“அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் தாராவியிலும் மதக்கலவரம் வெடித்தது. அந்தச் சம்பவம் நடந்து ஒருமாத காலம் நிறைவடைந்திருந்த நிலையில், மிகப்பெரிய கலவரம் தாராவிக்குள் உண்டானது.
.....அங்கு இந்து - முஸ்லீம் கலவரம் வெடித்தவுடன் இரு தரப்புமே மற்றவர்கள் வேட்டியையும், கால்சட்டையையும் உருவிப்பார்த்து, அவர்களது மதத்தை உறுதிசெய்துவிட்டு வெட்ட ஆரம்பித்தார்கள். பலபேர் இதில் காயம்பட்டார்கள். இட்லி விற்ற ஒரு சிறுவனை இதேபோல ஆடையுருவிப் பார்த்துக் கொலைசெய்து 90 அடி ரோட்டில் வீசிவிட்டுச் சென்றனர். மொத்தமாக இதில் இறந்தது 8 பேர்தான் என்றாலும் அங்கிருந்த மக்கள் மத்தியில் இது ஏற்படுத்தியிருந்த பீதி மிகவும் கொடூரமாக இருந்தது. அதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது.
அங்கிருந்த குடிசைகளுக்குத் தீவைத்து, அந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக குடிசையைக் கொளுத்தினார்கள். கொளுத்தியவனும் தமிழன்தான். இந்து, முஸ்லீம் என இரு தரப்புகளிலும் தமிழர்கள் இருந்தார்கள்.
அந்தக் கொடூரமான கலவரங்களுக்கு மத்தியில் கடையில் இருந்த அரிசி, பருப்புகளெல்லாம் கொள்ளையடிக்கப்பட்டன. அந்தக் கடையும் தமிழனுடையதே; அங்குள்ள பொருட்களை அள்ளிக்கொண்டு சென்றவனும் தமிழனே. 144 தடை உத்தரவு போடப்பட்டு ராணுவம் அங்கு குவிக்கப்பட்டிருந்தது. அன்றைய இரவு நான், எனது தோழர்கள் அனைவரும் வேலை முடித்துவிட்டுத் திரும்பி வந்தோம். எங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் உள்ளே தனியாக இருப்பார்கள் எனக் கூறியவுடன் தாராவிக்குள் செல்ல எங்களை அனுமதித்தனர். நடந்து போகக்கூடாது எனக் கூறி முட்டிபோட்டுக்கொண்டே செல்லச் சொன்னார்கள். நானும் உடனிருந்த தோழர்களும் முக்கால் கி.மீ தூரம் முழங்காலிட்டுக்கொண்டே சென்றோம்.
.....ஒருத்தனைக் கத்தியால் குத்திக் கொல்ல நினைத்தார்கள் என்றால் விஷம் தடவித்தான் குத்துவார்கள். தெருக்களில் ரத்தம் சிந்திக்கிடப்பது, கண்ணாடிகள் நொறுங்கிக்கிடப்பதெல்லாம் அங்கு சாதாரணம். சாதிக்கலவரங்கள், மதக்கலவரங்கள், களவாணிப்பயல்களுக்கு இடையேயான மோதல்கள் எனப் பலவற்றைப் பார்த்துப் பழகிவிட்டார்கள் அந்த மக்கள்.
.....அங்கு நடக்கிற பிரச்சினைகளைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசாரைக் கொண்டுவந்து குவிப்பார்கள். பிரச்சினையைக் கட்டுக்குள் கொண்டுவரவே அவர்கள் வந்திருந்தாலும் கலவரத்தில் நம்மையும் சுட்டுவிடுவார்களோ என அச்சமாக இருக்கும்.
அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சி யூனியன் உட்பட எல்லா யூனியன்களும் உங்களுக்கு நாங்கள் போனஸ் வாங்கித் தருகிறோம் எனக் கூறி அங்கிருந்தவர்களைப் போராட வைத்தார்கள். கடைசியில் அங்கிருந்த டெக்ஸ்டைல்ஸ் அனைத்தும் குஜராத்திற்குச் சென்றுவிட்டது. ஒவ்வொரு கம்பெனியிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வேலை பார்த்தார்கள். சில கம்பெனிகளில் 7 ஆயிரம் தமிழர்கள்வரை வேலை பார்த்தார்கள். 80களிலேயே ரூ. 25 ஆயிரத்திற்கும் அதிகமாகச் சம்பளம் வாங்கிய தமிழர்களும் அங்கு இருந்தனர். இந்தக் கம்பெனிகள் எல்லாம் மூடப்பட்டதால் வெறும் 15 ரூபாய் தினக்கூலிக்காக நம்முடைய ஆட்கள் வேலைக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது.
இவ்வளவு நெருக்கடியான வாழ்க்கைக்கு மத்தியிலும் கணபதி வழிபாடு சிறப்பாக நடைபெறும். மாடுங்காவில் வரதா பாய் தரப்பினர், கணேசர் கோவிலில் ஆதிதிராவிடர்கள், ட்ரான்சிட் கேம்பில் நாடார்கள், கல்யாணிவாடியில் முக்குலத்தோர் என வெகு விமரிசையாக் கணபதி விழா நடக்கும். 'இந்த உப்பளத்தின் ஒலிப்புலத்திலும் இயேசு முளைக்கிறார்; ஏற்பாடு ஜெபிக்கிறார். 'இந்த உப்பளத்தின் ஒலிப்புலத்திலும் அல்லா முளைக்கிறார்; அருளாளர் ஆகிறார்'. கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ், இஸ்லாமியர்களின் ரம்ஜான் என எல்லா மதப்பண்டிகைகளும் அங்கு களைகட்டும். ஆனால், இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு விழா கொண்டுவதற்கான வாய்ப்பே அங்கு அமையவில்லை.
இங்கே சாமிகள் எல்லாம் அந்தந்த மதங்களுக்கானது. அங்கு தானாக முளைத்த ஒன்று என்றால் அது ரௌடிசம். நாங்கள்தான் உங்களுக்குப் பாதுகாப்பு என்றுகூறி அவர்களது சுயநலத்திற்காகச் சாதிய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மக்களைத் தனிமைப்படுத்தும் வேலைகளும் அங்கு நடந்தன.
==========================================================================
கொஞ்சம் கவிதை வரிகளை மட்டும் தவிர்த்து, கட்டுரையில் இடம்பெற்றிருந்த கருத்துரைகளை முழுமையாகப் பதிவு செய்திருக்கிறேன்.
'நக்கீரன்' இதழுக்கு நம் நன்றி.
https://www.nakkheeran.in/360-news/thodargal/aaravayal-periyaiya-dharavi-story-series-3
Published on 27/05/2021 (15:15) | Edited on 18/06/2021 (10:01)