ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

யானைகளின் கூர்த்த அறிவும் நன்றி பாராட்டும் உயர் குணமும்!!!


கேரள மாநிலத்தில் உள்ளது 'உருளந்தண்ணி ஆறு'[Urulanthanni River].

ஒரு யானைக் கூட்டம் இந்த ஆற்றைக் கடக்க முனைந்தபோது, ஒரு குட்டி யானை ஆற்றங்கரையை ஒட்டிய சகதி நிறைந்த குழிக்குள் விழுந்துவிட்டது. குழி ஆழமாக இருந்த காரணத்தால் பெரிய யானைகளால் குட்டியை மீட்க முடியவில்லை. செய்வதறியாமல் குழியைச் சூழ்ந்து நின்று தவித்தன.

குழியிலிருந்து வெளியேற முயன்று தோற்று, வலிமை இழந்துகொண்டிருந்த குட்டி யானை அபயக்குரல் எழுப்பியும்கூட,

குட்டியைக் காப்பாற்றவும் முடியாமல், விலகிச் செல்லவும் மனம் இல்லாமல் அவை[அதன் பெற்றோர் உட்பட] பதறி நின்றன.

மேலே வர முயன்று சரிந்து சரிந்து விழுந்துகொண்டிருந்த குட்டி, சோர்ந்து கண் மூடிக் கிடந்த நிலையில்.....

உதவி வேண்டி நெடுந்தொலைவுக்குக் கேட்கும் வகையில் யானைகள் ஒருங்கிணைந்து குரல் எழுப்பின.

உரத்த குரல் ஒலி கேட்டு, அண்டை அயலில் இருந்த ஊர் மக்கள், குரல் வந்த திசை நோக்கிச் சென்றார்கள்; யானைக் கூட்டம் இருப்பதைக் கண்டார்கள். அவை தங்களைத் தாக்கும் என்பதால் அவர்களில் பலரும் அவற்றை நெருங்கப் பயந்தாலும், துணிச்சலுடன் முன்னேறிய சிலர், யானைகளின் விழிகளில் சினம் தென்படாததை அறிந்து வியந்ததோடு, குட்டி யானை சேற்றுக் குழியில் சிக்கித் தவிப்பதையும் கண்டார்கள்; வெறும் கைகளால் அதை மீட்க முடியாது என்பதையும் உணர்ந்து, தங்களில் சிலரை வனத்துறை அதிகாரிகளை அழைத்துவர அனுப்பினார்கள்.

வனத்துறையினர் வாகனங்களில் வந்து சேர்ந்தபோது பகல் நேரம் கழிந்து எங்கும் இருள் சூழ ஆரம்பித்தது.

இங்கே கவனிக்கத்தக்கது என்னவென்றால், தங்களுக்கு உதவி கிடைத்திருப்பதை உணர்ந்த யானைகள் உதவிக்கு வந்தவர்களை வரவேற்பதுபோல் சூழ்ந்து நின்றனவாம்[The elephants seemed to understand that this was a good sign and welcomed the approaching vehicles by moving around.....]. 

ஆரம்பத்தில் பல சிக்கல்களைச் எதிர்கொண்ட வனத்துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, குழி தோண்டும் இயந்திரத்தால் குட்டியைச் சூழ்ந்திருந்த சேற்றை அள்ளியதோடு, அது வெளியேறுவதற்கான பாதையையும் உருவாக்கினார்கள்.

குட்டி பாதுகாப்பாக வெளியேறியது.

அதுவரை யானைக் கூட்டம் அமைதிகாத்து நின்றது குறிப்பிடத்தக்கது. பலத்த இரைச்சலுடன் இயந்திரம் இயங்கியபோதும் அவை பதற்றத்துக்கு உள்ளாகவில்லை என்பது காண்போரை வியப்புக்குள்ளாக்கும் நிகழ்வாகும்.

குட்டி, தன் பெற்றோரிடம் சென்று சேர்ந்தவுடன், யானைகள் எழுப்பிய ஒலி, மகிழ்ச்சியான தொனியில் வெளிப்பட்டதாம்.

பாதுகாப்பாகக் குட்டியைச் சூழ்ந்திருந்து அவை புறப்பட்டபோது, மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களின் கண்கள் மகிழ்ச்சியில் கசிந்தனவாம்.

அவை ஆற்றைக் கடந்தன. 

கடந்ததும், வரிசையாக நின்று, உதவி புரிந்தவர்களுக்கு நன்றி பாராட்டி மரியாதை செலுத்துவது போல் தங்களின் தும்பிக்கைகளை உயர்த்தினவாம்.

யானைகள் வெறும் விலங்குகள் அல்ல; கூர்த்த அறிவும், நன்றி பாராட்டும் மென்மையான உள்ளமும் கொண்டவை அவை என்பதை இந்நிகழ்ச்சி உறுதிப்படுத்துகிறது.

அவை தமக்கென வகுத்துக்கொண்ட வாழ்வியல் நெறிகளை மனிதன் சீர்குலைக்க முயலும்போதுதான் அவை அவனுக்குப் பரம எதிரிகளாக மாறுகின்றன என்பதை நாம் மறத்தல் கூடாது.


====================================================================================

***இப்பதிவுக்கு ஆதாரமான கட்டுரை ஆங்கிலத்தில் எழுதப்பட்டது மட்டுமல்ல, குறிப்பிட்டதொரு நிகழ்வை விவரிப்பதோடு, யானைகளின் குணாதிசயங்கள் பற்றி  விரித்துரைப்பதும் ஆகும். இங்கு, பதிவின் தலைப்புக்குத் தேவையான பகுதிகளை மட்டும் தேர்வு செய்து தொகுத்திருக்கிறேன்.

முழுக் கட்டுரையையும் வாசிக்க விரும்பினால் கீழ்க்காணும் முகவரியைச் சொடுக்குக.

https://greedyfinance.com/index.php/en/2021/08/31/locals-approach-a-distraught-herd-of-wild-elephants-and-saw-something-shocking-2/16/    -31 August 2021