ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

அடங்காத ‘அந்த’ ஆசையும் அச்சுறுத்தல் இல்லாத பிறவும்!

‘ஆசைகள் பலவிதம்’ என்பது சொல்லித் தெரிவதில்லை.

கடற்கரையில்[இருந்தால்] காற்றுவாங்கிக்கொண்டு ஐஸ்கிரீம் சுவைப்பது, பூங்காவில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தவாறு கடலை மிட்டாய் தின்பது; ஓசியில் தேனீரோ குழம்பியோ குடிப்பது போன்றவை குட்டிக் குட்டி ஆசைகள்.

எப்போதும் சாத்தியமே இல்லை என்பது தெரிந்திருந்தும் ‘அது’ விசயத்தில் நிறைவேறாத ஆசைகளை நெஞ்சில் சுமந்து திரிவது பேராசை; ஆபத்து விளைவிக்கும் ஆசையும்கூட.

இடைப்பட்ட ஆசைகள் பல உள்ளன.

வியாபாரம் செய்து சம்பாதிப்பது; படித்துப் பல பட்டங்கள் பெற்று உயர் பதவிக்குப் போவது; அரசியலில் கால்பதித்து ஒரு கட்சிக்குத் தலைவாகிப் அலப்பறை பண்ணுவது; போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி மேல் வெற்றி பெற்றுப் பெரும் புகழ் ஈட்டுவது; களிப்பூட்டும் கலைகளோ, அறிவியலோ, தொழில்நுட்பமோ ஏதேனுமொரு அத்தியாவசியத் துறையில் சாதனைகள் நிகழ்த்திப் பாராட்டுப் பெறுவது  போன்றவை அவற்றில் சில.

செய்யும் வணிகத்தில் இழப்பு ஏற்பட்டால் ஏற்றம் பெறும் நாளும் வரும் என்னும் எதிர்பார்ப்புடன் இழப்புகளால் ஏற்படும் துயரத்தைத் தாங்கிக்கொள்ளலாம்.

படித்து உயர் பதவிகள் பெற இயலாதபோது, பெற்றது போதும் என்று ஆறுதல் பெறுவது சாத்தியம்.

அரசியலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கவில்லை என்றால், “இது அயோக்கியர்களின் புகலிடம். நமக்கு ஒத்துவராது” என்று ஒதுங்கிவிடலாம்.

சாதனைகள் நிகழ்த்துவதில் தொய்வு ஏற்பட்டால், இறுதி மூச்சுவரை முயல்வேன்; சாதிப்பேன்” என்று சபதம் மேற்கொள்ளலாம்.

இன்ன பிறவற்றிலும் எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டால், ஏதேனும் ஒரு வகையில் சோர்ந்துவிட்ட மனதுக்குத் தெம்பூட்டலாம்.

ஆனால்,

‘அது’ விசயத்தில் அடுத்தடுத்தடுத்துப் படு தோல்விகளை எதிர்கொண்ட நிலையிலும், “அடைந்தே தீருவேன்” என்று பிடிவாதம் பிடிப்பது அறிவீனம்; பெரும் கேடுகளுக்கு வழிவகுப்பதும் ஆகும்.

’சனியன்’ஐ மிச்சம் மீதியில்லாமல் கைகழுவிவிட்டு, பிற ஆசைகளை நிறைவேற்றுவதில் தீவிரக் கவனம் செலுத்துவதே புத்திசாலித்தனம்; அமைதியான வாழ்வுக்கு இதுவே அடித்தளம் ஆகும்.