மனித இனம் | அழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனித இனம் | அழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 செப்டம்பர், 2021

'ஊழி'ச் சிரிப்பு!!!

இறைவி தன் அருகில் வந்து அமர்ந்ததைக்கூட உணராமல் மவுனத்தில் புதையுண்டு கிடந்தார் இறைவன்.

பரிவுடன் அவர் தோளைத் தொட்டு, "ஆழ்ந்த சிந்தனையில் இருக்கீங்க. கொஞ்ச காலமாகவே எனக்கு முகம் காட்டிப் பேசுறதில்ல. நான் ஏதும் தப்புப் பண்ணிட்டேனா?” -வருத்தத்துடன் கேட்டார் இறைவி.

“நீ பண்ணல. நான்தான் பண்ணிட்டேன்.” -இறைவனின் குரலில் கணக்கில் அடங்காத சோகம்.

“முழுமுதல் கடவுளாகிய நீங்களா?”

“கோடி கோடி கோடியோ கோடி கோடானுகோடி உயிர்களில் மனிதனுக்கு மட்டும் ஆறாவது அறிவைக் கொடுத்து மாபெரும் தப்புப் பண்ணிட்டேன்.”

‘புரியும்படியா சொல்லுங்க.”

"நான் படைத்த மண்ணுலகில் வலிய உயிர்கள் எளிய உயிர்களைத் துன்புறுத்திட்டே இருக்கு.  நான் இதை எதிர்பார்க்கல. அதைத் தடுத்து நிறுத்தி, பலவீனமான உயிரினங்களை மனிதன் காப்பாத்துவான்னு நினைச்சித்தான் அவனுக்கு ஆறாவது அறிவைக் கொடுத்தேன். நான் நினைச்சது நடக்கல. இந்த மனுசங்க.....”

கொஞ்சம் இடைவெளி கொடுத்துத் தொடர்ந்தார் இறைவன்.

“இந்த ஆறாவது அறிவு வாய்ச்சதுக்கு அப்புறம்தான் மனிதன் மரணம் பத்திச் சிந்தித்தான்; தான் எப்பவும் சாகக் கூடாதுன்னு நினைச்சான். எப்பவும் எக்காலத்தும் இன்பத்திலேயே மிதக்கணும்னு ஆசைப்பட்டான்; சொர்க்கத்தைப் படைச்சான்; செத்த பிறகு தன்னைச் சொர்க்கத்தில் சேர்க்க வேண்டி என்னைத் துதி பாடினான்.......”

நீண்டதொரு வெப்பப் பெருமூச்சு வெளிப்பட்டது இறைவனிடமிருந்து.

“கோயில்கள் கட்டி, விழாக்கள் எடுத்து இன்னும் என்னவெல்லாமோ செய்தான்; செய்கிறான்.  நானென்ன இதுக்கெல்லாம் மசிகிற ஆளா!?” -வாய்விட்டுச் சிரித்தார் இறைவன்; நெடுநேரம் சிரித்தார்!

“உங்களை வழிபடுறதால மனுசங்க மனசு தூய்மை அடையும்தானே?” என்றார் இறைவி.

“மனசு தூய்மை அடையணும்னா மத்த உயிர்கள் துன்பப்படுறதைப் பார்த்து இரக்கப்படணும்; அதுகளுக்கு உதவணும். அதை விட்டுட்டு, என்னைத் துதி பாடினா மனசு சுத்தம் ஆகும்கிறது சுத்தப் பொய்; பித்தலாட்டம்; புருடா; ஏமாத்து வேலை.”

இன்னும் கடுமையான கொச்சை வார்த்தைகளால் மனித இனத்தைச் சாடி முடித்த இறைவன்.....

“இந்த மனுசனுக்கு நான் ஆறாவது ஆறிவைத் தந்ததற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கு. நீண்ட காலமா படைப்புத் தொழில் செஞ்சி ரொம்பவே சலிச்சிப் போய்ட்டேன். இனி, புதிய புதிய உயிர்களை இவன் படைப்பான்;  ஓய்வு எடுத்துக்குலாம்னு ஆசைப்பட்டு மோசம் போய்ட்டேன்.”

கடவுளின் குரலில் சோகம் நிரம்பி வழிந்தது.

“மனுசங்கிகிட்ட இருந்து ஆறாவது அறிவைப் பறிச்சிடப் போறீங்களா?”-சந்தேகம் கிளப்பினார் இறைவி.

ஒரு மர்மப் புன்னகையை வெளிப்படுத்திய இறைவன்.....

“இவனுகளுக்குள்ளே பல இனங்கள்; மதங்கள் இருக்கு. ஆதிக்கப் போட்டியில் அடிக்கடி சண்டை போட்டுக்கிறானுங்க. ஆறாவது அறிவைப் பயன்படுத்தி ஏராளமா அழிவுக் கருவிகளைக் கண்டுபிடிச்சி வெச்சிருக்கானுங்க. இவனுங்க திருந்தப் போறதில்ல. ஒருத்தனோட ஒருத்தன் அடிச்சிகிட்டு அவ்வளவு பேரும் அழியப் போறான். மனுச இனம் பூண்டற்றுப் போகப்போகுது. அதுக்குள்ள ஆறாவது அறிவை நான் பறிக்கணுமா என்ன?”

இறைவன் சிரித்தார். எல்லையற்றுப் பரந்து விரிந்த பிரபஞ்சமே கிடுகிடுக்க..... அதிர்ந்து குலுங்க..... குலுங்கிக்கொண்டே இருக்க..... சிரித்தார்..... சிரித்துக்கொண்டே இருந்தார்!
====================================================================================
2012ஆம் ஆண்டுப் படைப்பு
'ஊழி'... பேரழிவு நிகழும் காலம்

திங்கள், 29 மார்ச், 2021

அந்தோ பரிதாபம் மனிதகுலத்தின் எதிர்காலம்!!!

'பல கோள்களையும்  நட்சத்திரங்களையும் உள்ளடக்கியது சூரியக் குடும்பம். பல சூரியக் குடும்பங்களைக் கொண்டது பால்வெளி மண்டலம். பல பால்வெளி மண்டலங்களைத் தன்னுள் கொண்டது நீளம், அகலம், வரம்பு, சுற்றளவு, திசை, மையப்புள்ளி, விளிம்பு என்று எந்தவொரு அளவுகோளுக்கும் கட்டுப்படாமல் எல்லையற்று[எந்தவொரு விவரிப்புக்கும் உட்படாதது] விரிந்து பரந்து கிடப்பது  பிரபஞ்சம்' -இது, 'பிரபஞ்சம்' என்பதற்குத் தரப்படுகிற பொதுவான விளக்கம். 

பிரபஞ்சம் குறித்து முடிவு எட்டப்படாத சில கருதுகோள்களும் உள்ளன. 'பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே இருக்கிறது' என்று சொல்லப்படுவது அவற்றுள் ஒன்று.

'பிரபஞ்சம் விரிவடைவது உண்மை என்றால், அதற்கு விளிம்பு என்று ஒன்று உண்டு என்பதை ஏற்றாக வேண்டும். அந்த விளிம்புக்கு அப்பால் என்ன உள்ளது? அங்கே பிரபஞ்சம் அல்லாத வேறு எதுவும் உள்ளதா?' என்னும் கேள்விகளுக்கு இதுகாறும் விடை இல்லை. எனவே, விரிவடைதல் என்பது ஆதாரமற்ற கூற்று என்றே கருதவேண்டியுள்ளது.

'பிரபஞ்சங்கள் பல' என்னும் கருத்தும் ஆய்வாளர்களிடையே இடம்பெற்றுள்ளது. அந்தப் 'பல' பிரபஞ்சங்கள் தவிர வெளியில் வேறு எவையெல்லாம் உள்ளன என்பதும் விடை அறியப்படாத கேள்வியாக உள்ளது.

விரிவடைவது குறித்தும், 'பல' என்னும் எண்ணிக்கை குறித்தும் திட்டவட்டமான முடிவு எட்டப்படவில்லையாயினும், பிரபஞ்சம்' என்று இருப்பது அனைவராலும் அறியப்பட்ட ஒன்றாகும்.

இருந்துகொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்சம் என்றேனும் ஒரு நாள் அழியும் என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார்கள். அதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறார்கள்.

//பெரிய உறைவு(big freeze), பெரிய உடைவு(big crunch), பெரிய உதறல்(big rip), வெற்றிட அதீத ஸ்திரத்தன்மை(vacum metastability), வெப்ப இறப்பு(heat death) என்பவை அவற்றுள் சில.

உறைதல்:

ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள், 'பிரபஞ்சத்தில் மிக மிகக் கடுமையான குளிர் நிலவும். அந்தக் குளிரினால் பிரபஞ்சம் மொத்தமும் உறைந்துபோய், அது அழிவைச் சந்திக்கும் என்று கூறியிருக்கிறார்கள். பெரும்பாலானோர் இதை நம்பவும் செய்தனர்.  அவர்கள் கூறிய அந்தப் பெரிய உறைவு  6-10 பில்லியன் ஆண்டுகள் கழித்து ஏற்படக்கூடுமாம். 

இருண்டுபோதல்:

எரிபொருள் தீர்ந்து அவை வெறும் இருள் மண்டலங்களாய் மாறுவதால் பிரபஞ்ச அழிவு ஏற்படலாம். ஹாவ்கிங் கதிர்வீச்சு விதிப்படி, கருந்துளைகளும், கேலக்ஸியும் ஆவியாகும்.

உடைவு:

100 பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர், பிரபஞ்சம் விரிவடையக் காரணமாக உள்ள 'டார்க் எனெர்ஜி' எனும் கரிய சக்தி ஒரு கட்டத்தில் 'நின்று மறு பக்கம் திரும்பும்'[?] எனவும், இதனால் பிரபஞ்சம் சுருங்கி, சடப்பொருள் உடைவு ஏற்படும் எனவும், இதன் அடர்த்தி அதிகமாகி வெப்பம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. ஒரு நிலையில், பிரபஞ்சம் மிக வேகமாகவும் பெரிதாகவும் விரிவடைந்து, ஈர்ப்புச் சக்தியை இழந்து ஒன்றுமில்லாததாக மாறிவிடும். பிரபஞ்சத்தில் எதுவுமே எஞ்சாமல் அனைத்தும் அழிந்துவிடும். இது நடக்க 16 பில்லியன் ஆண்டுகள் ஆகுமாம்//[https://tamil.boldsky.com].

'பிரபஞ்சம் முற்றிலுமாய் அழிந்துபோகும் என்பதைவிட, உறைந்தும், உடைந்து சிதறியும், அடர் இருளில் உள்ளடங்கியும், மிகை வெப்பத்தால் உருகியும் மாறுதல் அடைந்துகொண்டே இருக்கும்' என்று சொல்வதே ஏற்புடையதாக இருக்கும் என்று கருதுவாரும் உளர்.

ஆக, 'மாற்றம் ஒன்றே மாறாதது' என்னும் வழக்குக்கு ஏற்ப, பில்லியன் கணக்கிலான ஆண்டுகள் இடைவெளியில் பிரபஞ்சம் உருமாறிக்கொண்டே இருக்கும் என்பதை நம் போன்றவர்களால் புரிந்துகொள்ள இயலுகிறது. 

அண்டவெளியில் அடைபட்டுக் கிடக்கும் அதிபிரமாண்டமான பிரபஞ்சத்தின் நிலை இதுவென்றால், அற்ப மனிதர் குலத்தின் கதி 'அதோ கதி'தான்.

என்றேனும் ஒரு நாள் அழிந்துபோகவிருக்கும் மனித இனம் மீண்டும் தோன்றும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. இப்படியொரு அவலநிலைக்கு ஆட்பட்டிருப்பது புரியாமல், ஆயிரக்கணக்கில் மதங்களையும், பல்லாயிரக் கணக்கில் கடவுள்களையும் உருவாக்கி வைத்துக்கொண்டு, மனித நேயம் மறந்து, நாளும் மோதலும் சாதலுமாக, வாய்த்திருக்கும் அற்ப வாழ்நாளை வீணடிக்கும்  மனிதர்களை நினைத்தால்..... 

அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை!