வியாழன், 3 ஜனவரி, 2019

சபரிமலை...பரிகார பூஜை பலன் தருமா?!

சபரிமலை ஐயப்பசுவாமியைத் தரிசனம் செய்யும் முயற்சியில், முதல்முறை தோல்வியைத் தழுவிய, மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 'கனகதுர்கா'[வயது 44]வும், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 'பிந்து அம்மினி'[வயது 40]யும் இரண்டாம் முறையாக மேற்கொண்ட முயற்சியில், அய்யப்பனைத் தரிசித்ததன் மூலம் பிரபஞ்ச சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் 01 மணிக்கு மேல், கறுப்பு உடை உடுத்து, சக பக்தர்களுடன் தங்களின் பயணத்தை மேற்கொண்டார்கள் இருவரும்.

18 படிகள் வழியாகச் செல்லாமல், கோயிலின் பின்பக்க வழியாகச் சென்று இவர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், முதல் முறையாக, இந்த இரண்டு நடுத்தர வயதுப் பெண்களும் ஐயப்பனைக் கண்குளிரக் கண்டுகளித்துத் தரிசனம் செய்த அபூர்வ நிகழ்வு நாடெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வுக்கிடையே.....

இந்த இரு பெண்களும் கோயிலுக்குள் நுழைந்ததால், கோயில் தீட்டுப்பட்டுவிட்டதாகக் கருதி, மிக்க கவலையுள் மூழ்கினார்களாம் பந்தளம் ராஜவம்சத்தைச் சேர்ந்தவர்கள்.

அந்த வம்சத்தைச் சேர்ந்த 'சஷி வர்மா' கேட்டுக்கொண்டதன் பேரில், கோயில் மேல்சாந்தியும் தந்திரியும் கலந்தாலோசித்ததோடு, கோயிலின் நடையைச் சாத்தி, சுத்தப்படுத்திப் 'பரிகார பூஜைகள்' செய்து முடித்தார்களாம்.

பரிகார பூஜைகள் செய்ததன் விளைவாக, கோயிலைக் களங்கப்படுத்திய தீட்டானது முற்றிலுமாய் நீங்கிவிட்டதாகப் பக்தகோடிகள் பெரிதும் மகிழ்ந்தார்களாம்.

இதன் மூலம், நடுத்தர வயதுப் பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான பிரச்சினை தீர்ந்துவிட்டதாக நாம் நம்பலாம்.

இனி, அனைத்து வயதுப் பெண்களையும் ஐயப்பனைத் தரிசனம் பண்ண அனுமதிக்கலாம். இதனால், தினம் தினம் சாமியின் சந்நிதானத்தில் தீட்டுப்படுமே என்று எவரும் கவலை கொள்ளத் தேவையில்லை.

கோயில் தினம் தினம் தீட்டுக்குள்ளானாலும், தினம் ஒரு தடவை..... ஒரே ஒரு தடவை பரிகார பூஜை செய்தால் தீட்டு என்னும் அசிங்கம் முற்றிலுமாய்த் துடைக்கப்பட்டுவிடும் என்பது உறுதி.

சாமியே சரணம்! ஐயப்ப சாமியே சரணம்!

இப்பதிவு indiblogger முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.