'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Monday, February 6, 2017

ரமண மகரிஷியும் நம்ம ஊர் நம்பர் 1 ஆன்மிகவாதியும்!

"நான் யார்?”...சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் யாவரும் தமக்குத்தாமே கேட்டுக்கொண்ட கேள்வி இது; இன்றளவும் கேட்கப்படுவதும்கூட. விடை மட்டும் கிடைத்தபாடில்லை. 
சென்னையில் நடந்த[’தி இந்து’, 05.02.2017], ‘தெய்வீகக் காதல்’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில்.....

மனிதப் பிறவி கிடைத்தற்கரியது. மனிதராகப் பிறந்த நாம் அனைவரும் பணம், புகழ், குடும்பம், ஆசை என்று ஒரு குறுகிய வட்டத்தில் முடங்கிவிடுகிறோம்.

ஆனால், இங்கே வந்திருப்பவர்கள் அனைவரும் புண்ணியவான்கள். நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? இறந்த பிறகு எங்கு செல்வேன்? ஆத்மா என்பது என்ன? என்பன போன்ற ஆன்மிகத் தேடலில் இறங்கியவர்கள். அக்கேள்விகளுக்கான விடை சொல்லும் குருவையும் பெற்றவர்கள். மிகப் பெரிய நடிகர், சூப்பர் ஸ்டார் என்பவற்றைவிட நான் ஒரு ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். ஏனெனில், ஆன்மிகத்துக்கு அவ்வளவு பவர் உள்ளது. பவர் எனக்குப் பிடித்தமானது..... என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், “ஆன்மிகத்தில் என் முதல் குரு என் அண்னன் சத்தியநாரயணா. அவர்தான் என்னை ராமகிருஷ்ண ஆசிரமத்தில் சேர்த்துவிட்டார். ராமகிருஷ்ண பரமஹம்சர் என் இரண்டாவது குரு. அவரிடம் ஒழுக்கத்தையும் சம்பிரதாயங்களையும் கற்றேன். ராகவேந்திரர் என் மூன்றாவது குரு. அவரிடம் பக்தியையும் சடங்குகளையும் கற்றேன்” என்கிறார்.

இரண்டு ஆன்மிகக் கதைகளையும் சொல்லியிருக்கிறார்.

இவை அனைத்திற்கும் மேலாக, “என் மூன்றாவது குருவான ரமண மகரிஷியிடம் ‘நான் யார்?’ என்பதையும் அறிந்துகொண்டேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் [இந்த ‘நான்’ ஐ அறிந்திருப்பதாக ஏற்கனவே மகான்கள் எனப்படுபவர்கள் சொல்லியிருக்கிறார்கள்].

நான்...ஆத்மா...உயிர் எனப்படும் இவையெல்லாம் வெவ்வேறானவையா, ஒன்றா? வெவ்வேறு எனின் அவற்றுக்குள் உள்ள வேறுபாடுகள் எவை எவை? எல்லாம் ஒன்றெனின், அந்த ஒன்று உடம்புக்குள் எங்கு ஒளிந்திருக்கிறது? உடம்பு அழிந்த பின்னர் அதிலிருந்து வெளியேறுகிறதா? அப்புறம் அது என்ன ஆகிறது?...இப்படி இன்னும் எத்தனையோ கேள்விகள் உள்ளன. அத்தனைக்கும் விடை சொன்னவர் எவருமில்லை. தருகிற விடைகளிலும்  தெளிவில்லை.

இந்நிலையில், ரமண  மகரிஷி மூலம் ‘தான்[நான்] யார்?’ என்பதைப் புரிந்துகொண்டுவிட்டதாகச் சொல்லியிருக்கிறார் ரஜினி. அவர் தன் உரையில், ‘நான் யார்?’....., ‘ஆத்மா என்பது என்ன?’ என்று குறிப்பிடுவதன்  மூலம், இரண்டும் ஒன்றல்ல என்று  நினைப்பது புரிகிறது.

இரண்டும் ஒன்றா வேறா என்னும் கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ‘நான்’ என்பதற்கு மட்டுமேனும் ரஜினி விளக்கம் தர இயலுமா? நிச்சயமாக இல்லை.

இனியேனும் ஆன்மிகத்தின் பெயரால் கண்ட கண்ட பொய்களை அள்ளித் தெளித்து மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்க வேண்டாம் என அன்புடன் வேண்டுகிறோம்.
*********************************************************************************************
ஏற்கனவே வெளியான ‘ரஜினி யார்?’ என்னும் பதிவு தமிழ்மணத்தில் உரிய முறையில் இணைக்கப்படாததால், தலைப்பு மாற்றப்பட்டு மீண்டும் தமிழ்ணத்தில் இணைக்கப்பட்டது.

ஏற்கனவே வாசித்தவர்கள் என்னை மன்னித்திடுக.4 comments :

 1. இவர்கள் எல்லாருமே மக்களைக் குழப்பி அதன் மூலம் பயனடைய நினைப்பவர்கள்தான் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

   நன்றி குமார்.

   Delete
 2. இவர்கள் ஆன்மிகம், தியானம் என்றெல்லாம் நன்றாக அடித்துவிடுவார்கள், தங்களுக்கு நோய்வந்தால் புத்திசாலிதனமாக டாக்டரிடம் மலேசியா சென்றாவது சிகிச்சை பெற்று கொள்வார்கள்.

  ReplyDelete
 3. “செத்தபிறகு என்ன ஆவோம்?” என்று பக்தர் ஒருவர் கேட்டபோது, செத்த பிறகுதானே தெரியும்” என்றார் ஒரு பிரபல ஆன்மிகவாதி!

  ReplyDelete