வானத்திலே பறந்திட்ட அழகு வானம்பாடி வ.ரா.
எழுத்து வானத்தில், எட்டாத கருத்துயரத்தில், சிந்தனைச் சிறகு கட்டிப் பறந்திட்ட வானம்பாடி அவர்.
இந்த வானம்பாடியை வீழ்த்த வைதிக வல்லூறு வட்டமிட்டபடியே இருந்தது! பழமைக் கழுகும் பறந்தபடிதான் இருந்தது!
இந்த வானம்பாடியை வீழ்த்த வைதிக வல்லூறு வட்டமிட்டபடியே இருந்தது! பழமைக் கழுகும் பறந்தபடிதான் இருந்தது!
ஆனால், வானம்பாடியை எதுவும் வீழ்த்தவில்லை; வீழ்த்த முடியவில்லை!
தன் இச்சைபோல் பறந்துகொண்டிருந்தது அந்த வானம்பாடி!
வ.ரா., பிறப்பால் ‘அந்த’க் குலம்; பிறவற்றாலோ அவர் நம்மவர்; நல்லவர்.
அவர் அக்கிரகாரத்துக்கு ஓர் அபாய அறிவிப்பு!
வைதிகபுரிக்கு அவர் நடமாடும் எச்சரிக்கைப் பலகை!
புரோகித உலகில் அவருக்குப் பெயர் ‘பொல்லாதவர்’!
ஆனால், நமக்கு வ.ரா. ஓர் அரிய வரவு! நல்ல பரிசு! சுவையான விருந்து!
அவர் கருத்து, காலத்திற்கு ஏற்றது; நாட்டுக்கு உகந்தது; நமக்குத் தேவையானது!
அவர் எழுதுகோலைக் குலம் வளைத்ததில்லை!
அவர் எண்ணத்தைக் கோத்திரம் கருக்கியதில்லை!
அவர் கருத்தைச் சாத்திரம் சாய்த்ததில்லை!
அவர் எழுத்து வழுக்கு நிலமல்ல; சறுக்கல் சேறு நிறைந்ததுமல்ல!
எதையும் தெளிவாகச் சொன்னார்; தேவையான அளவு சொன்னார்; இடையில் நிறுத்தியதில்லை.
அவர் உள்ளதை உள்ளபடி கூறியதால் பலரிடம் அவருக்கு வெறுப்பும் பகையும்!
அத்தகைய ‘எழுத்து வானம்பாடி’யை நாம் இழந்துவிட்டோம்.
அவர் மறைவு நிறைவு செய்ய முடியாததுதான்!
எந்த இடத்தில் எவை வாராவோ, அவை அத்தனையும் வரும் என்று நாட்டுக்கு அறிவித்தார் வ.ரா.
விஷக்குளத்தில் கிடைத்த புத்தமுது அவர்!
கள்ளிக்கிடையே நமக்குக் கிடைத்த காட்டு ரோஜா அவர்!
பாலைவனத்தின் இடையிலுள்ள சோலை அவர்!
ஆம், புரோகிதபுரியிலே, நமக்குக் கிடைத்த எதிர்பாராத செல்வம் அவர்.
அவர் அக்கிரகாரத்தில் உதித்த அதிசயப் பிறவி. ஆனால், நாடோ, அவரை அவசியப் பிறவி என்று போற்றியது; இன்று அவர் பிரிவால் அது பொருமுகிறது! அழுகிறது!
அந்தத் துக்க ஊர்வலத்தில், நம் வீங்கிய இதயங்களும் வீதிவலம் வருமாக!
-திராவிட நாடு, 02.09.1951.
=============================================================================================
இதை எடுத்தாண்ட விகடன் பிரசுரத்தார்க்கு நம் நன்றியும் பாராட்டுகளும். நூல்: ‘தமிழ்ப் பெரியார்கள்’[விகடன் பிரசுரம்]. முதல் பதிப்பு: மே, 2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக