பக்திமான்களே, தெய்வங்கள் இருப்பது உண்மையோ பொய்யோ, தீராத துன்பங்களிலிருந்து விடுபடவும், மன அமைதிக்காகவும் அவற்றை நீங்கள் வழிபடுகிறீர்கள்.
உங்களைத் தடுப்பாரில்லை; தடுப்பதோ திருத்துவதோ அத்தனை எளிதும் அல்ல.
மனத்தளவில் வழிபடுவது போதும்தான். ஆனால், ஓர் ஆண்டில் பல நாட்களில் விழாக்கள் நடத்தி மகிழும் நீங்கள், வேத விற்பன்னர்கள் மந்திரம்[உங்களை ஏமாற்றும் தந்திரம்] ஓதி, உலோகங்களில்[+கற்கள்] வடித்தெடுக்கப்பட்ட சிலைகளில் அந்தத் தெய்வங்களைக் குடியேற்றிவிட்டதாக நம்புகிறீர்கள்.
நம்பிக்கையோடுதான் வழிபடுகிறீர்கள்.
ஆகவே, நீங்கள் வழிபடுவது சிலைகளை அல்ல; தெய்வங்களையேதான்[உங்களின் நம்பிக்கையின்படி].
தத்ரூபமாகக் கடவுள்களே உங்கள் முன்னாலிருந்து அருள்பாலிக்கும் நிலையில், அற்ப மனிதப் பிறவிகளான அர்ச்சகர்கள், திருக்கல்யாண வைபோகம் என்னும் பெயரில், பெண் தெய்வங்களுக்குத்[அவர்கள் கடவுள்களின் பிரதிநிதிகளாம். அந்தத் தகுதியை எந்தக் கடவுள் அவர்களுக்கு வழங்கினார்?] தாலி அணிவிக்கும் அநியாயத்தைக் கண்டுகொள்ளாமல் பயப்பக்தியோடு தரிசனம் செய்கிறீர்களே, இது அடுக்குமா?
ஏராளமான சடங்குகளுக்கிடையே, இந்த ஒரே ஒரு கண்டிக்கத்தக்க சடங்கையேனும் தடுத்து நிறுத்த உங்களுக்குத் தோணாமல்போனது ஏன்?
கண்மூடித்தனமான பக்தி உங்களின் கண்களை மறைக்கிறதோ? அது உங்களைச் சிந்திக்கவிடாமல் தடுக்கிறதோ?