திங்கள், 10 அக்டோபர், 2022

அடிமைச் சாசனம் தயாராகட்டும்!!!

#இந்தியைப் பயிற்று மொழியாக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கட்டாய இந்தியைப் புகுத்தி ஒன்றிய அரசு இன்னொரு மொழிப்போரைத் திணிக்க வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் இதன் பன்முகத்தன்மையில்தான் உள்ளன. பலவித மதங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை எப்படியாவது சிதைத்துவிட்டு ‘ஒரே நாடு’ என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவிட வேண்டும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து செயல்படுவது, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கக் கூடியதாகும்# -இது செய்தி https://www.dinakaran.com/news_detail.asp?Nid=805541 -விரிவான செய்தி அறிய இதைச் சொடுக்குக. Indian languages mandatory in all institutions, recommends Amit Shah-led panel- The New Indian Express


இந்திய அரசின் 'ஆட்சிமொழி'யாகவும், நாடு முழுவதும் கல்வி கற்பிப்பதற்கான பயிற்று மொழியாகவும் இந்தியை[காலப்போக்கில் இந்தி மட்டும்] ஆக்கும் முயற்சியில் நடுவணரசு தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.

இதற்குத் திடமாக எதிர்ப்புத் தேரிவித்துக்கொண்டிருப்பது தமிழ்நாடு மட்டுமே[வடகிழக்கு மாநிலங்களில் கொஞ்சமே கொஞ்சம் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது என்பது செய்தி. கேரள முதல்வர் பினராய் விஜயனும், கர்னாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியும் அவ்வப்போது இந்தி எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகிறார்கள்].

இந்நிலையில், இந்தித் திணிப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நடுவணரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரளவுக்கு, இப்போதைய நடுவணரசின் ஆணையை எதிர்த்து இந்தி பேசாத எந்தவொரு மாநில முதலமைச்சரும் அறிக்கை வெளியிட்டதாகத் தெரியவில்லை.

தனித்து ஒரு மாநில அரசு மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பதால் அமித்ஷா வகையறாவின், இந்தியால் இந்தியாவை ஆளும் திட்டம் எவ்வகையிலும் பாதிக்கப்படாது என்பது அறியத்தக்கது.

வெகு விரைவில், இந்தி ஒட்டுமொத்த இந்தியாவின் ஆட்சி மொழியாகவும், கல்வி நிலையங்களின் பயிற்று மொழியாகவும் ஆகும் என்பது உறுதி.

இவ்வாறான ஒரு நிலை உருவாகும்போது, 'இந்தி'யர்களுக்கு இந்தி பேசாத அனைத்து மாநில மக்களும் அடிமைகள் ஆவர்.

இதற்கு, தொடர்ந்து இந்தியை எதிர்த்துவரும் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல.

எனவே, தமிழர்களுக்கு நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது.....

இந்திக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால் இனி எந்தவொரு பயனும் இல்லை என்பதை முதலில் உணருங்கள்.

அடுத்து, 'இனி ஒருபோதும் இந்தியை நாங்கள் எதிர்க்க மாட்டோம். அந்த மொழியின் ஆதரவாளர்களாக மட்டுமல்லாமல், 'இந்தி'யர்களான உங்களின் அடிமைகளாகவும் வாழ முழு மனதுடன் சம்மதிக்கிறோம்" என்று இப்போதே ஓர் அடிமைச் சாசனம் எழுதி, அதில் தமிழர் அனைவரும் கையொப்பம் இட்டு வைப்பது நல்லது.

தமிழர்களின் நலம் பேணுவதில் 'இந்தி'யர்கள் அலட்சியப் போக்கைக் கையாளும்போது, அவர்களைத் திருப்திப்படுத்திச் சிறிதளவேனும் அனுகூலங்களைப் பெறுவதற்கு இந்தச் சாசனம் பயன்படக்கூடும்.

வாழ்க இந்தி! வளர்க 'இந்தி'யா!!

===========================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக