ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

அனைத்துக்கும் ஆசைப்பட்ட ஜக்கி வாசுதேவ்!!!

[ஒரு கையால் ஆசீர்வாதம் பண்ணுகிறவர் ‘மகான்’. இரண்டு கைகளாலும் பண்ணுகிறவர் ‘அவதாரம்’!]

கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் பலர். அதே கடவுளை வைத்து உலகளவில் பிரபலம் ஆனவர்கள் மிகச் சிலர். அந்தச் சிலரில் நம்ம ஊர் ஜக்கி வாசுதேவும் ஒருவர். சுயம்புவாக, ‘சத்குரு’ ஆனவர்.

‘அனைத்துக்கும் ஆசைப்படு’ என்னும் தலைப்பில், ஆனந்த விகடனில் இவர் எழுதிய தொடர் கட்டுரையை அதே விகடன் 2005இல் நூலாகவும் வெளியிட்டது. அது, பல பதிப்புகளாக வெளிவந்துள்ளது.

அனைத்துக்கும் ஆசைப்படு என்று ஜக்கியார் சொன்னது தனக்கும் சேர்த்துத்தான் என்பதை, அதில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்[கூகுளில் ஜக்கி வாசுதேவ் என்று தட்டச்சுங்கள்; பிரமிப்பீர்கள்!].

வாழும் வகை குறித்துத் தன் ரசிகர்களுக்கு ஏராள அறிவுரைகள் வழங்கும் ஜக்கி வாசுதேவ், கடவுள் குறித்த தன் எண்ணங்களையும் பதிவு செய்திருக்கிறார். வழக்கம்போல, நானும் என் சந்தேகங்களைக் கேள்விகளாக்கியிருக்கிறேன்.

‘இயற்கைச் சீற்றங்களால் உயிர்கள் பலி வாங்கப்படுவதை வேடிக்கை பார்ப்பாரா கடவுள்?’ என்று ஓரிடத்தில் கேள்வி எழுப்பி, அவர் கருணை வடிவானவர் என்று பதில் தருகிற ஜக்கியார், பிறிதோரிடத்தில், ‘கோடி ரூபாய் கொடுத்தாலும் உங்களுக்காகக் கடவுள் தன் சுண்டுவிரலைக்கூட நகர்த்த மாட்டார்’ என்று சொல்லி நம்மைப் புருவம் உயர்த்த வைக்கிறார்.

‘கால்களையும் கண்களையும் உங்கள்[மனிதர்களை] உடம்பில் வைத்துப் படைத்து உங்களைப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார் கடவுள்’ -ஜக்கி

எதற்கு அனுப்பினார்? -நான்.

‘உங்கள் வாழ்க்கையை உங்கள் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். கடவுள் கையில் கொடுக்காதீர்கள்’ -ஜக்கி

கை கொடுக்க நீங்கள் இருக்கும்போது கடவுளிடம் ஏன் கொடுக்கிறோம்?!

‘கடவுளை நீங்கள் வளர்க்கும் நாயைப் போல நினைத்துவிட்டீர்கள். நாய்க்குப் போடும் பிஸ்கட்டைப் போல ஆண்டவனுக்கு எதையோ எறிவீர்கள். அவரிடம் ‘அதைக் கொடு, இதைக் கொடு’ என்று மனசுக்குத் தோன்றியதையெல்லாம் கொண்டுவரச் சொல்வீர்கள்[இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ வார்த்தை ஜாலம் புரிகிறார்].’ -ஜக்கி

நீங்கள் எதையும் கேட்பதில்லையா? அப்புறம் எதற்குப் பிரமாண்டமான  ஆதியோகி சிலை? பூஜை, ஆட்டம் பாட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம்?

உங்களுக்குப் பிரியமான காரியம் எதுவோ அதை முழுமையாகச் செய்தால் கடவுளுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்’ -ஜக்கி 

கடவுளை நெருங்கிட்டா கேட்பதெல்லாம் கொடுப்பாரா அவர்?

‘உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளத்தான் கோயிலுக்குப் போகிறீர்கள். நேர்மையாக இருங்கள். கடவுளிடம் பேரம் பேசாதீர்கள்’ -ஜக்கி

படைச்சவர் அவர். அவரிடம் பேசாம உங்களிடமா பேரம் பேசுவது?

‘தெய்வச் சக்தியைத் தேக்கி வைக்க மற்ற வடிவங்களைவிட லிங்கம்தான் சிறந்தது. தியான லிங்கம் வெறும் கற்சிற்பமல்ல. அதில் அளப்பரிய சக்தி உயிரோட்டத்துடன் இயங்குகிறது. மதங்களுக்கும் இதற்கும் தொடர்பு ஏதுமில்லை’ -ஜக்கி

நிறையவே தேக்கி வைத்திருக்கிறீர்களா? அந்தச் சக்தியை வைத்து மக்களுக்கு நீங்கள் செய்த நன்மைகள் என்ன?
=======================================================================