புதன், 27 அக்டோபர், 2021

'இந்தி'யில் பேசாவிட்டால்.....

 //இந்தியா முழுவதும் கிளைகள் உள்ள பல நிறுவனங்களும் இந்தியை ஆதரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தங்களது வாடிக்கையாளர்களிடம் இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ கடந்த வாரம் சர்ச்சையில் சிக்கியது.

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தான் ஆர்டர் செய்த உணவில் ஒரு பொருள் விடுபட்டுள்ளது குறித்து ஜொமாட்டோ கஸ்டமர் கேரில் புகார் அளித்துள்ளார். அப்போது அவர் தமிழில் பேசியுள்ளார், விடுபட்ட உணவுப் பொருளுக்கான பணத்தைத் தனக்குத் திருப்பித்க் தந்துவிடுமாறு கூறினார். அதற்கு கஸ்டமர் கேரில் இருந்து பேசிய நபர் தனக்குத் தமிழ் தெரியாது என்று கூறினார்.

அத்துடன் நிற்காமல், ஒரு இந்தியராக இருந்துகொண்டு இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள் என்றும் அவர் கேட்டுள்ளார். 

இதே மாதிரியான ஒரு நிகழ்வு கர்னாடகாவிலும் இடம்பெற்றுள்ளது//[ஊடகச் செய்தி].

பெங்களூருவில் உள்ள 'கேஎஃப்சி' விற்பனை மையத்தில் இந்திப் பாடல் ஒலிக்கப்பட்டது.

அப்போது அங்கு உணவு அருந்திக்கொண்டிருந்த ஒரு பெண் கன்னடப் பாடலை ஒலிபரப்புமாறு கேட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனை ஏற்க மறுத்த அந்த உணவகத்தின் ஊழியர் ஒருவர் 'இந்தியாவின் தேசிய மொழி இந்தி' என்று அந்தப் பெண்ணிடம் பதிலளித்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. 

இச்செய்திகளின் மூலம், இந்தி வெறியர்கள்[அதிகாரம் படைத்தவர்களின் ஊக்குவிப்புடன்] இந்தி பேசாத மக்களிடம் இந்தியைத் திணிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்பது தெரிகிறது.

ஆக, நாட்டை ஆளுவோர் இந்தியை வளர்ப்பதிலும் பரப்புவதிலும் அதீத ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பதால், இவர்களின் திணிப்பு முயற்சி தங்குதடையின்றித் தொடரும் என்பதில் எள்ளளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

எனவே, உணவுப் பொருள் வழங்கும் நிறுவனமான ஜொமாட்டோ, கோவையில் மன்னிப்புக் கேட்டதுபோல், கேஎஃப்சி நிறுவனமோ, இவை போன்ற பிற இந்தி பரப்பும் நிறுவனங்களோ, இம்மாதிரியான பிரச்சினைகளை உண்டாக்கிவிட்டுப் பிறகு மன்னிப்புக் கேட்கும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.

சொல்லப்போனால், "இந்தியில் பேசாவிட்டால் நீங்கள் கேட்கும் பொருளை வழங்கமாட்டோம்" என்று சொல்லுவதும் நடக்கக்கூடும்.

இந்த இந்தித் திணிப்பு, உணவுப் பொருள் வழங்கும் நிறுவனங்கள் அளவில் நின்றுவிடாது என்பதை நாம் கருத்தில் கொள்வது அவசியம்.

இந்தியில் பேசாவிட்டால், இந்திய அளவில், 'இந்தி'யர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் அனைத்துமே, தாம் தயாரிக்கும் பொருள்களை இந்தி தெரியாதவர்களுக்கு வழங்கிட மறுக்கலாம்.

இந்தியை[மட்டும்]ப் பரப்ப அயராது பாடுபடும் இந்திய அரசு, இந்தி பேசத் தெரியாத மாநில மக்களுக்கு, இயற்கைப் பேரிடர்க் காலங்களில் உதவி செய்வதை நிறுத்திவிடவும்கூடும்.

இந்தி பேச மறுக்கும் மாநிலங்களுக்கிடையே, அவர்களுக்குள் பேசித் தீர்க்க இயலாத பெரும் பிரசினைகள் எழுந்தால், 'அடித்துக்கொள்ளட்டும்' என்று கண்டும் காணாமலும் இருந்துவிடுவதற்கான சாத்தியமும் உண்டு.

இந்தி பேச மறுக்கும் மாநில மக்களைத் தண்டிக்க இன்னும் பல வழிமுறைகள் உள்ளன. அனைத்தையும் இங்கு குறிப்பிட்டால், அது நீண்டதொரு பட்டியலாக அமையக்கூடும்[ஏடாகூடமாக எதையும் சொல்லி வைத்தால், 'பசி'பரமசிவம் வம்புதும்பில் மாட்டிக்கொள்ளுதலும்கூடும்! ஹி... ஹி... ஹி!!!].

============================================================================