சனி, 18 ஏப்ரல், 2026

வாசல்தோறும் ‘விசில்’ கோலம்! இல்லம்தோறும் ஒலிக்கும் அதிரடி விசில் ஓசை!!

நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற தவெக தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், "தேர்தல் நெருங்கிவிட்டது. என் அன்புக்குரிய அம்மாக்கள், அக்காக்கள், தங்கைகள் அனைவரும் உங்கள் வீட்டு வாசலில் நமது ‘விசில்' சின்னத்தைக் கோலமாக இடுங்கள். அது நீங்கள் எனக்குக் கொடுக்கும் மிகப்பெரிய ஆதரவாக இருக்கும்" என வேண்டுகோள் விடுத்தார்.*

தலைவனின் அன்பு வேண்டுகோளின்படி, வீடு தவறாமல்[தமிழ்நாடு முழுவதும்] பெண்கள் தத்தம் வாசல்களில் ‘விசில்’ சின்னம் வரைவார்கள் என்பது உறுதி.

ஆண்கள்?

பெண்கள் கோலம் வரையும் கண்கவர் காட்சியை வெறுமனே வேடிக்கை பார்க்காமல், ஆண்கள் அத்தனைப்பேரும் தமிழினத் தானைத் தலைவன் தந்த விசிலைத் ‘தம்’ பிடித்து ஊத வேண்டும், கோலம் வரைந்து முடிக்கும்வரை.

விசில் வரைவதற்கும், அதை ஊதுவதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை[மிகச் சரியாகக் காலை 6 அல்லது 7 மணி] நிர்ணயித்தால், அந்த நேரத்தில் ஆண்கள் ஊதும் விசில் சத்தத்தால் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் அதிரும். “விசிலுக்கே நம் ஓட்டு” என்று அத்தனை வாக்காளர்களும் சபதம் ஏற்பார்கள்.

விசில் கோலங்களை எதிரிகள் அழித்துவிடாமல் தடுக்கவும், விசில் பெறாதவர்களுக்கு அதை வழங்கவும் ஆங்காங்கே தொண்டர் படை அமைத்திடத் தலைவன் ஆவன செய்தல் வேண்டும்.

அதிரடிப் புரட்சித் தலைவன் விஜய் வாழ்க! வெல்க!!

* * * * *

*https://www.hindutamil.in/news/tamilnadu/tvk-whistle-art-trending