திங்கள், 25 அக்டோபர், 2021

ஆண்களைவிடவும் பெண்களே புத்திசாலிகள்... சில நேரங்களில்!

ஒரு வாரம்போல வாணிப நிமித்தம் ஊர் சுற்றிவிட்டு வீடு திரும்புகிறான் கணவன். குளித்து முடித்து, உணவருந்திப் படுக்கையறை புகுந்த அவனுக்கு ‘அந்த’ நினைப்பு!

“இன்னும் என்ன பண்றே?” - மனைவியை அணுகிக் கிசுகிசுத்தான்.

அவனை ஓரக்கண்ணால் பார்த்து, “எல்லாம் போட்டது போட்டபடியே கிடக்குது” என்று புன்முறுவல் பூத்தாள் அவள். இந்தப் புன்முறுவலுக்கு என்ன அர்த்தம்?

‘குழந்தை தூங்காம விளையாடிட்டிருக்கு. நாத்தனார் நாவல் படிச்சிட்டுக் கொட்டக் கொட்ட முழிச்சிட்டிருக்கா. கிழவனும் கிழவியும் தொணதொணத்துட்டிருக்காங்க. எல்லாரும் தூங்கட்டும். அவசரப்படாதீங்க’ன்னு அர்த்தம்! இது எத்தனை ஆண்களுக்குப் புரியும்?

சில நேரங்களில், இந்தப் பெண்களின் பேச்சுக்கு எதிர்மறையாகப் பொருள்கொள்ள வேண்டும்.

தீபாவளிக்கு இரண்டு வாரம் இருக்கிறது. கணவன் அலுவலகம் புறப்படும்போது மனைவி குரல் கொடுக்கிறாள்: “இந்தத் தீபாவளிக்கு எனக்குப் பட்டுப்புடவை வேண்டாம்.”

“இன்னிக்கிச் சம்பள நாளாச்சே. மறக்காம பட்டுப் புடவை வாங்கிட்டு வந்துடுங்க” என்பதுதான் இதன் உண்மையான அர்த்தம். இதைப் புரிந்துகொண்டால் கணவன் பிழைத்தான். புரியாதவன் பாடு திண்டாட்டம்தான்.

இருவரும் ஒரு திருமணத்திற்குச் செல்கிறார்கள். ஆடம்பரமாக உடுத்து, அழகழகான பெண்கள் எல்லாம் வருவார்கள் இல்லையா? எவளோ ஒருத்தியைச் சுட்டிக்காட்டி, “இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா இல்லியா?’ என்று உங்களவள் கேட்டால், “உன்னை விடவா?” என்று கூசாமல் பொய் சொல்லத் தெரிய வேண்டும். “ஆமா” என்று உளறிக்கொட்டினால் ‘அது’ விசயத்தில் நீங்கள் பல நாள் பட்டினி கிடக்க வேண்டியிருக்கும்!

உங்கள் மனைவியின் தோழி,  செல்பேசியில் உங்களையும் அழைத்துக்கொண்டு தன்  திருமணநாள் கொண்டாட்டத்திற்கு வரச் சொல்லுகிறாள். “என் நாத்தனார் ரெண்டு பேரும் ஊரிலிருந்து வந்திருக்காங்க. அவங்களையும் அழைச்சிட்டு வரவா?” என்கிறாள் உங்கள் மனைவி. தோழியிடமிருந்து உடனடி பதில் இல்லை. கொஞ்சம் அமைதிக்குப் பிறகு அழைத்துவரச் சொல்லுகிறாள் அவள்.

அந்த அமைதிக்கு என்ன பொருள்?

“வேண்டாம்” என்பதே. அது உங்கள் மனைவிக்கும் பிற பெண்களுக்கும் மட்டுமே புரியும். உங்களைப் போன்ற ஆண்களுக்குப் புரியாது.

கணவனும் மனைவியுமான இரண்டு ஜோடிகள் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்புகிறார்கள். முதலில் ஒரு ஜோடியின் வீடு வந்துவிடுகிறது. அந்தப் பெண், “வாங்களேன், காபி சாப்பிட்டுப் போறது” என்கிறாள்.

“சரி” என்று தலையாட்ட இருந்த உங்களைத் தடுத்து, “பரவாயில்ல அக்கா. வீட்டில் அவசர வேலை இருக்கு” என்று உங்களை இழுத்துக்கொண்டு வீடு வந்து சேர்கிறாள் உங்கள் துணைவி.

‘வாங்களேன்’, ‘போறது’ போன்றவை வெறும் உபச்சார வார்த்தைகள் என்பது உங்கள் குடும்பத் தலைவிக்கும் புரியும்; உங்களுக்குப் புரியவே புரியாது.

வீட்டில், எதிர்பாராமல் வந்த விருந்தாளியைச் சாப்பிட அழைக்கிறாள் உங்கள் மனைவி. “நீங்களும் சாப்பிடுங்க” என்று சொல்லாமல், “சாப்பிட்டுடுங்களேன்” என்று சொன்னால், அதற்குப் போதுமான அளவு உணவு இருப்பில் இல்லை என்று அர்த்தம். 

குரலின் ஏற்ற இறக்கம்,  வார்த்தைகளுக்கு இடையே விடும் இடைவெளி, புருவங்களின் அசைவு, இழுத்து விடும் பெருமூச்சு என்றிவைகளுக்கேற்பப் பெண்களின் பேச்சுக்கான அர்த்தமும் மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.

பெண்களின் பேச்சை முழுமையாகப் புரிந்துகொள்வது பெண்களுக்கு மட்டுமே சாத்தியம். ஆண்களுக்கு?

ஊஹூம்!
==========================================================================
மார்ச் 1997 ‘ஓம் சக்தி’ இதழில் முருகுசுந்தரம் அவர்கள் எழுதியதைக் கொஞ்சம் மாற்றங்களுடன் பதிவு செய்திருக்கிறேன்.