திங்கள், 28 மார்ச், 2022

பதவிக்காகக் கற்பைக் காணிக்கை ஆக்குகிறார்களா நம் பெண்கள்!?!?

"பாலுறவுச் சுகம் தந்து வேலை வாய்ப்பைப் பெறலாமா?"

"பதவி உயர்வுக்கும் இதைப் பயன்படுத்தலாமா?"

'26-30'[வயதினரை அதிக அளவில் உள்ளடக்கியது] பெண்களிடம்[இந்தியாவில்தான்! துல்லியமான எண்ணிக்கை தரப்படவில்லை] இந்தக் கேள்விகளைக் கேட்டபோது, "ஆம்" என்று திட்டவட்டமான பதிலைத் தந்தவர்கள் 7%.

"தரலாம்" என்று பட்டும்படாமலும் சொன்னவர்கள் 10%.

ஆக, ஏதேனும் ஒரு வேலை பெறுவதற்காக, 17% அளவில் உடலுறவுச் சுகம் தரச் சம்மதிப்பவர்கள் இந்தியப் பெண்கள் என்கிறது அந்த ஆய்வு.

மேலும் அந்த ஆய்வில், பெண்களிடையே பாலுறவு நுகர்வு விருப்பம் அதிகரித்துள்ளது என்றும், திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்குப் பின்பும் கணவன் தவிரப் பிற ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது நம் பெண்களிடையேயான புரட்சிகர மாற்றம் என்றும் பிரமிக்கிறது கருத்துக் கணிப்பு நடத்திய இதழ்.

இம்மாற்றத்திற்கு, விடலைப் பருவப் பெண்களின் மன முதிர்ச்சி இன்மையும், உரிய முறையில் கற்பின் தேவை, பண்பாடு போன்றவை அவர்களுக்குக் கற்பிக்கப்படாததும் காரணங்களாக உள்ளனவாம்.

2008ஆம் ஆண்டில் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்திய இதழ் 'இந்தியா டுடே'[2022ஆம் ஆண்டிலும் இம்மாதிரியான கருத்துக் கணிப்பை நடத்துமா இந்த இதழ்?!].

இந்தக் கருத்துக் கணிப்பு உண்மையானது எனின், நம் மக்களின் ஒழுக்கம், பண்பாடு போன்றவை கட்டிக் காக்கப்படுதல் வேண்டும் என்று விரும்புவோரைக் கவலைக்குள்ளாக்குகிறது இது.

'இந்தியா டுடே நடத்திய இந்த ஆய்வுக்குப் போதிய ஆதாரங்கள்[பேட்டியளித்த பெண்களின் புகைப்படங்கள், முகவரிகள் தரப்படுதல் முக்கியம்] 'இந்தியா டுடே'வால்   முன்வைக்கப்படவில்லை.

மேலும், பாலுறவு குறித்து நம் பெண்கள் மேற்கண்டவாறு மனம் திறந்து பேசுதல் என்பதும் சாத்தியமில்லை; அதற்கான சூழலும் இங்கு உருவாகவில்லை. 

எனவே, விற்பனை சரிந்த நிலையில், கவர்ச்சிகரமான கணிப்பை வெளியிட்டிருக்கிறது இந்த இதழ்' என்று எண்ணத் தோன்றுகிறது. 

இது குறித்ததொரு கட்டுரையைத் தம் நூலில்['நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்'] வெளியிட்டுள்ளார் 'செந்தமிழன்' அவர்கள்[பன்மைவெளி வெளியீட்டகம், சென்னை]. 

==========================================================================