வெள்ளி, 17 மே, 2024

வயித்துப் பசியும் காதல் பசியும்![உண்மைக் கதை]

ண்பகல் இடைவேளையில், விடுதியில் உணவுண்டுவிட்டுக் கல்லூரி வளாகத்திலிருந்த ஒரு மரத்தடியில் புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள் தாமரை.

“தாமரை” -குரல் கேட்டு நிமிர்ந்தாள். 

அவளின் வகுப்புத் தோழன் செல்வம்  நின்றுகொண்டிருந்தான்.

அவளருகில் அமர்ந்து, “எனக்கு வசதியான குடும்பம். வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கணும்கிற அவசியம் இல்ல. உன்னை மனப்பூர்வமா காதலிக்கிறேன்னு பல தடவை சொல்லியிருக்கேன். நீ சம்மதிச்சா, என் பெற்றோர் அனுமதியோடு உன்னைக் கல்யாணம் பண்ணிக்குவேன்.  சந்தோசமா வாழலாம். சம்மதம் சொல்லு தாமரை” என்றான்.

“சொல்லுறேன். என் அம்மா கல்லூரியில் படிக்கும்போது, உன்னை மாதிரி வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சக மாணவன் அம்மாவை வற்புறுத்திக் கல்யாணம் கட்டிகிட்டான். நான் ஒருத்தி பிறக்கும்வரை அம்மாவுக்கு எந்தக் குறையும் வைக்கல. அப்புறம், குடி, கூத்தி, கள்ள உறவுன்னு அவன் நடத்தையே மாறிடிச்சு. கடுமையா கண்டிச்ச அம்மாவை வீட்டைவிட்டே விரட்டியடிச்சிட்டான்…..”

 சற்று நேரம் யோசித்த பின்னர் தொடர்ந்து பேசினாள்.

“பெத்தவங்களோட கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாம அவனோடு ஓடிப்போன அம்மா நிராதரவா நின்னா. ஆனாலும், வாழ்ந்து காட்டணும்கிற லட்சியத்தோடு, வீடுகளில்  வேலைக்காரியா உழைச்சா…..

ஒரு வாடகை வீட்டில் இருந்துட்டு, வேளா வேளைக்குச் சாப்பிடாம சேமிச்ச பணத்தில் என்னைப் படிக்க வைத்தாள்; நான் நல்லா படிச்சி ஒரு வேலை தேடிகிட்டா வறுமையிலிருந்து விடுபடலாம்னு நம்பினாள்.

செல்வா, நீ நம்ப மாட்டே, இந்தக் கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கின அப்புறம்தான் வயிறாரவும் வாய்க்கு ருசியாவும் சாப்பிடுறேன். படிச்சி ஒரு வேலை தேடிகிட்டா, என் அம்மாவுக்கும் வயிறாரவும் வாய்க்கு ருசியாவும் சாப்பாடு போட முடியும்.

முதல் தேவை வயித்துக்குச் சோறு. அப்புறம்தான் காதல் கல்யாணம் எல்லாம். என்னை மன்னிச்சுடு நண்பா.”

தடைபட்ட புத்தக வாசிப்பைத் தொடரலானாள் தாமரை.