செவ்வாய், 26 அக்டோபர், 2021

கருத்துக்குப் பொருத்தமாய்க் 'கலக்கல்' கதை சொல்லும் ஜக்கிவாசுதேவ்!!!


'சத்குரு' என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் 'ஜக்கி வாசுதேவ்' அவர்களைப் பற்றிப் பல பதிவுகள் எழுதியிருக்கிறேன். எல்லாமே அவரைச் 'சாடி' எழுதியவைதான்.

இந்தப் பதிவு, அவரின் கதை சொல்லும் திறனைப் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'விவாகரத்து' குறித்து அவர் வழங்கிய கருத்துரைப் பதிவு ஒன்றில் சுவையான கதைகளை அவர் சொல்லியிருக்கிறார். வாசித்து மகிழ்ந்தேன். 'காதல் இன்றி, ‘மனைவி’ ‘கணவன்’ என்று பெயரளவில் இணைந்து வாழ்வது சித்ரவதையானது' என்பதை வலியுறுத்தும் வகையில் உருவானவை அக்கதைகள்.

கதை 1:

#திருமணம் முடிந்த கையோடு அந்தக் கணவனும் மனைவியும், 'ஓருவர் மற்றொருவரின் அலமாரியைத் திறந்து பார்க்கக்கூடாது' என்று ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர்; அதை மதித்து நடந்துகொள்ளவும் செய்தனர். 

30 ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள்.....

கணவனின் அலமாரி திறந்து இருப்பதைக் கவனித்த மனைவி, கட்டுக்கடங்காத  ஆர்வம் காரணமாக, அதனுள்ளே பார்வையை ஓடவிட்டாள். 

உள்ளே 12 ஆயிரம் ரூபாய்ப் பணமும், மூன்று மெழுகுவர்த்திகளும் இருந்தன.

"மெழுகுவர்த்தி எதற்கு?" என்று கணவனை அழைத்துக் கேட்டாள் மனைவி.

"நான் உனக்குத் துரோகம் செய்யும் ஒவ்வொரு முறையும் ஒரு மெழுகுவர்த்தி வாங்கிவைப்பது வழக்கம்" என்றான் கணவன்.

'30 வருடங்களில் மூன்றே முறைதான் தவறி இருக்கிறானா?' என்று ஆறுதல் பெற்ற மனைவி, அவனை மன்னிக்கவும் தயாராக இருந்தாள்.

அங்கிருந்த பணத்தைச் சுட்டிக்காட்டி, "இந்தப் பணம்?" என்று கேட்டாள்.

"அதுவா? 100 மெழுகுவர்த்தி சேர்ந்துவிட்டால், அவற்றைப் பாதிவிலைக்குக் கடைக்காரனிடமே கொடுத்துவிடுவேன். அப்படிச் சேர்ந்த பணம் அது" என்றான் கணவன்.

அதிர்ச்சியிலிருந்து விடுபட மனைவிக்கு வெகு நேரம் ஆனது.

கதை 2:

ஒருவன் ரபியிடம் (சர்ச் ஃபாதர் போல்) வந்தான்; "என் மனைவியை மிகவும் நேசிக்கிறேன். ஆனால், தெருவில் செல்கையில் மற்ற அழகான பெண்களைக் காண்கையில் அவர்களால் தூண்டப்படுகிறேன். தவிக்கும் மனதை என்ன செய்வது?" என்று கேட்டான்.

ரபி சொன்னார்: "அபார உணவு வகைகளைப் பார்க்கும்போது, அவற்றை உண்பதற்காக எவ்வளவும் ஆசைப்படு. தவறில்லை. ஆனால், உணவு உண்பதற்கு மட்டும் உன் வீட்டுக்குப் போய்விடு."

https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/moham-theernthatum-kaadal-mudinthuviduma      -Mar 7, 2014