பரிவுடன் அவர் தோளைத் தொட்டு, "ஆழ்ந்த சிந்தனையில் இருக்கீங்க. கொஞ்ச காலமாகவே எனக்கு முகம் காட்டிப் பேசுறதில்ல. நான் ஏதும் தப்புப் பண்ணிட்டேனா?” -வருத்தத்துடன் கேட்டார் இறைவி.
“நீ பண்ணல. நான்தான் பண்ணிட்டேன்.” -இறைவனின் குரலில் கணக்கில் அடங்காத சோகம்.
“முழுமுதல் கடவுளாகிய நீங்களா?”
“கோடி கோடி கோடியோ கோடி கோடானுகோடி உயிர்களில் மனிதனுக்கு மட்டும் ஆறாவது அறிவைக் கொடுத்து மாபெரும் தப்புப் பண்ணிட்டேன்.”
‘புரியும்படியா சொல்லுங்க.”
"நான் படைத்த மண்ணுலகில் வலிய உயிர்கள் எளிய உயிர்களைத் துன்புறுத்திட்டே இருக்கு. நான் இதை எதிர்பார்க்கல. அதைத் தடுத்து நிறுத்தி, பலவீனமான உயிரினங்களை மனிதன் காப்பாத்துவான்னு நினைச்சித்தான் அவனுக்கு ஆறாவது அறிவைக் கொடுத்தேன். நான் நினைச்சது நடக்கல. இந்த மனுசங்க.....”
கொஞ்சம் இடைவெளி கொடுத்துத் தொடர்ந்தார் இறைவன்.
“இந்த ஆறாவது அறிவு வாய்ச்சதுக்கு அப்புறம்தான் மனிதன் மரணம் பத்திச் சிந்தித்தான்; தான் எப்பவும் சாகக் கூடாதுன்னு நினைச்சான். எப்பவும் எக்காலத்தும் இன்பத்திலேயே மிதக்கணும்னு ஆசைப்பட்டான்; சொர்க்கத்தைப் படைச்சான்; செத்த பிறகு தன்னைச் சொர்க்கத்தில் சேர்க்க வேண்டி என்னைத் துதி பாடினான்.......”
நீண்டதொரு வெப்பப் பெருமூச்சு வெளிப்பட்டது இறைவனிடமிருந்து.
“கோயில்கள் கட்டி, விழாக்கள் எடுத்து இன்னும் என்னவெல்லாமோ செய்தான்; செய்கிறான். நானென்ன இதுக்கெல்லாம் மசிகிற ஆளா!?” -வாய்விட்டுச் சிரித்தார் இறைவன்; நெடுநேரம் சிரித்தார்!
“உங்களை வழிபடுறதால மனுசங்க மனசு தூய்மை அடையும்தானே?” என்றார் இறைவி.
“மனசு தூய்மை அடையணும்னா மத்த உயிர்கள் துன்பப்படுறதைப் பார்த்து இரக்கப்படணும்; அதுகளுக்கு உதவணும். அதை விட்டுட்டு, என்னைத் துதி பாடினா மனசு சுத்தம் ஆகும்கிறது சுத்தப் பொய்; பித்தலாட்டம்; புருடா; ஏமாத்து வேலை.”
இன்னும் கடுமையான கொச்சை வார்த்தைகளால் மனித இனத்தைச் சாடி முடித்த இறைவன்.....
“இந்த மனுசனுக்கு நான் ஆறாவது ஆறிவைத் தந்ததற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கு. நீண்ட காலமா படைப்புத் தொழில் செஞ்சி ரொம்பவே சலிச்சிப் போய்ட்டேன். இனி, புதிய புதிய உயிர்களை இவன் படைப்பான்; ஓய்வு எடுத்துக்குலாம்னு ஆசைப்பட்டு மோசம் போய்ட்டேன்.”
கடவுளின் குரலில் சோகம் நிரம்பி வழிந்தது.
“மனுசங்கிகிட்ட இருந்து ஆறாவது அறிவைப் பறிச்சிடப் போறீங்களா?”-சந்தேகம் கிளப்பினார் இறைவி.
ஒரு மர்மப் புன்னகையை வெளிப்படுத்திய இறைவன்.....
“இவனுகளுக்குள்ளே பல இனங்கள்; மதங்கள் இருக்கு. ஆதிக்கப் போட்டியில் அடிக்கடி சண்டை போட்டுக்கிறானுங்க. ஆறாவது அறிவைப் பயன்படுத்தி ஏராளமா அழிவுக் கருவிகளைக் கண்டுபிடிச்சி வெச்சிருக்கானுங்க. இவனுங்க திருந்தப் போறதில்ல. ஒருத்தனோட ஒருத்தன் அடிச்சிகிட்டு அவ்வளவு பேரும் அழியப் போறான். மனுச இனம் பூண்டற்றுப் போகப்போகுது. அதுக்குள்ள ஆறாவது அறிவை நான் பறிக்கணுமா என்ன?”
இறைவன் சிரித்தார். எல்லையற்றுப் பரந்து விரிந்த பிரபஞ்சமே கிடுகிடுக்க..... அதிர்ந்து குலுங்க..... குலுங்கிக்கொண்டே இருக்க..... சிரித்தார்..... சிரித்துக்கொண்டே இருந்தார்!
====================================================================================
2012ஆம் ஆண்டுப் படைப்பு
'ஊழி'... பேரழிவு நிகழும் காலம்