வெள்ளி, 17 ஏப்ரல், 2020

தமிழை அழித்தவர்கள்...அழித்துக்கொண்டிருப்பவர்கள் தமிழினத் தலைவர்களே!!!

உலகமே ஒரு நாள் அழிஞ்சிடுமாம். இப்போ, மொழி அழிஞ்சா என்ன, இனம் அழிஞ்சா என்ன!!!


தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது என்பது சகித்துக்கொள்ள இயலாத உண்மை. காரணம், யாரெல்லாம் தமிழினத்தின் தலைவர்கள் என்று நம்பினோமோ, அவர்களெல்லாம், நாட்டை ஆளும் வாய்ப்பைப் பெற்ற பிறகும்கூட,  தமிழினத்தின் துரோகிகளாகச் செயல்பட்டதுதான்.

சுற்றி வளைக்காமல் தலைப்புக்கு வருகிறேன்.

ஓமந்தூரார் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த ஐயா அவிநாசிலிங்கம் செட்டியார் மட்டுமே, செத்துக்கொண்டிருந்த தமிழ் மொழிக்கு உயிர் கொடுத்தார் என்று சொல்லலாம்.

அவர் காலத்தில்தான், உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமொழிக் கல்வி நீக்கப்பட்டு, தமிழ் பயிற்று மொழியாக ஆக்கப்பட்டது. ஒரு சில பள்ளிகளில் மட்டுமே ஆங்கிலப் பயிற்று மொழிக் கல்வி விட்டுவைக்கப்பட்டிருந்தது, வேற்று மாநிலங்களிலிருந்து வரும் தமிழ் தெரியாத அதிகாரிகளின் பிள்ளைகளுக்காக.

மாண்புமிகு பக்தவத்சலனார் முதல்வராக இருந்தபோது, பள்ளியிலுள்ள அனைத்து வகுப்புகளிலும் ஆங்கிலப் பயிற்று மொழிப் பிரிவு தொடங்க அனுமதித்தார். அகற்றப்பட்ட ஆங்கில ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கியது

1967இல் ஆட்சியைக் கைப்பற்றிய அறிஞர் அண்ணாத்துரை, “Hindi never English ever" என்று சொன்னார். "Hindi never Tamil ever" என்றோ, “English never Tamil ever" என்றோ சொன்னதில்லை. திராவிட இயக்கத்தின் பெரும்பாலான தலைவர்கள் ஆங்கில மோகிகளே.

“எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்று முழங்கிய கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், நிர்வாகத் துறைகளில் தமிழைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தினாரே தவிர, கல்வி நிலையங்களில் அதிகரித்துக்கொண்டிருந்த ஆங்கில ஆதிக்கத்தை ஒழித்திட முயற்சி மேற்கொண்டாரில்லை.

மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் முதலான அறிவியல் துறைகளில் தமிழை வளர்ப்பதற்கான முயற்சிகளிலும் கவனம் செலுத்தவில்லை. 

1971இல் எம் ஜி.ஆர். ஆட்சி. “எண்ணுக தமிழில் , எழுதுக தமிழில்” என்று முழக்கமிட்டார். எல்.கே.ஜி., யூ.கே.ஜி என்று ஆங்கில நர்சரிப் பள்ளிகள் வீதிக்கு வீதி காளான்கள் போல் முளைக்கத் தொடங்கியது இவர் காலத்தில்தான். புரட்சித்தலைவியார் ஆட்சியிலும் அது தொடர்ந்தது.

இன்றளவில், தமிழில் பயின்றோருக்கு வேலை வாய்ப்பில் 20% முன்னுரிமை அளித்திருப்பது ஆறுதல் தருகிற ஒன்று. இது போதாது.

ஒரு மொழி என்ற அளவில் ஆங்கிலம் கற்பது தேவைதான்; கட்டாயமும்கூட. தமிழில் படித்தால்தான் சுயமாகச் சிந்திக்க முடியும்; மாணவர்கள் பல்துறை அறிஞர்களாக ஆக முடியும் என்பதெல்லாம் ஆளுவோருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியும்தான். ஆனால், இடைவிடாத பரப்புரைகளின் மூலம் மக்களை நம்பச் செய்யும் முயற்சியில் இவர்கள் ஈடுபடுவதில்லை.

பக்கத்தில் இருக்கிற மலேசியாவில் மலாய் மொழியில் மருத்துவக் கல்வி போதிக்கப்படுகிறது.

சொந்த நாட்டில்[இஸ்ரேல்] வாழத் தொடங்கியவுடன் யூதர்கள் தங்கள் தாய்மொழியான ஹீப்ரு மொழியை வெகு வேகமாக வளர்த்தார்கள். அது அங்கு பல்கலைக்கழக மொழியாக உள்ளது.

உலக நாடுகளில் மிகப் பலவும் தத்தம் தாய்மொழியிலேயே கல்வி கற்றுத் தருகின்றன.  கல்வி கற்கவோ, வேலை தேடியோ அயல் நாடுகளுக்குச் செல்ல நேர்ந்தால் அந்தந்த நாட்டு மொழியைக் குறுகிய காலத்தில் கற்கிறார்கள். அறிவியல் ரீதியாக அதற்கான வாய்ப்புகள் இன்று பெருகியுள்ளன.

இவையெல்லாம், பிள்ளைகளைப் பெற்றெடுத்த புண்ணியவான்களுக்கு உறைப்பதில்லை. ஆளுவோரும் இது குறித்துக் கவலைப்படுவதில்லை.

“தந்தைமார் எல்லாம் தாய்மொழி வேண்டாம் என்றாலும், ‘தாய்மொழியில்தான் படிப்போம்’ என்பதாகப் பிள்ளைகள் சொல்ல வேண்டும்” என்று சொல்லிப்போனார் காந்தியடிகள்.

நம் தமிழ்நாட்டுப் பிள்ளைகள் அவ்வாறு சொல்லும் காலம் வருமா?

வராது...வரவே வராது!
========================================================================
‘ஓம்சக்தி’ மாத இதழில்[ஆகஸ்டு, 1998] வெளியான, மறைந்த திரு.நா.மகாலிங்கம் அவர்களின் கட்டுரையிலிருந்து திரட்டிய கருத்துகளின் தொகுப்பு இப்பதிவு.