காளைப் பருவத்தில், காதலித்துக் கடிமணம் புரியும் ஆசை எனக்கும் இருந்தது. ஆனால், அழகான பெண்களைச் சந்தித்த போதெல்லாம் என் பார்வை அவர்களின் கவர்ச்சிப் பிரதேசங்களில் சஞ்சரிக்க, உணர்ச்சி நரம்புகளில் காமம் சுரந்ததே தவிர, மனதில் காதல் அரும்பியதே இல்லை. “ஏன், எனக்கு மட்டும் இப்படி?” என்று கேட்டு நான் அடிக்கடி வருத்தப்பட்டதுண்டு. இனி, மேலே படியுங்கள்..........
இங்கே ‘காளைப் பருவம்’ என்று நான் குறிப்பிடுவது கல்லூரிகளில் படித்த நாட்களை.
பட்ட மேற்படிப்பை முடிக்கவிருந்த தருணத்தில் அந்த இலட்சியம் என்னைச் சிக்கெனப் பற்றிக்கொண்டது.
கலப்பு மணம்! “என் ஜாதிப் பெண்ணின் கழுத்தில் கனவிலும் தாலி கட்ட மாட்டேன்” என்று என்னைச் சபதம் மேற்கொள்ள வைத்தது இந்த இலட்சியம்தான்.
இப்படியொரு இலட்சியத்தை நான் சுமப்பதற்குக் காரணமாக இருந்தவர் எங்கள் கல்லூரி முதல்வர் மாணிக்கவாசகர்.
இப்படியொரு இலட்சியத்தை நான் சுமப்பதற்குக் காரணமாக இருந்தவர் எங்கள் கல்லூரி முதல்வர் மாணிக்கவாசகர்.
இரண்டாம் ஆண்டின் இறுதி வேலை நாளில் நடைபெற்ற ‘பிரியா விடை’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவர்தான் இப்படியொரு இலட்சிய நெருப்பை, நான் உட்படப் பல மாணவர்களின் அடிமனதில் பற்ற வைத்தார்.
“சமுதாயத்தைச் சீரழித்துக்கொண்டிருக்கும் பீடைகளில் சாதி வேறுபாடு மிக முக்கியமானது. அதை வேரோடு பிடுங்கி அழிக்கவேண்டுமென்றால் கலப்பு மணங்கள் பெருக வேண்டும். உங்களில் எத்தனை பேர் கலப்பு மணம் புரியப் போகிறீர்கள்? அந்த உயர்ந்த நோக்கத்தை இலட்சியமாகக் கொண்டவர்கள் எழுந்து நின்று மனம் திறக்கலாம்” என்று சொல்லி அமர்ந்தபோது மாணவர்கள் பலர் வீறுகொண்டு எழுந்து நெஞ்சு நிமிர்த்திச் சபதம் ஏற்றார்கள். அந்த ‘லட்சிய புருஷர்’களில் நானும் ஒருவனாக இருந்தேன்.
முதல்வர் மேடையிலிருந்து இறங்கி வந்து ஒவ்வொருவராகக் கை குலுக்க, மாணவிகள் [அவர்களில் யாரும் சபதம் ஏற்கவில்லை] கரவொலி எழுப்ப, அரங்கில் உற்சாகம் கரை புரண்டது.
ஆனால், அடுத்த சில நிமிடங்களில் சக மாணவன் குணசீலனின் பேச்சால் கரை புரண்ட உற்சாகம் காற்றோடு கலந்து மறைய, அங்கு இனம் புரியாத சோகம் பரவியது.
அவன் சொன்னான்: “எனக்கும் கலப்பு மணம் புரிய ஆசைதான். ஆனால்.....” என்று சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தி, எல்லோருடைய முகங்களிலும் கேள்விக்குறி தொக்கி நிற்பதைக் கவனித்துத் தொடர்ந்தான்.......
“நான் ச.......ஜாதியில் பிறந்தவன். என் ஜாதியைக் காட்டிலும் அந்தஸ்து குறைந்த ஜாதி இந்த நாட்டில் இல்லை. தாழ்த்தப்பட்ட மற்ற ஜாதிக்காரர்கள்கூட எங்களை மதிப்பதில்லை. மண உறவும் வைத்துக்கொள்வதில்லை. நான் கலப்பு மணம் செய்துகொள்ள ஆசைப்பட்டால் அது நிறைவேறுமா?”
முதல்வர் உட்பட அங்கிருந்தவர்களில் எவருக்குமே இதற்கான பதில் தெரிந்திருக்கவில்லை.
அனைவரும் சோகம் சுமந்து பிரியா விடை பெற்றோம்.
நான் கணக்கு வழக்கில்லாமல் காதல் கவிதைகள் படித்திருக்கிறேன். கொஞ்சம் கவிதைகளும் பல கதைகளும் எழுதியிருக்கிறேன்.
காதலிப்பது என்று கோதாவில் இறங்கியபோது அந்தக் கவிதைகளும் கதைகளும் எனக்குக் கை கொடுக்கவில்லை.
நான் ஆசைப்பட்ட அழகுப் பெண்களுடன் நெருங்கிப் பழக முற்பட்ட போதெல்லாம், அவர்களின் கவர்ச்சிப் பிரதேசங்களில் என் பார்வை படர, என் உணர்ச்சி நரம்புகளில் காமம் சுரந்ததே தவிர காதல் அரும்பியதே இல்லை.
அது தனிக்கதை. இப்போது வேண்டாம். கலப்பு மண லட்சியம் காணாமல் போன கதையை மட்டும் இப்போது சொல்லி முடித்துவிடுகிறேன்.
படிப்பு முடிந்து சொந்த ஊர் போய்ச் சேர்ந்தபோதே, நான் ஏற்றிருந்த ‘கலப்பு மண’ லட்சியம் என் அடிமனதின் எங்கோ ஒரு மூலையில் பதுங்கிவிட்டது. காரணம்.........
என் கல்யாண விசயத்தில் என் அப்பா போட்ட 'வெடிகுண்டு'.
“இதோ பாருடா பரமு, நிலத்தை அடகு வெச்சுக் கடன் வாங்கித்தான் உன்னைப் படிக்க வெச்சேன். சீக்கிரம் ஒரு வேலையைத் தேடிட்டு இந்தக் கடனை அடைக்கிற வழியைப் பாரு. நிலத்தை மீட்ட அப்புறம்தான் உனக்குக் கல்யாணம் காட்சியெல்லாம்.”
இதற்கப்புறமும் கலப்பு மணக் கனவைச் சுமந்து திரிவது மிகவும் சிரமமாகத் தெரிந்தது.
இரண்டு மாத கடின முயற்சியின் பலனாகக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தேன். ஒரு மாத ஊதியம் வாங்கியவுடனே அடிமனதில் பதுங்கியிருந்த கலப்பு மண லட்சியம், வெண்ணிற ஆடைத் தேவதையாய் என்னைச் சுற்றிவர ஆரம்பித்தது.
அப்பாவுக்குத் தெரியாமல், ஒரு தரகரைச் சந்தித்து என் இலட்சியத்தை எடுத்துரைத்தேன்.
”முடிச்சுடலாம்” என்றவர், சில கேள்விகளை முன் வைத்தார்.
“பொண்ணு ரொம்ப அழகா இருக்கணுமா, இல்ல ‘தேவலாம்’ போதுமா?”
“வேறு ஜாதின்னா..... தாழ்த்தப்பட்ட வகுப்பா இருந்தாலும் பரவாயில்லையா?”
“வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கணுமா, வேண்டாமா?”
எனக்குள், இலட்சியம் இருந்த இடத்தை இப்போது குழப்பம் கைப்பற்றியது.
“யோசித்துச் சொல்வதாகத் தரகரை அனுப்பி வைத்தேன்.
அப்புறமென்ன, கல்லூரியில் பாடம் நடத்திய நேரம் போக மிச்ச நேரமெல்லாம் இதே சிந்தனைதான்.
சபதம் போட்ட சக மாணவர்களில் எத்தனை பேருக்குக் கல்யாணம் ஆகியிருக்கும்? எல்லாமே கலப்பு மணமாக இருக்குமா? என்ற கேள்விகளும் அவ்வப்போது தலை காட்டின. குணசீலனை நினைத்தும் மனம் வருத்தப்பட்டது.
மாதங்கள் கரைந்துகொண்டிருந்தன.
ஒரு ஞாயிற்றுக் கிழமையின் காலைப் பொழுதில் தந்தை அழைத்தார்.
“பரமு, உனக்காக நான் பட்ட கடனை நீ அடைக்க வேண்டியதில்லை. அதுக்கு ஒரு வழி பிறந்துடிச்சி” என்று செல்லமாக என் முதுகில் தட்டினார்; சொன்னார்:
“பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருப்பா. நமக்குத் தூரத்துச் சொந்தம். நீ மறுத்துப் பேச மாட்டேங்கிற நம்பிக்கையில் வாக்குறுதி குடுத்துட்டேன். வர்ற தையில் கல்யாணம். பொண்ணு அம்பது பவுன் நகையோட, அம்பதாயிரம் பொட்டிப் பணத்தோட நம்ம வீட்டு வாசல்படி மிதிக்கப் போறா. உன் எதிர்கால மாமனார் போன வாரமே உனக்காக ஒரு புல்லட் பைக் புக் பண்ணிட்டார். சந்தோசம்தானே?”
நான் ஒரு வாரம்போல மனத்தளவில் துக்கம் அனுஷ்டித்தது என்னவோ உண்மை. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் மனதைத் தேற்றிக்கொண்டேன்.
அடுத்த பிறவியில் என் கலப்பு மண இலட்சியத்தை நிறைவேற்றுவதாகச் சபதம் செய்துகொண்டேன். [சிரிக்கிறீங்கதானே? வேண்டாங்க. கடவுள் நமக்குப் பல பிறவிகளைக் கொடுத்தது வேறு எதுக்கும் இல்லீங்க. இந்த மாதிரி நிறைவேறாத இலட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளத்தான்].
அப்புறம்?
அப்புறமென்ன, ராயல் என்ஃபீல்டு புல்லட்டில் [அந்தக் காலத்தில் இதுக்கு இருந்த மவுசு சொல்லி மாளாதுங்க] புது மனைவியோடு ஒவ்வொரு விடுமுறையிலும் உல்லாசப் பயணம்தான். “உல்லாச உலகம் எனக்கே சொந்தம்னு” அப்போ அடிக்கடி முணுமுணுத்த பாடலை இப்பவும் முணுமுணுக்கிறேன்னா பாருங்களேன்.........
இங்கே ஒரு குறுக்கீடு..........
“ஏய்யா, ‘கனவில் கரைந்த என் காதல் கல்யாண ஆசை!’னு தலைப்பே கொடுத்திட்டியே. அப்புறம் எதுக்கு இந்த வழவழா கொழகொழா கதை?"ன்னு நீங்க இப்போ கோபப்படுறீங்கதானே?
கொஞ்சம் பொறுங்க. நான் சொல்ல வந்ததைக் கடைசியா சொல்லி முடிச்சிடுறேன். அதைச் சொல்லத்தான் நீட்டி முழக்கிய இந்த என் இலட்சியக் கதை.
ஒரு ஞாயிற்றுக் கிழமை நாளில், என் இளம் இல்லக் கிழத்தியோடு ஏற்காடு மலையைச் சுற்றிப் பார்க்கப் போயிருந்தேன்.
முதலில் லேடீஸ் சீட் போனோம். அங்கேதான் எதிர்பாராம குணசீலனை அவன் மனைவியுடன் சந்தித்தேன். கை குலுக்கிக் கொண்டோம்.
அவன் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, ‘உன் இலட்சியம் நிறைவேறிடிச்சிதானே?”
என்ன சொல்வது?
அசடு வழிய, “தோத்துட்டேன்” என்றேன்.
“அன்னிக்கே சொன்னேன் இல்லையா? எனக்கும் தோல்விதான். இவள் என் ஜாதிக்காரிதான்” என்றபடி தன் மனைவியைத் தொட்டுக்காட்டிச் சிரித்தான்.
படிப்பை முடித்த பிறகு ஏற்பட்ட அனுபவங்களைப் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டிருந்தபோது அதைக் கவனித்தேன்.
அவன் மனைவிக்கு ஒரு கால் ஊனம்.
“குணசீலன், நீ ஜெயிச்சுட்டே” என்றேன்.
முதலில் ஏதும் புரியாமல் விழித்தாலும் என் பாராட்டுக்கான காரணம் புரிந்தபோது, “இது இல்லேன்னா அது. அது இல்லேன்னா இது. வாழ்க்கையில் இலட்சியங்களுக்கா பஞ்சம்?” என்று சொல்லி வாய்விட்டுச் சிரித்தான்; விழிகளில் அன்பு பொங்க ஊனமுற்ற தன் துணைவியின் தோள்களை வருடிக் கொடுத்தான். இப்போது...........
என்னைவிடச் சற்றே உயரம் குறைந்த அவன், நான் அண்ணாந்து பார்க்கும் வகையில் விஸ்வரூபம் எடுத்திருந்தான்.
பிரிய வேண்டிய கட்டம் வந்ததும் இரு கரம் குவித்து வணக்கம் சொன்னேன்.
அது வெறும் சம்பிரதாயமான வணக்கம் அல்ல; லட்சியப் பிடிப்புள்ள ஓர் உன்னத மனிதனுக்கு நான் செலுத்திய மரியாதையின் வெளிப்பாடு.
======================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக