ஞாயிறு, 9 ஜூலை, 2023

"விருப்ப உடலுறவு பலாத்காரம் அல்ல”... நீதிமன்றத் தீர்ப்பு! யாருடைய விருப்பம்?

டிசா மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ‘பாலியல்’ பலாத்காரக் குற்ற வழக்கில், ஏற்கனவே வழங்கப்பட்ட உச்ச நீதிம்ன்றத் தீர்ப்பை[‘விருப்ப உடலுறவு’ பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம் பத்திரிகைச் செய்தியில் இடம்பெறவில்லை] மேற்கோள் காட்டி, “திருமணம் செய்வதாக உறுதியளித்து, ஒரு பெண்ணுடன் உடலுறவுகொண்டு, சில காரணங்களால் அவளை அவன் திருமணம் செய்வது நடவாமல் போனால், அவனின் செயல்[உடலுறவு கொண்டது] பலாத்காரம் ஆகாது” என்று தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி.

தீர்ப்பு நம் உள்மனதை உறுத்துகிறது.

திருமணம் செய்வதாக உறுதி அளித்த அந்த ஆண்மகனுக்கு, ஏதோ சில காரணங்களால் தான் அளிக்கும் ‘உறுதிமொழி நிறைவேறாமல் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது’ என்பது தெரியாதா?

இது என்ன ‘சும்மா’ ஒரு முத்தம் தரும் விசயமா?

“கண்டிப்பாக உன்னைக் கல்யாணம் செய்துக்குவேன். அட்வான்ஸா ஒரே ஒரு முத்தம் கொடு” என்று வாக்குறுதி கொடுத்து முத்தம் பெறுவதும் இதுவும் ஒன்றா?

‘இது’ விசயத்தில் பெண்கள் அவ்வளவு எளிதில் ஏமாறமாட்டார்கள் என்றாலும், தாங்கள் நேசிக்கும் ஆடவர்களின் உறுதிமொழியை எளிதில் நம்பிவிடும் பலவீனம் அவர்களுக்கு உண்டு என்பது அறியத்தக்கது.

எனவே, தன்னை நம்பியவளுடன் உடலுறவுச் சுகத்தை அனுபவித்துவிட்டு, ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி, திருமணம் செய்ய மறுப்பது தண்டனைக்குரிய குற்றம்தான்.

ஆடவன் வாக்குறுதி ஏதும் தராமலிருந்து, பெண் தானாகவே தன் விருப்பத்தைத் தெரிவித்திருந்தால் மட்டுமே, ஆடவன் மணம் புரியாதது குற்றம் அல்ல என்று சொல்லலாம்.

“நல்ல நம்பிக்கையில் செய்யப்பட்ட வாக்குறுதியை மீறுவதற்கும், தவறான வாக்குறுதிக்கும் இடையே நுட்பமான வித்தியாசம் உள்ளது” என்றும் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

மணமாகாத ஒரு பென்ணுடன், ‘வாக்குறுதி கொடுத்து உடலுறவு கொள்வதே தவறு’ என்னும்போது, வாக்குறுதிகளுக்கிடையே வித்தியாசம் இருப்பதாக அவர் சொல்லியிருப்பதை எப்படி விமர்சிப்பது?

அவர் உயர் நீதிமன்ற நீதியரசர் ஆயிற்றே!