ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

“அந்த முருகன் எங்கே போனான்?!”

தமிழர்களின் கடவுள் நீங்கள் நினைக்கிற மாதிரி இருந்ததில்லை. தமிழர்கள் இயற்கையைத்தான் கடவுள் என்றார்கள். இயற்கை என்றால் அழகு. அழகு என்றால் முருகு. முருகு ‘முருகன்’ ஆயிற்று என்றார் திரு.வி.கலியாண சுந்தர முதலியார்.

சரி, அந்த முருகன் எங்கே போய்விட்டான்? 

இப்போது இருக்கிற முருகன் அந்த முருகன் அல்ல. ஆரியப்புராணப்படி, சிவபெருமான் மகன் சுப்ரமணியன் என்று கற்பனை செய்யப்பட்டவன்.

இன்னொருவர், சிவன் தமிழர் கடவுள் என்கிறார். ‘அவன் அன்பின் உருவம்’ என்று விளக்கமும் தருகிறார்.

இன்றிருக்கும் சிவன் அன்பு சிவனா?

அன்பே உருவான சிவன் கையில் வேலாயுதம் சூலாயுதம் எல்லாம் ஏன்? 

இப்படிக் கேள்வி எல்லாம் கேட்டால், ஆரியரின் கைங்கரியம் என்கிறீர்கள். 

அப்புறம் ஏன் அவர்கள் கற்பித்த சாமிகளையெல்லாம் கும்பிடுகிறீர்கள் என்று கேட்டால் யாரும் கவலைப்படுவதில்லை.

சரித்திரச் சான்றுகளின்படிப் பார்த்தால், புத்தர்தான் அறிவைக்கொண்டு ஆராய்ந்து சொன்னவர். சுய அறிவுடன் சிந்தித்ததால்தான் அவர் பெரிய நாத்திகர் ஆனார்.

புத்தர் அறிவுவாதி; ஆராய்ச்சிவாதி. அதனால்தான் அவரின் கொள்கைகளை மக்கள் அறியவிடாமல் அழித்துவிட்டார்கள்; அவர் ஆற்றிய தொண்டுகளையெல்லாம் மூடி மறைத்துவிட்டார்கள்.
                                            *                                *                            *
“அந்த முருகன் எங்கே போனான்?” என்று கேள்வி எழுப்பியதும், அதன் தொடர்ச்சியாகத் தமிழர்தம் சிந்தனையைத் தூண்டும் கருத்துகளைச் சொன்னதும் நான்[‘பசி’பரமசிவம்] அல்ல. 

எல்லாம் பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் சொன்னவை.
=====================================================================
நன்றி: திருமழபாடி முனைவர் அ.ஆறுமுகம்[நூல்:‘பெரியார் சிந்தனைகளில் சூடும் சுவையும்’] அவர்களுக்கு.