பிரபஞ்சம் குறித்து முடிவு எட்டப்படாத சில கருதுகோள்களும் உள்ளன. 'பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே இருக்கிறது' என்று சொல்லப்படுவது அவற்றுள் ஒன்று.
'பிரபஞ்சம் விரிவடைவது உண்மை என்றால், அதற்கு விளிம்பு என்று ஒன்று உண்டு என்பதை ஏற்றாக வேண்டும். அந்த விளிம்புக்கு அப்பால் என்ன உள்ளது? அங்கே பிரபஞ்சம் அல்லாத வேறு எதுவும் உள்ளதா?' என்னும் கேள்விகளுக்கு இதுகாறும் விடை இல்லை. எனவே, விரிவடைதல் என்பது ஆதாரமற்ற கூற்று என்றே கருதவேண்டியுள்ளது.
'பிரபஞ்சங்கள் பல' என்னும் கருத்தும் ஆய்வாளர்களிடையே இடம்பெற்றுள்ளது. அந்தப் 'பல' பிரபஞ்சங்கள் தவிர வெளியில் வேறு எவையெல்லாம் உள்ளன என்பதும் விடை அறியப்படாத கேள்வியாக உள்ளது.
விரிவடைவது குறித்தும், 'பல' என்னும் எண்ணிக்கை குறித்தும் திட்டவட்டமான முடிவு எட்டப்படவில்லையாயினும், பிரபஞ்சம்' என்று இருப்பது அனைவராலும் அறியப்பட்ட ஒன்றாகும்.
இருந்துகொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்சம் என்றேனும் ஒரு நாள் அழியும் என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார்கள். அதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறார்கள்.
//பெரிய உறைவு(big freeze), பெரிய உடைவு(big crunch), பெரிய உதறல்(big rip), வெற்றிட அதீத ஸ்திரத்தன்மை(vacum metastability), வெப்ப இறப்பு(heat death) என்பவை அவற்றுள் சில.
உறைதல்:
ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள், 'பிரபஞ்சத்தில் மிக மிகக் கடுமையான குளிர் நிலவும். அந்தக் குளிரினால் பிரபஞ்சம் மொத்தமும் உறைந்துபோய், அது அழிவைச் சந்திக்கும் என்று கூறியிருக்கிறார்கள். பெரும்பாலானோர் இதை நம்பவும் செய்தனர். அவர்கள் கூறிய அந்தப் பெரிய உறைவு 6-10 பில்லியன் ஆண்டுகள் கழித்து ஏற்படக்கூடுமாம்.
இருண்டுபோதல்:
எரிபொருள் தீர்ந்து அவை வெறும் இருள் மண்டலங்களாய் மாறுவதால் பிரபஞ்ச அழிவு ஏற்படலாம். ஹாவ்கிங் கதிர்வீச்சு விதிப்படி, கருந்துளைகளும், கேலக்ஸியும் ஆவியாகும்.
உடைவு:
100 பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர், பிரபஞ்சம் விரிவடையக் காரணமாக உள்ள 'டார்க் எனெர்ஜி' எனும் கரிய சக்தி ஒரு கட்டத்தில் 'நின்று மறு பக்கம் திரும்பும்'[?] எனவும், இதனால் பிரபஞ்சம் சுருங்கி, சடப்பொருள் உடைவு ஏற்படும் எனவும், இதன் அடர்த்தி அதிகமாகி வெப்பம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. ஒரு நிலையில், பிரபஞ்சம் மிக வேகமாகவும் பெரிதாகவும் விரிவடைந்து, ஈர்ப்புச் சக்தியை இழந்து ஒன்றுமில்லாததாக மாறிவிடும். பிரபஞ்சத்தில் எதுவுமே எஞ்சாமல் அனைத்தும் அழிந்துவிடும். இது நடக்க 16 பில்லியன் ஆண்டுகள் ஆகுமாம்//[https://tamil.boldsky.com].
'பிரபஞ்சம் முற்றிலுமாய் அழிந்துபோகும் என்பதைவிட, உறைந்தும், உடைந்து சிதறியும், அடர் இருளில் உள்ளடங்கியும், மிகை வெப்பத்தால் உருகியும் மாறுதல் அடைந்துகொண்டே இருக்கும்' என்று சொல்வதே ஏற்புடையதாக இருக்கும் என்று கருதுவாரும் உளர்.
ஆக, 'மாற்றம் ஒன்றே மாறாதது' என்னும் வழக்குக்கு ஏற்ப, பில்லியன் கணக்கிலான ஆண்டுகள் இடைவெளியில் பிரபஞ்சம் உருமாறிக்கொண்டே இருக்கும் என்பதை நம் போன்றவர்களால் புரிந்துகொள்ள இயலுகிறது.
அண்டவெளியில் அடைபட்டுக் கிடக்கும் அதிபிரமாண்டமான பிரபஞ்சத்தின் நிலை இதுவென்றால், அற்ப மனிதர் குலத்தின் கதி 'அதோ கதி'தான்.
என்றேனும் ஒரு நாள் அழிந்துபோகவிருக்கும் மனித இனம் மீண்டும் தோன்றும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. இப்படியொரு அவலநிலைக்கு ஆட்பட்டிருப்பது புரியாமல், ஆயிரக்கணக்கில் மதங்களையும், பல்லாயிரக் கணக்கில் கடவுள்களையும் உருவாக்கி வைத்துக்கொண்டு, மனித நேயம் மறந்து, நாளும் மோதலும் சாதலுமாக, வாய்த்திருக்கும் அற்ப வாழ்நாளை வீணடிக்கும் மனிதர்களை நினைத்தால்.....
அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை!
======================================================================================