வியாழன், 16 செப்டம்பர், 2021

'அரைநிர்வாணம்' எல்லாமே ஆபாசம் அல்ல!!!


அந்தக் கடற்கரை முழுக்க அரைநிர்வாண மனிதர்கள்.

உடை உடுத்துவதில் கட்டுப்பாடு இல்லை. ஆண்கள் குட்டைக் கால்சட்டையுடனும்,  பெண்கள்  உடலோடு ஒட்டிய குட்டிக் குட்டி மார்புக் கச்சை & ஜட்டியுடன் நடமாடுகிறார்கள்.

படுத்துக் கிடக்கிறார்கள்; பார்வையை அந்தரத்தில் ஊடுருவவிட்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். 

காற்று வாங்க வரும் இடத்தில் இந்த அரை நிர்வாணக் கோலம் எதற்கு?

சூரிய பகவானின் தரிசனம் வாழும் இடங்களில் எளிதில் வாய்க்காததால், வைட்டமின்[D] பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக இருக்கலாம்.

மன அழுத்தத்தைக் குறைப்பதற்குத் தோதான இடம் கடற்கரைதான் என்பதாகவும் இருக்கக்கூடும்.

கடற்கரைக் காற்று மாசு கலவாதது; சுவாசித்தால் மூச்சுத் திணறல், சளித் தொல்லை போன்றவற்றிலிருந்து விடுபடுவது சாத்தியம் என்பதாகவும் இருக்கலாம்.

கண் மூடி, மௌனித்துக் கிடந்து தியானம் செய்யவும், ஆழ்ந்து சிந்திக்கவும் ஏற்ற இடம் இது என்னும் நம்பிக்கையும் ஏற்கத்தக்க காரணம்தான்.

ஆக, காரணம் எதுவாயினும்.....

நீண்ட பெரிய கடற்கரையெங்கும் காணக் கிடக்கும் அவர்களில் எவருடைய பார்வையிலும் கள்ளத்தனம் இல்லை; காமம் கசியும் விரசம் கலந்திருக்கவில்லை

அங்க லாவண்யங்களைக் காட்சிப் பொருளாக்கவோ, அதை எதிர்பார்த்தோ வந்தவர்கள் அல்ல அவர்கள். வந்த இடத்தில் சிறு சிறு தவறுகளுக்குக்கூட இடம் தராமல், பிறரை மதித்து, பிறர் மதிக்க நடந்துகொள்கிறார்கள்.

புகைப்படம் எடுப்பவர்கூட மதிக்கத்தக்கவராகவே தெரிகிறார். 'எவளுடைய மார்புக் கச்சையேனும் நெகிழ்ந்து சரிந்தால் படம் பிடிக்கலாம்' என்றெண்ணும் கழிசடையாக இல்லாமல், எதிர்ப்படுவோரையெல்லாம் எதார்த்தமாகப் படமாக்கியிருக்கிறார். 

அயல்நாட்டவர்  என்றாலே 'கடற்கரைகளைத் தேடிப் போய் அம்மணக் கோலத்தில் ஆபாசம் காட்டுபவர்கள்; அசிங்கம் பண்ணுகிறவர்கள்' என்ற நம் தப்பான எண்ணத்தைத் தவிடுபொடி ஆக்குகிறது இந்தக் கடற்கரைக்  காட்சி. 

அந்தக் காட்சியைக் கண்டு மகிழ்ந்திடக் கீழ்க்காணும் காணொலியைச் சொடுக்குங்கள்.