செவ்வாய், 18 மே, 2021

எழுத்தாளர் 'கி.ரா.'வின் 'எடக்குமடக்கு'க் கதை!!

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இந்த மீள்பதிவு[07.11.2015].

கதை:              "உனக்குப் பிறந்தது எத்தனை? ஊரானுக்கு எத்தனை?"

மியோட்டில் வைத்து எதையோ ஊதிக்கொண்டிருந்தார் ஆசாரியார். நகை செய்வதற்காக ஒருவன் அங்கு வந்தான்.

வந்தவனைப் பார்த்து,  “வா குடும்பா, உட்காரு” என்றார் ஆசாரியார். வந்தவனும் உட்கார்ந்தான்.

ஷேமலாபங்களை விசாரித்துவிட்டு, “உனக்கு எத்தனை குழந்தைகள்?” என்று கேட்டார் ஆசாரியார்.

“எட்டுக் குழந்தைகள்’ என்றான் வந்தவன்.

ஆசாரியார் தனக்குள்ளே ஒரு கள்ளச் சிரிப்புச் சிரித்துக்கொண்டு, “ஓஹோ அப்படியா? இந்த எட்டில் உனக்குப் பிறந்தது எத்தனை? ஊரானுக்குப் பிறந்தது எத்தனை?” என்றார்.

கோபம் தலைக்கேறியது வந்தவனுக்கு.

“ரொம்பத்தான் கள்ளத்தனம் உமக்கு. உம்மை என்ன செய்கிறேன் பாரும்” என்று வேட்டியை இறுக்கமாகக் கட்டினான்.

௳றைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவாக இந்த மீள்பதிவு[

அந்நேரம் அங்கே தற்செயலாய் வந்த நாயக்கர் ஒருவர், அவனுடைய ஆவேசத்தைப் பார்த்து, “ஏய்...ஏய்...கொஞ்சம் பொறு’ என்று அவனைச் சமாதானப்படுத்தி, என்ன நடந்தது என்று விசாரித்தார். அவனும் நடந்ததைச் சொன்னான். நாயக்கர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்;  “இதை வித்தியாசமா எடுத்துக்கொள்ளாதே. உனக்கு ஆண் குழந்தை எத்தனை? பெண் குழந்தை எத்தனை?” என்று கேட்டார்.

“ஆண்கள் நாலு; பெண்கள் நாலு.”

“இந்த ஆண்கள் நாலுபேரும்தான் உனக்கானவர்கள். இவர்கள்தான் உன் வீட்டோடு இருப்பவர்கள். பெண்கள் நாலுபேரையும் பிறத்தியாருக்குக் கட்டி வைத்து அனுப்பிவிடுவாய். அவர்கள் நாலுபேரும் ஊரான்களுக்குத்தான் சொந்தம். ஆசாரியார் கேட்ட கேள்வியில் தப்பில்லேன்னு இப்போ புரிஞ்சுதா?” என்றார் நாயக்கர்.

வந்தவன், “இந்த டக்கு வச்ச பேச்சையெல்லாம் நான் என்னத்தைக் கண்டேன்” என்று சொல்லி, வெட்கத்தோடு இறுக்கிக் கட்டிய வேட்டியைத் தளர்த்திவிட்டான்.

======================================================================