வெள்ளி, 10 ஏப்ரல், 2020

ஒரு தறுதலை ‘தலைவர்’ ஆவது எப்படி?![விறு விறு சிறுகதை]

ரவணமுத்துவுக்கு நாளை விடுதலை. சிறையிலிருந்து வெளிவந்தவுடன் அமைச்சர் செல்லையாவுக்கு இந்த உலகத்திலிருந்தே விடுதலை அளிக்கப்போகிறான். நீதிமன்றத்தில் அவனுக்குத் தண்டனை வாசிக்கப்பட்டபோதே எடுத்த முடிவு இது.

“முத்து, எதுக்கும் பயப்படாதே. இளவட்டங்களை ஒன்று திரட்டு; நம் ஜாதி எதிரிகளை வெட்டிப்போடு; அவனுக வீடுகளைத் தீ வெச்சிக் கொளுத்து. எல்லார்த்துக்கும் நான் இருக்கேன்” என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஊரில் நடந்த ஜாதிக் கலவரத்தில் சரவணமுத்துவுக்குக் காலில் கத்தி கட்டிவிட்டவர் இந்தச் செல்லையா.

கலவரம் தொடர்பாக, சட்டம் சரவணமுத்துவைக் கைது செய்தது. இவனைத் தூண்டிவிட்டதே செல்லையாதான் என்பதை நாளிதழ்கள் கோடிகாட்டியபோது, “வன்முறைக்குத் தலைமை தாங்கிய சரவணமுத்துவுக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. எனக்கு வன்முறையில் எள்ளத்தனையும் நம்பிக்கை கிடையாது” என்று சத்தியப்பிரமாணம் செய்தவர் இந்தச் செல்லையா. இவரைத்தான் இப்போது பழிவாங்க முடிவெடுத்திருக்கிறான் சரவணமுத்து.

பேட்டை ரவுடியான செல்லையா, ஓர் அரசியல் கட்சியின் வட்டச் செயலாளராகவும் இருந்தவர். கட்டப்பஞ்சாயத்து, சொத்து அபகரிப்பு என்று குற்றச் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டே அப்போதைய ஆளுங்கட்சிக்கு எதிராக இவரின் கட்சி போராட்டங்களில் ஈடுபட்டபோதெல்லாம் இவரும் போராட்டங்களில் கலந்துகொள்வார், பல வகைகளிலும் சிறை சென்ற அனுபவம் உண்டு.

ஜாதி அபிமானத்தால் இவரின் தொண்டனாக இருந்தவன் சரவணமுத்து. இவர் தண்டனை அனுபவித்து விடுதலை ஆகும்போதெல்லாம், பேட்டை வாலிபர்களைத் திரட்டிச் சென்று, “தியாகி செல்லையா வாழ்க! தன்னிகரில்லாத தலைவன் வாழ்க!” என்றெல்லாம் முழக்கங்கள் எழுப்பி, ஊர்வலமாக அழைத்துவருவான்; இவருக்காக இன்னும் எப்படியெல்லாமோ பாடுபட்டவன் இவன். ஆக, செல்லையா, கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக ஆக்கப்பட்டதில் இவனுக்கு முக்கியப் பங்குண்டு.

இவன் கைதாகி, வழக்கு நடைபெற்றபோது வேறு ஆட்கள் மூலம் பெயருக்குக் கொஞ்சம் பண உதவி செய்தார் செல்லையா. இவன் ஐந்தாண்டுக் கடுங்காவல் தண்டனை பெற்றுச் சிறை சென்றபோது நடந்த தேர்தலில் இவர் சார்ந்திருந்த கட்சி வெற்றிபெற்றுவிட, அமைச்சர் ஆனார். அதன் பிறகு, தன் கவுரவத்துக்கு எந்தவிதப் பங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இவனுடனான தொடர்பை முற்றிலுமாய் அறுத்துக்கொண்டார்.

தான் விடுதலை ஆனவுடன், அமைச்சரானதற்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் ஆளுயர மாலையுடன் சென்று, தக்க தருணம் பார்த்து அவரைத் தீர்த்துக்கட்டுவது என்று தீர்மானித்தான் சரவணமுத்து.

மாமூல் சடங்குகளுக்குப் பிறகு சரவணமுத்து விடுதலை செய்யப்பட்டான். சிறியிலிருந்து வெளியே அவன் காலடி வைத்தபோது ஒரு பேராச்சரியம் காத்திருந்தது.

இவனின் பேட்டை வாலிபர்கள் பெரும் கும்பலாகச் சேர்ந்து இவனை வரவேற்றார்கள். மலர்மாலைகள் இவனின் கழுத்தை நிறைத்தன. ”மாவீரன் சரவணமுத்து வாழ்க! தன்னிகரில்லாத் தியாகி வாழ்க! எங்கள் தலைவன் சரவணமுத்து வாழ்க!” என்று அவர்கள் முழங்கினார்கள்.

சரவணமுத்துவின் முகத்தில் ஆச்சரிய ரேகைகள் படர்ந்தன. யோசித்தான்; தலைமைப் பதவி தன்னைத் தேடி வருவதை உணர்ந்தான்; தானும் ஒரு செல்லையாவாக வாழ்க்கையில் உயர்ந்திட முடியும் என்று நம்பினான். அப்போதிருந்த சூழலில் செல்லையாவைக் கொலை செய்துவிட்டு மீண்டும் சிறை சென்று வாழ்நாளை வீணாக்குவதோ, தூக்கில் தொங்கி உயிரிழப்பதோ முட்டாள்தனம் என்று எண்ணினான்.

சிரித்த முகமும் நிமிர்ந்த நெஞ்சுமாகத் தொண்டர்களை நோக்கிக் கையசைத்தான் சரவணமுத்து.

[கதை, 100% கற்பனை]
========================================================================
பழைய ‘இதயம் பேசுகிறது’[09.01.2000] வார இதழில் வெளியான என் கதை இது.