370ஆவது சட்டப்பிரிவு[சிறப்பு அந்தஸ்து] மீண்டும் அமல்படுத்துவது சரியா, அல்லவா என்பது பற்றிக் கருத்துரைப்பது இப்பதிவின் நோக்கம் அல்ல; அது குறித்துப் பிரதமர் மோடி எடுத்துள்ள சபதத்தின் பின்விளைவுகள் குறித்து ஆராய்வது, அல்லது நம் கவலையைப் பதிவு செய்வது மட்டுமே.
தனி உரிமை கோரி காஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இப்படியொரு சபதத்தை நம் பிரதமர் உலகறியச் செய்திருக்கிறார்.
சபதம் மேற்கொண்டதில் தவறே இல்லை.
“நான் பிரதமர் பதவியில் இருக்கும்வரை...” என்று சொல்லியிருந்தால் அது முழுக்க முழுக்க நடைமுறை சாத்தியமானதாக இருந்திருக்கும்; அவரோ, “நான் உயிரோடு இருக்கும்வரை...” என்று குறிப்பிட்டிருக்கிறாரே அங்குதான் இடறியிருக்கிறார்.
74 வயதினரான மோடி 100 வயதுவரை[“அவர் நீடூழி வாழ்க” என்று வாழ்த்துவோம்] வாழ்வது 100% உறுதி என்றால், அதுவரை, அதாவது, மேலும் 26 ஆண்டுக் காலம் அவரே இந்த நாட்டின் பிரதமராக நீடிப்பது இயலுமா?
இயலும் என்றால்.....
வயது 100 முடிந்து[மேலும் பல்லாண்டுகள் வாழ்க] பிரதமராகவே மரணிக்கும்வரை 370 சட்டப் பிரிவு மீண்டும் அமலாக்கப்படாது என்று உறுதியாக நம்பலாம்.
ஆனால்.....
அவர் உயிர் வாழும்போதே பதவி இழக்க நேரிட்டுப் பிறிதொரு கட்சி நாட்டை ஆள நேர்ந்து, 370 சட்டப் பிரிவு அமலாக்கப்பட்டால் அதைத் தடுக்க மோடி போராட்டம் நடத்துவார்[?]. அது பிசுபிசுத்துப்போனால், சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள நேரலாம்.
அப்போதைய ஆளும் கட்சி அதை அலட்சியப்படுத்தினால் மோடியின் நிலை?
அனுமானம் செய்யவே மனம் அஞ்சுகிறது.
எனவே, நம் பிரதமரிடம் நாம் மனப்பூர்வமாய் வேண்டிக்கொள்வது.....
இனியும் ஒரு முறை சபதம் மேற்கொள்ளுங்கள். அது, “நான் பிரதமர் பதவியில் இருக்கும்வரை.....” என்று திருத்தப்பட்ட சபதமாக இருந்திடட்டும்!