திங்கள், 19 டிசம்பர், 2022

மொட்டுகளை மலரவிடுவீர் மூடர்களே!!!

மோகினி அவதாரமெடுத்த திருமாலுக்கும், கட்டுக்கடங்காத காமத்துடன் அவளைப் புணர்ந்த சிவபெருமானுக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்பது புராணம் சொல்லும்  ஆபாசக் கதை.

இந்த அசிங்கக் கதை மூடி மறைக்கப்பட்டு, சர்வ சக்தியின் வடிவம் இந்த ஐயப்பசாமி என்று தொடர் பரப்புரை செய்யப்பட்டதன் விளைவு, நாடெங்கிலுமிருந்து நாளும் பல்லாயிரக்கணக்கில்  பக்தர்கள் சபரிமலைக்குப் பயணிக்கிறார்கள். 

பக்தி என்னும் சகதியில் சிக்கி மனச் சிதைவுக்கு உள்ளாகும் இவர்கள் தங்களின் சிந்திக்கும் அறிவை மழுங்கடித்துக்கொள்கிறார்கள் என்பதில் எவருக்கும்  கவலை சிறிதுமில்லை.

உடம்பும் சிந்திக்கும் அறிவும் ஒருசேர வளர்ச்சி பெறும் வயதினரான சிறுவர்களின் மண்டையில் மூடநம்பிக்கையைத் திணிக்கிறார்களே என்பதுதான் மனித குல முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களின் மனதை வெகுவாக வருத்துகிறது.

இன்றைய[19.12.2022] ஊடகச் செய்தியின்படி,

அய்யப்பனைத் தரிசிக்க மணிக்கணக்கில் பக்தர்கள் காத்திருப்பதால், ஊனமுற்றவர்கள், பெண்கள், வயதானவர்கள் குழந்தைகள் ஆகியோருக்கு, நீதிமன்ற ஆணையின்படி  தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளதாம்.

இந்தச் சிறப்புச் சலுகையைப் பெறுவர்களின் இந்தப் பட்டியலில் குழந்தைகளைச் சேர்த்திருப்பதுதான் மனதை உறுத்துகிறது.

ஓடி ஆடி விளையாடும் இந்தப் பருவத்தில் புதியன கற்கும் ஆர்வம் மிக அதிகம்.

கடவுள், ஆன்மா, வீடுபேறு என்று கடும் விவாதத்திற்குரிய கனமான விசயங்களை இவர்களின் மூளையில் திணிப்பதால், அந்த ஆர்வம் மிகவும் குறையும்; வளரும் அறிவு முடங்கும்.

எனவே, இது குறித்து அரசும் நீதிமன்றமும் கலந்தாலோசித்து, சிறுவர் சிறுமியர் இருமுடி சுமந்து சபரிமலை செல்வதற்கு உடனடியாகத் தடை விதித்தல் வேஎண்டும் என்பது நம் பணிவான வேண்டுகோள்.

===========================================================================