அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

தமிழுக்குத் தொண்டு செய்தோர் இப்படித்தான் சாக வேண்டுமா?! அடக் கடவுளே!!


*கைகால்களில் சொறிசிரங்கு பரவிப் பெரிதும் உடல் மெலிந்த நிலையில் தம் இறுதி நாட்களைக் கடத்தினார் கவிமணி தேசிக வினாயகம்பிள்ளை.

*தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாண சுந்தரனார், நலிந்து மெலிந்து கண்பார்வை கெட்டுச் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார் தம் அந்திமக்காலத்தில்.

*வீங்கிய கால்களுடன் நடமாட இயலாமல் முடங்கிக் கிடந்து இயற்கை எய்தினார் டி.கே.சி.

*தனித்தமிழ் வளர்த்த மறைமலை அடிகள், தம் இறுதிக் காலத்தில், இதயம் பலவீனப்பட்டு, உணர்வற்றுக் கிடந்துதான் இறந்துபோனார்.

*ராஜாஜி மண்டபத்தில் நடந்த கவிமணியின் இரங்கல் கூட்டத்தன்று, “நான் முதலில் பேசிவிடுகிறேன். மற்றவர்கள் பேசி முடிக்கும்வரை நான் உயிரோடு இருப்பேனா என்பது தெரியாது” என்று பேசினாராம் கல்கி. இது, அவர் வழக்கமாகப் பேசும் நகைச்சுவைப் பேச்சு என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், கவிமணியின் அனுதாபக் கூட்டத்துக்கு மறு நாளே, அரசினர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவினார் அவர்.

*1935ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி பிறந்த எழுத்தாளர் சுஜாதா சில காலமாகவே சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் உடல் நிலை மோசமானதால் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (பிப்.,27 ) இரவு 9.30 மணியளவில் சுஜாதாவின் உயிர் பிரிந்தது. -Lakshman Sruthi.com

*80ஆவது வயதில் காலமான, பிரபல தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தன் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களுக்கு முன்னர் சிறுநீரகப் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகச்  சேர்க்கப்பட்டிருந்தார். -தினத்தந்தி, ஆகஸ்டு 13, 2015.

*எழுத்தாளர் சு.சமுத்திரம், கார் விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உரிய கட்டணம் செலுத்தாததால் சிகிச்சை மறுக்கப்பட்டு மரணமடைந்தார்.

*சிறுகதை மன்னன் புதுமைப் பித்தன், சயரோகத்தால் பாதிக்கப்பட்டு, அது தீவிரம் அடைந்த நிலையிலும் சிகிச்சை பெறப் பணம் இல்லாததால் நீண்ட நாட்கள் மரண வேதனையை அனுபவித்து மாண்டுபோனார்.

"காசநோய்க்கு இரையாகி மரணப்படுக்கையில் படுத்துக் கிடந்த புதுமைப்பித்தனிடமிருந்து எனக்கு ஒரு குறிப்பு வந்தது. "ஒளி அணைந்து வருகிறது. நீ வந்தால் ஒருவேளை தூண்டிவிடுவாய். கொஞ்ச நேரமாவது வெளிச்சமாக இருக்கும். வா...'’  -இந்தக் கடிதம் என் நெஞ்சை என்னவோ செய்தது. அவசரமாக ஓடினேன். புதுமைப்பித்தன் படுக்கையில் மூடிப் புதைத்துக்கொண்டு படுத்திருந்தார். என்னைக் கண்டதும், "வாடா.. ராசா! தமிழுலக இலக்கிய மேதை கிடக்கிற கிடையைப் பார்த்தியா?' என்றார். நான் ஒன்றுமே சொல்லாமல் நின்றேன். "எத்தனையோ பேர் செத்தவங்களுக்குக் கோபுரம் கட்டறாங்க பாரு, ஒத்தனாவது சாகிறவனுக்கு ஒத்தாசை பண்ண வாரானுகளா? ராசா.. நீயாவது என் பக்கத்திலே இருக்கீயே ! செய்யணும்கிறதைச் சாகிறதுக்கு முன்னாலேயே செஞ்சுப்புடு' என்றார் அவர். பிறகு இருமல். இருமலால் அவரது உடல் முழுவதும் பஞ்சாகப் பதறியது.....”  -கலா ரசிகர் எஸ்.சிதம்பரம், கட்டுரை: வே.முத்துக்குமார், 01.02.2015 நக்கீரன்.
*****************************************************************************************************************************************************

தகவல்கள் வழங்கிய சில நூல்களின் பெயர்கள் மறந்துவிட்டன என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக