடவும் இயலாது] மனித இனமே இல்லாமலிருந்ததை எண்ணிக் கவலைப்படுகிறோமா?
என்றோ ஒரு காலக்கட்டத்தில் இந்த உலகமே அழியும்போது மனித இனமும் அழிந்துபோகுமே என்பதை நினைத்தோ, அப்புறம் எப்போது தோன்றும் என்பது புரியாததால், புரியாமையை நினைத்தோ கவலைப்படுவோமா? அது அறிவுடைமை ஆகுமா?
ஓருவேளை விஞ்ஞானிகளாலும் அனுமானிக்க முடியாத வகையில், பலகோடி இடிமுழக்கங்கள் ஒருங்கிணைந்தாற்போல அதிரடியாய் ஒரு பெரும் பேரோசை எழ, உலகம் சுக்கு நூறாய்ச் சிதறுமேயானால், அப்போதும்கூட, வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகப் போவதில்லை. ஏனென்றால், துன்பத்தை உணருவதற்கான அவகாசமே அவர்களுக்கு இருக்கப்போவதில்லை. அதிர்ச்சிக்கிடையே அதை உணரவும் இயலாது.
அடுத்த சில ஆண்டுகளில் 100% உலகின் அழிவு நிச்சயம் என்பதைப் புதிய அறிவியல் சாதனங்களின் மூலம் அறிவது சாத்தியம் என்றால் மட்டுமே, குடுகுடு கிழங்களையும் , இப்போதோ இன்னும் சற்று நேரத்திலோ மரணிப்பது உறுதி என்னும் நிலையில் உள்ள நோயாளிகளையும் தவிர, இளவட்டங்களும், நடுத்தர வர்க்கமும் சாவை எண்ணிக் கலங்கிப் புலம்பி நடைப்பிணங்களாய் இருந்துகொண்டிருப்பார்கள் என்று சொல்லலாம். மற்றபடி.....
அடுத்த அமாவாசைக்கு அழியும்; அடுத்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெடித்துச் சிதறும் என்றெல்லாம் ஜோதிடர்கள் சொல்வதாகப் பீதி கிளப்பும் ஊடகச் செய்திகளை எவரும் பொருட்படுத்தத் தேவையில்லை.
கவலப்படவும் தேவையில்லை..... தான் 'சாகப்போவது ஒரே ஒரு முறைதான். அப்புறம் வாழ்வும் இல்லை, சாவும் இல்லை' என்பதை ஒவ்வொரு தனி மனிதனும் மறவாமல் இருக்கும்வரை!
==========================================================================
***பொறுமையுடன் வாசித்தமைக்கும், வாசித்த பின்னரும் என்னை ஏசாமல் அமைதி காத்தமைக்கும் என் நன்றிகள்! ஹி... ஹி... ஹி!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக