திங்கள், 10 ஆகஸ்ட், 2015

வாருங்கள்...நாமும் நெருப்பில் நடக்கலாம்! கூரிய அரிவாள் மீது நிற்கலாம்!!


கோயில் திருவிழாக்களில், தீ மிதித்தல், அலகு குத்துதல் போன்றவை இன்றளவும் பரவலாக நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகள். இவற்றைச் சாதிக்கக் கடவுள் பக்தியும் விரதமும் இன்றியமையாத் தேவைகள் என்று நம்புவது மூடத்தனத்தின் உச்சமாகும்.

தண்ணீரில் குளித்து, நீர் சொட்டும் ஈரமான ஆடையுடன் நெருப்பின் மீது நடக்கும்போது காலில் உள்ள ஈரமானது நெருப்பில் பட்டு ஆவியாவதால், காலுக்கும் நெருப்புக்கும் இடையே ‘ஆவித்திரை’ உருவாகிறது. இந்த ஆவித்திரையைக் கடந்துதான் வெப்பம் தீ மிதிப்பவரின் காலைச் சுட முடியும். இதற்குச் சிறிது அவகாசம் தேவை. அவசர அவசரமாக உரிய தூரத்தை நடந்து முடித்துவிடுவதால் பாதங்களில் தீக் காயங்கள் ஏற்படுவதில்லை. சூடு தாக்காமல் இருப்பதற்கு, நெருப்பின்மீது படிந்திருக்கும் சாம்பலும் ஒரு காரணம்.

மற்றபடி, விரதம் இருந்து பெறும் கடவுள் சக்தியால் இது சாத்தியமாகிறது என்பது வெறும் குருட்டு நம்பிக்கைதான்.

பூக்குழி மிதிப்போர், ஐந்தே ஐந்து நிமிடம் நெருப்பின் மீது அசையாமல் நிற்பார்களா? குழியில் உருண்டு எழுந்து வருவார்களா?

தீச்சட்டி தூக்குவதும் இதைப் போன்றதுதான்.

சட்டியின் அடியில் வெப்பம் கடத்தாப் பொருள்களைப் போட்டு, நெருப்பை எரியச் செய்து தூக்கினால், பொறுக்க முடியாத அளவுக்குச் சட்டி சுடாது. மண் பானைக்குள் நெருப்பிட்டுத் ‘தீச்சட்டு’ தூக்கும் பக்தர்கள் உலோகத்தால் ஆன செம்பு அல்லது, எவர்சில்வர் குடத்தில் நெருப்பிட்டுக் கோயிலை வலம் வருவார்களா?

மேற்கண்டவை போலவே, கூரிய அரிவாள் மீது ஏறி நிற்பதற்கும் பக்திக்கும் சம்பந்தமே இல்லை. இந்த வித்தையை எவர் வேண்டுமானாலும் செய்து காட்டலாம்.

அரிவாள் எவ்வளவு கூர்மையாக இருந்தாலும் பரவாயில்லை. அதன் வெட்டும் முனை நீளமாக இருப்பதும், உடலின் எடை வெட்டும் முனையில் சமமாகப் பரவியிருப்பதும் முக்கியம். அரிவாள் மீது ஏறும்போது, கவனமாக இருபுறமும் கைகளை ஊன்றிக்கொண்டு, முழு எடையையும் ஏற்றி நிற்றல் வேண்டும்.

அரிவாளைச் சாய்த்துப் பிடித்து ஏறுவதோ, குதித்து ஏறுவதோ கூடாது. ஒரு வெட்டும் கருவி எந்தவொரு பொருளையும் வெட்டுவதற்கு , வெட்டும் கோணம், வெட்டும் வேகம், அழுத்தம் ஆகியவை காரணமாக அமைகின்றன.

அரிவாள் மீது ஏறி நிற்கும் பக்தர்கள், நீண்ட பெரிய ஊசிகளை நட்டு வைத்து அவற்றின் மீது ஏறி நின்று, தம் பக்தியின் மேன்மையைப் பறைசாற்றுவார்களா?

அலகு குத்துவதிலும் சில நெறிமுறைகளைப் பின்பற்றினால் போதும். பக்தி விரதம் என்று எதுவும் தேவையில்லை.
‘கூர்மை’யான கொக்கியைத் தோலில் குத்துவதால் தாங்கிக்கொள்ளும் அளவுக்குத்தான் வலி இருக்கும். சில குறிப்பிட்ட காரணங்களால் ரத்தம் கசிவதில்லை. கொக்கி தாங்கக்கூடிய அளவுக்கு எடை இருத்தல் அவசியம். எடைக்கு ஏற்பவே கொக்கிகளின் எண்ணிக்கையும் இருத்தல் வேண்டும். உதாரணமாக, ஒரு கொக்கி ஐந்து கிலோகிராம் எடையைத் தாங்கும் என்றால், 100 கிலோகிராம் எடையைச் சுமப்பதற்கு அல்லது, இழுப்பதற்கு 20 கொக்கிகளை மாட்டிக்கொள்ள வேண்டும். இதைச் சாதிக்க விரதமோ பக்தியோ தேவையில்லை.

உங்கள் ஊரில் நடக்கவிருக்கும் விழாக்களில் இவற்றில் ஏதாவது ஒன்றை நீங்களும் செய்து காட்டி மக்களின் மூடநம்பிக்கையைக் களைய முற்படலாம்.

வாழ்த்துகள்.
=============================================================================================

நன்றி: ‘பேய், பில்லி, சூனியம், ஆவி, சோதிட மோசடிகள்’, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, சென்னை. முதற் பதிப்பு: 1996.

=============================================================================================

பின் இணைப்பு:

இந்த வாரக்[17.08.2015] ‘குங்குமம்’ இதழில் வெளியான ‘கத்துக்குட்டி ’ எழுத்தாளனின் கதை!

கதை:                                                தப்பு

“ஏங்க, உங்களைத்தானே...”

“சொல்லு.” வலைப்பூக்களை மேய்ந்துகொண்டிருந்த சேதுராமன், பார்வையை உயர்த்தாமலே குரல் கொடுத்தார்.

“நம்ம பொண்ணு அகிலா எவனையோ காதலிக்கிற மாதிரி தெரியுதுங்க!” - ஆழ்ந்த கவலையுடன் சொன்னாள் கற்பகம்.

“ஏன் அப்படிச் சொல்லுறே?”

“நேரம் போறது தெரியாம எப்பவும் செல்போனில்தான் மூழ்கியிருக்கா! ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சும் தூங்காம பேசிட்டே இருக்கா...”

“ம்ம்ம்...ஃப்ரெண்டா இருக்கக் கூடாதா?”

“குழைஞ்சு குழைஞ்சு பேசுறா. நடுநடுவே, ‘அடச்சீ’ன்னு சொல்லி வெட்கப்பட்டுச் சிரிக்கிறா!” என்று படபடத்தாள் கற்பகம்.

கொஞ்சம் யோசனைக்குப் பிறகு, அழுத்தம் திருத்தமான குரலில் சொன்னார் சேதுராமன். “அவ யாரையும் காதலிக்க மாட்டா. நீ உன் வேலையைப் பாரு.”

“அதெப்படி அவ்வளவு திடமா சொல்றீங்க?”

“நமக்குள்ள சின்னச் சின்னப் பிரச்சினைகள் வந்தாக்கூட, ‘உங்களைக் காதலிச்சிக் கல்யாணம் பண்ணி என்ன சுகத்தைக் கண்டேன்’னு நீ மூக்கைச் சிந்துறது வழக்கம். அகிலாவுக்கு விவரம் புரிய ஆரம்பிச்சதிலிருந்து இதைக் கவனிச்சிட்டு வர்றா. அம்மாக்காரி செஞ்ச தப்பை மகள் செய்வாளா என்ன? பசிக்குது...சமையலைக் கவனி!” என்றார் சேதுராமன்.

தொங்கிய முகத்துடன் இடத்தைக் காலி செய்தாள் கற்பகம்.
=============================================================================================

குங்குமம் ஆசிரியருக்கு என் மனம் கனிந்த நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக