கதையின் முதல் பகுதியை வாசித்திட.....
[.....ஒப்புக்குக்கூட ஒரு சமாதானக் குரல் கொடுக்காமல், நடிப்புக்குக்கூட ஒரு குறுக்கீடு செய்யாமல் ஊர் மொத்தமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்த வேளையில்.....]
எவரும் எதிர்பாராத வகையில், மாவட்ட ஆட்சித் தலைவர் தன் பரிவாரங்கள் சூழ அங்கே வருகை புரிந்தார்.
வெட்டரிவாள் கை நழுவித் தரையில் விழுந்ததுகூடத் தெரியாமல் சின்னப்பன் திகைத்து நின்றான். கிராமத்து மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சூழ்ந்துகொண்டார்கள்.
ஆட்சித் தலைவர் பேசினார்:
“உங்களுக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விசயத்தை இப்போ சொல்லப்போறேன். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிறு விவசாயி சின்னப்பன் என்பவருடைய மகள் துளசி, மலேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஐந்து தங்கப் பதக்கங்களைத் தட்டிவந்து நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு நம் தமிழ்நாடு அரசு பாராட்டு விழா நடத்தி, பரிசு வழங்க இருக்கிறது. இந்த நல்ல செய்தியைத் துளசியின் குடும்பத்தினருக்கு நேரில் சொல்லி வாழ்த்திவிட்டுப் போகத்தான் நான் வந்திருக்கிறேன்.....”
அவர் தொடர்ந்து பேச முற்பட்டபோது, அவரை அணுகி நின்ற சின்னப்பன், “நாந்தானுங்க சின்னப்பன். போட்டியில் பரிசெல்லாம் வாங்கினதாச் சொன்னீங்களே அந்தப் பொண்ணு துளசி என் பொண்ணா இருக்காதுன்னு நினைக்கிறேங்க. அவ மூனு வருசம் முன்னாடி, புத்தி கெட்டுப் போயி எவனோ ஒரு பொறம்போக்குப் பயலோட ஊரைவிட்டே ஓடிப் போய்ட்டாங்க. நான் உழைச்சிச் சம்பாதிச்ச பணத்தில் செஞ்சி போட்ட நகைகளையும் கொண்டுபோய்ட்டா. என்ன ஆச்சோ ஏது ஆச்சோ, இப்ப ஒண்டிப் பொம்பளையா திரும்பி வந்திருக்கா” என்றான்.
ஆட்சித் தலைவரின் புருவங்கள் உயர்ந்து நெளிந்தன. அவர் முகத்தில் குழப்பம் குடியேறியது. உதவியாளரைப் பார்த்தார். அவர் கிராம நிர்வாக அதிகாரியை அழைத்தார். கலந்து பேசினார்கள்.
ஆட்சித் தலைவர் சின்னப்பனை மிக அருகில் நிறுத்தி, ஒரு நாளிதழில் வெளியாகியிருந்த பெண்ணின் புகைப்படத்தைக் காட்டினார்.
“இது என் பொண்ணுதாங்க” என்று சொல்லிக்கொண்டு மலங்க மலங்க விழித்தான் சின்னப்பன்.
துளசியின் படத்தை முதல் பக்கத்திலேயே வெளியிட்டு, ‘தங்கப் பெண்’ என்று அவளுக்குப் பட்டம் சூட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஐந்து தங்கப் பதக்கங்களை ஈட்டி வந்ததற்காக ‘ஓகோ’ என்று பாராட்டி எழுதியிருந்தது அந்த நாளிதழ்.
ஆட்சித் தலைவர், துளசியைத் தன்னருகில் வருமாறு அழைத்தார். “உன் படிப்பு பற்றியும் உன் சாதனை பற்றியும் எனக்குத் தெரியும். விவரமா அரசாங்கம் எழுதியிருக்கு. நான் கேட்குற கேள்விகளுக்கு ஒளிக்காம பதில் சொல்லணும். நீ தகாத முறையில் ஊரைவிட்டு ஓடிப் போனதா உன் அப்பா சொல்லுறார். ஊரும் அதை நம்புது. இதுக்கு நீ எழுதி வைச்சிட்டுப் போன கடிதத்தைத் தவிர வேறே ஆதாரம் இல்ல. இப்படியொரு கடிதத்தை நீ ஏன் எழுதணும்? நீ ஒருத்தரை காதலிச்சதும், அவரோட ஓடிப்போனதும் உண்மைதானா? உன் படிப்புச் செலவுக்கு உதவினது அவர்தானா? ஒரு வேளை அப்படி ஏதும் நடக்கலேன்னா, நீ கல்லூரியில் சேர்ந்து படிச்சது எப்படிச் சாத்தியம் ஆச்சு? இதையெல்லாம் மறைக்க வேண்டிய அவசியம் என்ன? நடந்ததை எல்லாம் விளக்கமா சொல்லும்மா” என்று ஆதரவான வார்த்தைகளைச் சொல்லி, பரிவுடன் துளசியைப் பார்த்தார்.
துளசி சொன்னாள்: “என் அப்பாவுக்கு என் மேல கொள்ளைப் பிரியம். அவர் வாழ்ந்ததே எனக்காகத்தான்னு சொல்லலாம். அப்பேர்ப்பட்டவர் நான் மேல் படிப்புக்கு ஆசைப்பட்டபோது சம்மதிக்கல. காரணம், ஒரு பணக்காரக் குடும்பத்தோட ‘சம்பந்தம்’ வைச்சிக்க வாய்ப்புக் கிடைச்சதுதான். அந்த வாய்ப்பை நழுவவிட அவர் தயாராயில்ல.....
.....படிப்பிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் சாதனைகள் புரியணும்கிறது என் கனவு. அது மலரத் தொடங்கியபோதே கருக ஆரம்பிச்சதால பல நாள் அழுதேன். ரொம்பவே யோசிச்சி ஒரு முடிவுக்கு வந்தேன்.....
.....என் முன்னேற்றத்தில் அக்கறையும் என் திறமையில் அழுத்தமான நம்பிக்கையும் வைத்திருந்த பள்ளித் தலைமை ஆசிரியரைச் சந்திச்சி என் திட்டத்தைச் சொன்னேன். முதலில் தயங்கினாலும் அப்புறம் சம்மதிச்சார்.....
.....என் பாதுகாப்பாளராப் பொறுப்பேத்துகிட்டு, சென்னைக் கல்லூரி ஒன்றில் சேர உதவினார். மாணவியர் தங்கும் விடுதியிலும் இடம் கிடைச்சுது. அரசு தந்த உதவித்தொகை போதுமானதா இருந்துது. பற்றாக்குறைக்கு அப்பா செய்து போட்ட நகைகளைப் பயன்படுத்திகிட்டேன். சென்னை இங்கிருந்து வெகு தொலைவில் இருப்பதால் என்னைப் பத்தி எந்தவொரு தகவலும் இந்தக் கிராமத்தை எட்டல. என் அப்பாவின் சுகத்தைப் பத்தித் தலைமை ஆசிரியர் அப்பப்போ தகவல் தந்தார்.....
.....படிப்பு, தீவிர விளையாட்டுப் பயிற்சின்னு, இந்த ரெண்டையும் தவிர வேற சிந்தனையே எனக்கு இருந்ததில்ல. நான் கண்ட கனவுகளில்கூட பட்டங்களும் தங்கப் பதக்கங்களும்தான் வந்து போச்சு. எப்படியோ, நான் நினைச்சதை ஓரளவுக்குச் சாதிச்சிருக்கேன். ரெண்டொரு மாதங்களில் மூனு வருசப் படிப்பு முடிஞ்சுடும். மேல் படிப்புப் படிக்கணும்கிற ஆசையும் இருக்கு” என்றிவ்வாறு துளசி சொல்லி நிறுத்தியபோது ஆட்சித் தலைவர் சிரித்துக்கொண்டே சொன்னார்: “நீ எழுதி வைத்துப்போன கடிதம் பத்தியும் கொஞ்சம் சொல்லிடு.”
துளசியின் முகத்தில் மெல்லிய நாணம் படர்ந்தது. “கடிதத்தில் எழுதியிருந்தது அப்பட்டமான பொய். காதல் கல்யாணம் பத்தியெல்லாம் நான் யோசிச்சதே இல்ல. அப்பா என்னைத் தேடிக் கண்டுபிடிச்சிக் கல்யாணம் செய்து வைக்கும் முயற்சியைத் தடுக்கத்தான் இப்படியொரு தந்திரத்தைக் கையாண்டேன். எனக்கு நானே அவப்பெயர் சுமத்திகிட்டேன்.....
.....ஆசியப் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் கிடைச்ச அப்புறம்தான் கல்லூரிக்கும் அரசாங்கத்துக்கும் பத்திரிகைகளுக்கும் என் சொந்த முகவரியைக் கொடுத்தேன்” என்று சொல்லி முடித்துச் சற்றே நிதானித்த துளசி, சின்னப்பனை அணுகி, “உங்களைத் தனியாக் கிடந்து தவிக்க விட்டுட்டேன். ரொம்பப் பெரிய தலைக்குனிவை உண்டுபண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்கப்பா” என்றவாறு அவன் கால்களில் விழுந்து வணங்கினாள்.
“இந்தத் தலைக்குனிவு தற்காலிகம்தான். உன்னைப் பெத்ததுக்காக இனி எப்போதும் அவர் தலை நிமிர்ந்துதான் இருக்கும்” என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சொன்னபோது ஊர் மக்கள் எழுப்பிய கரவொலி வானவெளியெங்கும் பரவியது.
கட்டுக்கடங்காத பெருமிதம் சின்னப்பனின் நெஞ்சமெல்லாம் நிரம்பியது.
========================================================================