வியாழன், 17 பிப்ரவரி, 2022

காவிகளின் கனவும் தமிழன் என்றொரு இனமும்!!

சில நாட்களுக்கு முன்பு "ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் இந்தியப் பிரதமராக ஆவார்" என்று 'ஓவைசி' பேசினார். அதை எவரும் கண்டித்ததாகத் தெரியவில்லை.

பேசியவர் இந்தியக் குடிமகன். அவர் விருப்பத்திற்கிணங்க இந்தியப் பிரதமர் ஆகவிருக்கும் 'ஹிஜாப்' அணிந்த பெண்ணும் இந்தியக் குடிமகளாகவே இருப்பாள் என்பதால்,  அவ்வாறு பேசுவதில் தவறேதும் இல்லை என்பது காரணமாக இருக்கலாம்.

சற்று முன்னர், தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் கர்னாடகா அமைச்சர் 'ஈஸ்வரப்பா' என்பவர், "இந்தியத் தேசியக் கொடியான மூவர்ணக் கொடிக்குப் பதிலாக என்றேனும் ஒரு நாள் 'காவிக் கொடி' பறக்கக்கூடும்" என்று அறிவித்ததை அறிய முடிந்தது.

இச்செய்தி ஏற்கனவே  நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளது.

#கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா நேற்று மாலை பெங்களூருவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, அவரிடம் தேசியக் கொடிக் கம்பத்தில் காவிக் கொடி ஏற்றப்பட்ட சர்ச்சை தொடர்பாகப் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர்,  "இது சர்ச்சைக்குரிய விஷயம் கிடையாது" என்று பதில் கூறினார். "கொடிக்கம்பம் என்பது பொதுவானது. அதில் எப்பொழுதும் தேசியக் கொடி மட்டும் ஏற்றப்படுவது கிடையாது"[தேசியக் கொடியை இறக்கிவிட்டுக் காவிக் கொடி ஏற்றுவது தப்பில்லையா?] என்று பதிலளித்த நிலையில், கன்னட நாடு பிறந்த தினத்தில் கொடிக் கம்பத்தில் கர்நாடகக் கொடியும் ஏற்றப்படுவது வாடிக்கையான ஒன்று. அதேபோல் நேற்று காவிக் கொடி ஏற்றப்பட்டுள்ளது" என்றார்.

"என்றாவது ஒருநாள் 200 வருடங்கள் கழித்து அல்லது 500 வருடங்கள் கழித்து நிச்சயம் காவிக்கொடி தேசியக் கொடியாக மாறலாம்"[https://www.malaimurasu.com/posts/india/The-saffron-flag-will-one-day-definitely-become-the-national-flag] என்றும் தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்#

இதைச் சில அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்திருக்கிறார்கள்; யாரும் அவர் தண்டிக்கப்படுதற்குரியவர் என்று சொன்னதாகத் தெரியவில்லை['பஜக' கட்சிக்காரர் என்பதால்?].

இந்த நிலையில் நம் அடிமனதிலும் இம்மாதிரியான ஆசை கிளர்ந்தெழுவதைத் தவிர்க்க இயலவில்லை. அது.....

"தமிழர்களாகிய எங்களுக்கென்று ஒரு கொடி இருக்கிறது. அது, 'தமிழ்' பேசும் இனத்தவரான எங்களின் கொடி. என்றாவது ஒரு நாள், ஒரு மதத்தின் சின்னமான காவிக்கொடி தேசியக் கொடியாக மாறலாம் என்றால், எங்கள் இனத்தின் சின்னமான கொடியும் தேசியக் கொடியாக மாறக்கூடும்" என்று சொல்வதற்குத் தமிழர்களுக்கு உரிமை உண்டு" என்பதே.

ஆனால்.....

நாம் அவ்வாறெல்லாம் சொல்ல விரும்பவில்லை; "இனியும் சொல்லத் தூண்டாதீர்கள்" என்று மட்டுமே ஈஸ்வரப்பா போன்ற காவிக் கட்சிக்காரர்களிடம் வேண்டுகோள் வைக்கிறோம்.

==========================================================================