அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 18 மே, 2020

சிறுகதைப் போட்டியில் அடியேனுக்கு முதல் பரிசு[ரூ5000/=] பெற்றுத்தந்த கதை!

முன்னொரு காலத்தில்[1992ஆம் ஆண்டு] ‘ராணி’ வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு[ரூ5000/=] வென்ற படைப்பு இது]
[நன்றி: ‘ராணி’ வார இதழ்]
விடிந்தும் விடியாததுமாக ஏர்மாடுகளுடன் உழவு வேலைக்குப் புறப்பட்டுப்போன சின்னப்பன், போன சுருக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். அவன் கையில் நீண்ட பெரிய வெட்டரிவாள் இருந்தது.

அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்னால் ஓடிவந்துகொண்டிருந்த கோவணம் கட்டிய சிறுவனிடம், “ஏண்டா அப்பு, அந்தச் சிறுக்கியோட வேற யாரும் வந்திருக்காங்களா?” என்றான்.

“வேற யாரும் இல்ல.”

“டேய், வந்த வேகத்தில் ஓடுடா. ஓடிப்போய் நான் அங்கே வர்றதுக்குள்ளே அவள் ஊரைவிட்டே ஓடிப்போயிடணும்னு சொல்லு. என் கண்ணுல பட்டா, கண்டதுண்டமா அந்த ஓடுகாலியை வெட்டிப் போட்டுடுவேன் அப்படீன்னும் அவகிட்ட சொல்லு.”

நீண்டு தொங்கும் பின்புறக் கோவணத் துணி, பட்டத்து வாலாய்க் காற்றில் படபடக்கத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு ஓடினான் பொடியன்.

விதம் விதமான எண்ணங்கள் சின்னப்பனின் நெஞ்சத்தில் முகாம் அமைத்துப் போரிடலாயின. வேதனையை விழுங்கி விழுங்கி விரக்தி அடைந்துவிட்ட நிலையில் அவனின் உதடுகள் முணுமுணுத்தன. “என்னிக்கிக் காதல் கத்தரிக்காயின்னு காயிதம் எழுதி வைச்சிட்டு எவனோ ஒரு காலிப்பயலோட ஊரை விட்டு ஓடிப்போனாளோ, அன்னிக்கே அவளைத் தலை முழுகிட்டேன். கருமாதி, கல்லெடுப்பு எல்லாமே செஞ்சி முடிச்சிட்டேன். இவ திரும்பி வரலேன்னு யாரு அழுதா? ஓடிப்போனவ அப்பிடியே ஒழிஞ்சி போக வேண்டியதுதானே. இப்போ எதுக்கு இங்கே வந்திருக்காளாம்? அப்பன் உயிரோடு இருக்கானா, செத்து ஒழிஞ்சிட்டானான்னு தெரிஞ்சிகிட்டுப் போகவா?.....”

“ஏண்டா சின்னு, என்னடா ஆச்சி உனக்கு? ஒத்தை ஆளாப் பேசிகிட்டுப் போறே” என்ற கேள்வி அவனின் செவிப்பறையைத் தட்டித் திடுக்கிட வைத்தது.

வழியை அடைத்துக்கொண்டு நின்றாள் பால்காரக் கிழவி பவளாயி. “ஓடிப்போன உன்னோட மவ ஒண்டிக்கட்டையாத் திரும்பி வந்திருக்காளாமே, ஏண்டா? திருட்டு மாம்பழம் பறிச்சவன், சூப்பி முடிச்சித் தூன்னு துப்பிட்டுப் போய்ட்டானா?” என்றாள் எகத்தாளமாக.

கிழவியின் உள்ளர்த்தம் பொதிந்த கேள்விக்குச் சின்னப்பனால் பதில் தர இயலவில்லை. அந்த இயலாமை, அவனுள் கனன்றுகொண்டிருந்த கோபத் தீயில் குடம் குடமாய் நெய் சொரிந்துவிட்டது.

“சோறூட்டிச் சீராட்டி வளர்த்த இந்தக் கையாலயே அவளை வெட்டிப் போட்டுடப் போறேன். நீ வேணும்னா வந்து பாரு.” -அரிவாளின் கூர்முனையை நோட்டம் இட்டவாறே நடந்தான் சின்னப்பன்.

சின்னப்பன், பாசம் என்ன விலை என்று கேட்கும் நீசன் அல்ல. ஐந்து வயதில் தாயை இழந்த தன் மகள் துளசிக்குத் தாயாகவும் மாறிப் பாசத்தை ஊட்டி வளர்த்தவன்; அவள் விழிகளில் கண்ணீர் முத்துக்கள் சிந்தக் கூடாது என்பதற்காகக் காலமெல்லாம் வேர்வை முத்துக்களைச் சிந்தியவன்; அவள் ஆசைப்பட்டதையெல்லாம் நிறைவேற்றுவதற்காக ஆசைப்படுவதையே விட்டொழித்தவன்.

துளசியும் நல்ல பெண்தான்; சுட்டிப் பெண்ணும்கூட. ஆறு வயதில் சமையல் கட்டில் அப்பனுக்கு உதவி செய்தாள்; ஏழு முடிந்து எட்டு எடுத்தபோது அவனை உதவிக்கு வைத்துக்கொண்டாள்; அடுத்துவந்த ஆண்டுகளில் எச்சில் தட்டு அலம்பும் வேலையைக்கூட அவனுக்கு விட்டுவைக்கவில்லை.

துளசி ஒரு வித்தியாசமான பெண்ணும்கூட. வெற்று அரட்டை, வீண் வம்பு போன்றவை அவளின் பண்புக்கு ஒத்துவராதவை. உயர்வான எண்ணம், உபயோகமான பேச்சு, ஓயாத உழைப்பு ஆகியவற்றின் இலக்கணமாகத் திகழ்ந்தாள் அவள்.

வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டே பள்ளிப் படிப்பை முடித்தாள். கல்லூரியில் சேர அவள் ஆசைப்பட்டபோது அப்பன்காரன் அதை நிராகரித்தான். நொறுங்கிப்போனாள்.

அவளின் படிப்புக்கு சின்னப்பன் முற்றுப்புள்ளி வைத்ததற்குக் காரணம் இல்லாமலில்லை. அவளின் அழகிலும் குணத்திலும் முழு நிறைவைக் கண்ட உள்ளூர்ப் பணக்காரர் ஒருவர், வரதட்சணை இல்லாமல் அவளைத் தன் மருமகள் ஆக்கிக்கொள்ள முன்வந்தார். தன் செல்ல மகளுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டதென்று திடமாக நம்பியதால், துளசியின் கெஞ்சு மொழிக்கும் சிந்திய கண்ணீருக்கும் அவன் மசியவே இல்லை.

“நிறையப் படித்து, நிறையச் சாதித்து ஒரு வேலையும் கிடைத்த பிறகு திருமணம் செய்துக்கிறேன். என்னைப் படிக்க விடுங்கள்” என்று துளசி எவ்வளவோ மன்றாடியும் அவன் அசைந்து கொடுக்கவில்லை.

நாள் குறிக்கப்பட்டு, திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், ‘கரையில்லாத கல்வியின் மீது நான் கொண்ட வரம்பில்லாத காதலுக்குத் தாங்கள் தந்த பரிசோ தரம் இல்லாத வசைமொழிகள். நான் காளை ஒருவன் மீது காதல் கொண்டுவிட்டேன் என்று நான் சொன்னால் நீங்கள் வாழ்த்தவா போகிறீர்கள்? என் மனம் கவர்ந்த ஒரு நல்லவருடன் ஊரைவிட்டே போகிறேன்’ என்று எழுதி வைத்துவிட்டு, ஒரு நாள் ஓடிப்போனாள் துளசி.

அன்று போனவள் கொஞ்சம் ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் திரும்பி வந்திருக்கிறாள்.

சின்னப்பன் எல்லையம்மன் கோயிலைக் கடந்து ஊருக்குள் நுழைந்தபோது, ஊர் நாட்டாண்மை எதிர்ப்பட்டார். “ஓடிப்போன உன் பொண்ணு திரும்பி வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆத்திரத்தில் ஒன்னு கிடக்க ஒன்னு செஞ்சிடாதே. அவ எங்கே போயிருந்தா, எவனோட போயிருந்தாங்கிற விசயத்தை விசாரிச்சி வை. அடுத்து ஆகவேண்டியதைப் பஞ்சாயத்தில் பேசி முடிவு பண்ணுவோம்” என்று கட்டளையிடும் தோரணையில் சொல்லிவிட்டுப் போனார்.

ன்னை நேரில் பார்க்கும்போது பெற்றவனின் சீற்றம் தணிந்துவிடும் என்ற துளசியின் கணிப்பு முற்றிலுமாய்ப் பொய்த்துப் போனது.

“என்ன தைரியத்தோட நீ இந்த வீட்டு வாசல்படி மிதிச்சே? என்கிட்டே கொஞ்சமாவது பயம் இருந்தா ஓடிப்போயிடுன்னு சொல்லி அனுப்பியும் இங்கே நெடுமரமா நின்னுட்டிருப்பே? இப்பவும் சொல்லுறேன், இனி ஒரு வினாடிகூட என் கண் முன்னால நிற்காதே” என்று மகளைக் கண்டதும் ஆவேசமாகக் கூச்சலிட்டான் சின்னப்பன்.

அப்பன்காரனின் கோபம் எத்தனை பொல்லாதது என்பது துளசிக்குத் தெரியும். இருந்தும் அசையாமல் நின்றாள். “அப்பா, தயவு செஞ்சி நான் சொல்ல வர்றதை.....”

“என்ன சொல்ல வர்றே? நான் காதல் பண்ணிக் கட்டிக்கிட்டவன் பெரிய லட்சாதிபதியாக்கும். காரும் பங்களாவும் கழுத்து நிறையத் தங்க நகையுமா சந்தோசத்தில் மிதக்குறேன்னு சொல்ல வர்றியா?

“அதில்லப்பா, நான் சொல்லப்போறது.....”

“வேறென்ன சொல்லப்போறே, நடந்தது நடந்துபோச்சு. மன்னிச்சுடுங்கப்பான்னு சொல்லுவே. இல்லேன்னா, நான் மோசம் போய்ட்டேன். வாழ வைக்கிறேன்னு கூட்டிட்டுப் போனவன் வாழாவெட்டியா விரட்டியடிச்சிட்டான்னு சொல்லுவே. வேற என்ன சொல்லப்போறே? நீ சொல்லுற எதையும் காது குடுத்துக் கேட்க நான் தயாரா இல்ல” என்ற சின்னப்பன் வெறி ஏறிய நிலையில் அரிவாளுடன் மகளை நோக்கிப் பாய்ந்தான்.

ஒப்புக்குக்கூட ஒரு சமாதானக் குரல் கொடுக்காமல், நடிப்புக்குக்கூட ஒரு குறுக்கீடு செய்யாமல் ஒட்டுமொத்த ஊர் மக்களும் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்த வேளையில்.....

.....தொடரும்[அடுத்த பதிவில் முற்றுப்பெறும்]
========================================================================