அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

"இந்தி படித்தால் இந்தியா முன்னேறும்!"... அமித்ஷாவின் அதிசயக் கண்டுபிடிப்பு!!!!!


"இந்தியுடன் தாய்மொழியைக் கற்றால் இந்தியா முன்னேறும்" என்ற நடுவணமைச்சர் அமித்ஷா பேசியதாகச் சொல்லி, "இது மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் முயற்சி; அமித்ஷாவின் பேச்சில் வேறு அர்த்தங்களும் அடங்கியுள்ளன" என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அவர்கள் அறிவித்திருப்பதாக, 'சன் தொலைக்காட்சி, சற்று முன்னர்[பிற்பகல் 03.15 மணி] செய்தி சொல்லிக்கொண்டிருந்தது.

"அமித்ஷா பேச்சில் வேறு அர்த்தங்களும் உள்ளதாக ராமதாஸ் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

"இந்தியோடு தாய்மொழியையும் படி" என்று சொல்லிவிட்டு, பின்னர் "இந்தியை மட்டுமே படித்தால் போதும். இந்தியாவில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து இந்தியர்களாக வாழச் செய்ய இந்தியால் மட்டுமே முடியும்" என்று சொல்லப்போகிறார் என்பதை 'பாமக' நிறுவனர் வெளிப்படையாகவே சொல்லியிருக்கலாம்.

இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அதைப் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்; இந்தி தாய்மொழி அல்லாதவர்கள் மீதும் அதைத் திணி திணி திணி என்று திணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்; கோடி கோடியாய்ச் செலவு செய்திருக்கிறார்கள்; செய்கிறார்கள். இந்தியா எந்தெந்தத் துறையிலெல்லாம் உலகோர் வியக்கும் வகையில் முன்னேறியிருக்கிறது என்பதற்கு நடுவணமைச்சர் ஒரு பட்டியல் தருதல் வேண்டும்.

தருவாரா?

சிந்தனை வளர்ச்சிக்குத் தாய்மொழியறிவு முக்கியம். ஆங்கிலம் போன்ற  அறிவியல் துறையில் வளர்ச்சி பெற்ற மொழிகள் கற்பதும் உதவிகரமாக அமையக்கூடும். இந்தி எதற்கு? 

அதைக் கற்பதால் வட இந்தியாவில் வேலை வாய்ப்பு உள்ளது என்று சொன்னவர்களெல்லாம் வாய் பொத்தி மவுனம் சாதிக்கிறார்கள். காரணம்.....

பிழைப்புக்காகச் சாரி சாரியாக வடபுலத்து மக்கள் தென் இந்தியப் பகுதிகளுக்கு வந்துகொண்டிருப்பதுதான்.

ஆக, "இந்தி படி" என்று அமித்ஷா சொல்வது இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் வாக்குகளை[தேர்தல்களில்] அள்ளுவதற்காக மட்டுமே.

இனியும், "இந்தி படி... இந்தி படி... இந்தி படி" என்று சொல்லிக்கொண்டிராமல், நாட்டின் முன்னேற்றத்திற்குத் தேவையான வழிமுறைகளை அமைச்சர் ஆராய்ந்து பேசுவாரேயானால், அது இந்தத் தேசத்துக்குப் பெரிதும் நன்மை பயப்பதாக அமையும் என்பது நம் போன்றோர் நம்பிக்கையாகும்!

====================================================================================