எனது படம்
இந்தத் தளத்தின் பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைத் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. இவை அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். நான் பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

வியாழன், 23 அக்டோபர், 2025

டெல்லிக்கு அருகே சபரிமலைக் கோயில்... மோடிஜியால் முடியும்!


நம் குடியரசுத் தலைவர் ‘முர்மு’ அவர்கள் சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்கள்.

நம் பிரதமர் மோடி அவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், அயோத்தியில் பாலராமருக்குக் கோடானுகோடி செலவில் கோயில் கட்டியது போல, கோடியோ கோடி செலவில்[பக்தி வளர்ப்பில் பணம் ஒரு பொருட்டல்ல] டெல்லிக்கு அருகில்  ஒரு மலையைத் தேர்வு செய்து, அற்புதமான அழகிய ஐயப்பன் சாமி கோயிலையும் கட்டியிருப்பார். ஐயப்பன் வழிபாடு குடியரசுத் தலைவருக்கு மிக எளிதானதாக அமைந்திருக்கும்.

‘முர்மு’ அவர்களின் அடுத்த, கேரளாவில் உள்ள சபரிமலைப் பயணத்தைத் தவிர்ப்பதற்காக, இப்போதே நம் பிரதமர் அவர்கள் ஐயப்பன் சாமிக்குக் கோயில் கட்டும் பணியை[டெல்லிக்கு அருகில் உள்ள மலையில்] மேற்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

டெல்லிக்கு மிக அருகில் மலை ஏதும் இல்லை. சுமார் 270 கி.மீ தொலைவில் அவை உள்ளன.

*டேராடூன்[டெல்லியிலிருந்து 270 கி.மீ]:

*பர்வானூ (டெல்லியிலிருந்து 295 கிமீ)

டெல்லியிலிருந்து கேரளாவில் உள்ள சபரிமலைக் கோயிலுக்கான தூரம்[2,750.7 கிமீ> NH 52 வழியாக], இவற்றோடு ஒப்பிடும்போது மிக மிக அதிகம்

என்வே, மேற்கண்டவை போன்ற மலைகளில் ஏற்றதொரு இடத்தைத் தேர்வு செய்து, அங்கு கேரளாவின் சபரிமலைக் கோயிலைப் போன்றதொரு கோயிலை, கடவுளால் அனுப்பப்பட்ட நம் பிரதமர் மோடிஜி அவர்கள் உருவாக்கிட வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.

இதனால், மோடிஜி, முர்மு, அமித்ஸு போன்ற மேலிடத்தார் மட்டுமல்லாமல், டெல்லியிலும் அதன் சுற்றுவட்டாரங்களில் வாழும் ஏழைபாழைகளும் மேற்கண்ட கோயிலுக்குச் சென்று ஐயப்பனின் அருளைப் பெறுவது எளிதில் சாத்தியமாகும்.

மோடிஜி மேற்கொள்ளவுள்ள இந்த இறைப்பணிக்கு அம்பானி, அதானி போன்ற அருளாளர்கள் மட்டுமல்லாமல், பக்திமான்களில் பலரும் நிதியை வாரி வழங்குவார்கள் என்பது உறுதி. 

அனாதை விடுதிகள், முதியோர் இல்லங்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் புகலிடங்கள், அரசு மருத்துவமனைகள், போதுமான வசதியில்லாத தனியார் மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றிற்கு உதவுவதால் கிடைக்காத புண்ணியத்தை, பக்திப் பணிகளுக்கு உதவுவதன் மூலம் பெறலாம் என்பது அறியத்தக்கது[ஹி... ஹி... ஹி!!!]!

சாமியே சரணம் ஐயப்பா!