கீழ்க்காண்பது என் 52ஆவது[அமேசான் கிண்டிலில்] நூலின்['புனிதம்’... பொய்யர்களின் புனைந்துரை!] அறிமுக உரை:
அறிமுக உரை:
மக்களின் சிந்திக்கும் அறிவைச் சிதைக்கும் மூடநம்பிக்கைகளில் முன்னிலை வகிப்பது முன்னோர்களால் கற்பிக்கப்பட்டதும், மக்கள் மீது திணிக்கப்பட்டதுமான ‘புனிதம்’.
நம்பத்தகாதனவற்றை எளிதாக நம்பச் செய்வதற்கு இது வெகுவாகப் பயன்படுத்தப்பட்டது/படுகிறது.
கற்பிக்கப்பட்ட கடவுளை நம்புவது போலவே, புனிதமானது என்று முத்திரை குத்தப்பட்ட மூடத்தனங்களைக் கண்மூடித்தனமாக நம்புவது நம் மக்களின் வழக்கம் ஆகிவிட்டது.
மந்திரங்கள் ஓதி, ஆறுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட அழுக்கு நீரைக் குடம் குடமாகக் கோயில் கலசங்களின் மீது கொட்டி, அதைப் புனித நீர் என்று பொய்ப் பரப்புரை செய்தார்கள் மூடநம்பிக்கைத் திணிப்பாளர்கள்.
மனிதர்களால், மண்ணும் மணலும் கற்களும் சுதையும் சீமைக் காரையும் பிறவும் கொண்டு கட்டப்பட்ட கோயிலை, புனித நீரின் மூலம் புனிதம் ஆக்கினார்கள் அவர்கள். உள்ளே வைக்கப்பட்ட சிலைகளுக்கு அதை ஊற்றி அவற்றை வழிபடு கடவுள் ஆக்கினார்கள்.
சம்பந்தப்பட்ட மதவாதிகளின் மூதாதையரால் எழுதப்பட்ட இந்துக்களின் வேதம், இஸ்லாமியரின் குரான், கிறித்தவரின் பைபிள் ஆகியவை[+பிற மத நூல்கள்] புனித நூல்கள் ஆக்கப்பட்டன.
தங்களைக் கடவுளின் பிரதிநிதிகள் ஆக்கிக் கல்லா கட்டும் போலிச் சாமியார்களும் புனிதர்கள் என்று போற்றப்பட்டார்கள்.
சுருங்கச் சொன்னால்…..
எவற்றையெல்லாம் மக்கள் எதிர்த்துக் கேள்விகள் கேட்கக்கூடாது என்று மதவாதிகள் நினைத்தார்களோ, அவற்றையெல்லாம் புனிதமானைவை என்றார்கள். அவர்களால் திணிக்கப்பட்ட புனித நீராடல், புனிதப் பயணம், புனிதச் சடங்குகள் போன்றவற்றைப் புறக்கணித்து, வாழ்ந்து முடிக்கும்வரை தன்னலம் பேணுவதோடு பிறருக்கும் பயன்படும் வகையில் வாழ முயல்வதே அறிவுடைமை ஆகும்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கருத்துகள் தங்களின் முயற்சி வெற்றி பெற ஓரளவுக்கேனும் உதவும் என்பது என் நம்பிக்கை.
‘புனிதம்’ குறித்துத் தமிழில் வெளியாகும் தரமானதொரு நூலாகவும் இது இருக்கக்கூடும்.
வாசியுங்கள். எவ்வகையிலேனும் இது தங்களுக்குப் பயன்படுதல் வேண்டும் என்பது என் விருப்பம்.
நன்றி.
நூல்:
