அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 20 மே, 2020

‘அது’, வேறெதுவைவிடவும் மேலானது!!

“பரமு” -அப்பா அழைத்தார்.

அவர் படுத்திருந்த அறையை நான் அடைந்தபோது மிகவும் சிரமப்பட்டு எழுந்து உட்கார முயன்றுகொண்டிருந்தார். அவரின் தோள்கள் பற்றித் தூக்கி அமர வைத்தேன். ரொம்பவே வயதாகிவிட்டது. பெரும்பாலான நேரம் படுக்கையில்தான் கழிந்தது. பொழுதுபோக்குக்குத் தொலைக்காட்சி மட்டுமே.

“சொல்லுங்கப்பா, எதுவும் வேணுமா?”

“எதுவும் வேண்டாம். நீ எனக்கு ஒரு காரியம் செய்யணும்.”

“சொல்லுங்க.”

“என் பெட்டியில் கொஞ்சம் ரூபாய் இருக்கு. அதில் ஒரு ஆயிரம் ரூபாய் எடுத்து வா.”

எடுத்துவந்து நீட்டினேன். 

“உன்கிட்டயே இருக்கட்டும். இப்போ ஊரடங்கு நீடிக்கிறதால எதுத்த வீட்டுச் செந்தில் வீட்டுலதான் இருப்பான். அவன்கிட்டே இதைக் குடுத்து நம்ம ஊர் அம்மன் கோயில் உண்டியலில் போட்டுடச் சொல்லு.”
“அவன் எதுக்கு? நானே போறேன்.”

“வேண்டாம்ப்பா. உன் அக்கா புருசனுக்குக் கொரோனா வந்துது இல்லியா? அரசாங்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை குடுத்தாங்க. நானும் மனசு கேட்காம, நோய் குணமாயிட்டா ஆயிரம் ரூபா உண்டியலில் போடுறதா அம்மனை நேர்ந்துகிட்டேன். அவர் குணமடைஞ்சிட்டார். நேர்ந்துகிட்டதுக்குத்தான் இந்த ஆயிரம் ரூபா.”

“போட்டுடுறேன்பா.” - பணத்துடன் நகர முற்பட்டேன்.

“கொஞ்சம் இருப்பா.” -அப்பாவின் குரல் என்னைத் தேக்கியது. சொன்னார்: “சாமி, சடங்கு, நேர்த்திக்கடன்னு இது மாதிரி விசயங்களில் நம்பிக்கை இல்லாதவன் நீ. செந்தில்கிட்டே குடுத்துப் போடச் சொல்லுப்பா.” 

“இதை நான் எனக்காகச் செய்யல. உங்க மகன்கிற முறையில் செய்யுறேன். இது ஒன்னும் தப்பில்ல. ஒரு மகன் தந்தைக்குச் செய்யுற உதவி. இது உதவி மட்டும்தான்பா” என்று சொல்லிக் கோயிலை நோக்கி நகர்ந்தேன்.

பணத்தை உண்டியலில் சேர்த்துவிட்டுத் திரும்பியபோது, “ஊருக்குத்தான் உபதேசமா?” என்று கேட்டு, எள்ளல் கலந்த புன்னகையுடன் என் எதிரில் நின்றுகொண்டிருந்தான் என் ஒத்த வயதினனும், உடன் பயின்றவனும், அதி தீவிரக் கடவுள் பக்தனுமான அருணகிரி.

நான் உண்டியலில் பணம் செலுத்த வந்ததற்கான காரணத்தைச் சொன்னேன். என் தந்தையின் உடல்நிலை பற்றி அவனுக்குத் தெரியுமாதலால், “சரிதான்” என்பதாகத் தலையசைத்துவிட்டு, “என்ன இருந்தாலும், நீ செய்தது உன் கொள்கைக்கு எதிரானதுதான். இதெல்லாம் மூடநம்பிக்கைதான்னு உன் அப்பாவுக்குப் புரிய வைக்க நீ முயற்சி பண்ணியிருக்கணும்” என்றான்.

“நான் கல்லூரியில் சேர்ந்து படிச்சபோதிருந்தே அவர்கிட்டே இதைப் பத்திப் பல தடவை விவாதிச்சிருக்கேன். ஒரு தடவைகூட அவர் ஜெயிச்சதில்ல. ஒரு கட்டத்தில், ‘உன் பேச்சில் நியாயம் இருக்குங்கிறதை என்னால் புரிஞ்சிக்க முடியுது. ஆனாலும், பரம்பரையாக் கடைபிடிக்கிற மூடப்பழக்கங்களிலிருந்து என்னால முழுசா விடுபட முடியாதுப்பா. எஞ்சியிருக்கிற கொஞ்ச ஆயுசையும் இப்படியே கழிச்சுடுறேன். தயவு பண்ணி இனியும் இது விசயத்தில் நீ தலையிடாதே’ன்னு சொல்லிட்டார். நானும் சரின்னு சொல்லிட்டேன். அதுக்கப்புறம், அவரும் என் நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் நடந்துகிட்டதில்லை. இப்போதுகூட, எதிர் வீட்டுச் செந்தில்கிட்டதான் இந்தப் பணத்தைக் கொடுத்துப் போடச் சொன்னார். பெத்த அப்பனுக்குச் செய்யுற உதவி மட்டுமே இதுன்னு சொல்லிட்டு வந்தேன். பகுத்தறிவே போற்றத்தக்கது, பக்தி புறக்கணிப்புக்குரியது என்பது என் கொள்கையாக இருந்தாலும்,  சில நேரங்களில் பகுத்தறிவை விடவும் மனிதாபிமானமே மதிக்கத்தக்கதுன்னு தோணுது” என்றேன் நான்.

“மனிதாபிமானமே சிறந்தது, சரி. பக்தி வேண்டாம்னு நீ சொல்லுறது உறுத்துது. இன்னொரு நாள் பேசுவோம்” என்று கை குலுக்கி விடை பெற்றான் அருணகிரி.
========================================================================
என்னில் ஒரு பத்து வயதை குறைத்து, இறந்துவிட்ட என் அப்பாவைப் பிழைக்க வைத்துக் கற்பனையாகப் படைக்கப்பட்டது இந்தக் கதை.