அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 18 ஆகஸ்ட், 2012

குயவனும் கடவுளும்

இது சிறுகதையல்ல..........இது சிறுகதை அல்ல..........இது சிறுகதை அல்ல.......

         குயவனும் கடவுளும் [சிந்தனைப் பதிவு]

கடவுள் உண்டென்று சொல்லும் ஆன்மிக அறிஞர்கள் [ வஞ்சப் புகழ்ச்சியல்ல] வழக்கமாக முன்வைக்கும் ஓர் எடுத்துக்காட்டு, ’ஒரு மண்பானை தானாகத் தோன்றாது. அதைப் படைக்க ஒரு குயவன் தேவை. அது போல, உலகங்களையும் உயிர்களையும் பிறவற்றையும் படைக்கக் கடவுள் தேவை’ என்பதாகும்.

ஒரு குயவன், கண்களை மூடித் திறந்தோ, விரித்த உள்ளங்கையை மேலே உயர்த்தியோ[அபயக்கரம் போல] பானையைப் படைத்ததில்லை; களிமண், நீர் போன்ற மூலப் பொருள்களை சேர்த்து, தண்டச் சக்கரம், தட்டுப் பலகை [பானையைத் தட்டிச் சீர்படுத்தும் கருவி] போன்ற துணைக் கருவிகளைக் கொண்டுதான் படைத்தார்; படைக்கிறார். அது போல, கடவுள் தனக்குரிய மூலப் பொருள்களையும் துணைக் கருவிகளையும் எங்கிருந்து அல்லது எவரிடமிருந்து பெற்றார் என்று எம்மைப் போன்றவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு,  உரிய விளக்கம் தரப்படாத நிலையில்................

அவற்றைக் கடவுள் தனக்குள்ளிருந்தே  எடுத்துக் கொண்டிருக்கலாம். அது உண்மை என்றால், உலகில் உள்ள அத்தனை பொருள்களும் கடவுள் தன்மை வாய்ந்தவையே. அது அவ்வாறாயின், கடவுளின் கூறான நம் உடம்பு, ஒரு துன்பம் வரும்போது  கிடந்து துடிக்கிறதே, அது ஏன் என்று  ஐயம் எழுப்பினோம்.

இதற்கான விளக்கத்தையும், கடவுள் இருப்பதை உறுதிப்படுத்த முயலும் அறிஞர்களிடமிருந்து பெற இயலவில்லை.

இந்நிலையில் மீண்டும் ஒரு வினாவை, அவர்கள் முன் வைக்கிறோம். [பிரபஞ்சம், கடவுள் என்று சொல்லிச் சொல்லி வினாக்கள் தொடுப்பதே இந்த ஆளுக்கு வேலையாகப் போய்விட்டது என்று எரிச்சலடையாதீர். ‘சரக்கு’ தீர்ந்துவிட்டதால், கடவுள் தொடர்பான ‘தொடர் பதிவு’களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறோம். ‘இதை எப்போதோ செய்திருக்கலாம்’ என்று ஏடாகூடமாக எவரும் பின்னூட்டம் போட்டுவிடாதீர்!!]


குயவன் தனக்குத் தேவையான  துணைக் கருவிகளை அவரே உருவாக்கிக் கொள்ளவில்லை. அவற்றைப் படைத்தளித்தவர்கள் குயவனைப் போன்ற பிற மனிதர்களே.

ஆக, குயவர் பானையைப் படைக்கத் தொடங்குவதற்கு முன்னரே, துணைக் கருவிகளை உருவாக்கும் படைப்புத் தொழில் ஆரம்பம் ஆகிவிட்டது என்பது உண்மை.

இதைப் போலவே, கடவுள் படைப்புத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, துணைக் கருவிகளைப் படைக்கும் தொழில் நடைபெற்றிருக்க வேண்டும் {தரப்பட்ட எடுத்துக்காட்டை [குயவனின் பானை படைக்கும் தொழில்] அடிப்படையாகக் கொண்டுதான் இந்த விளக்கங்களைத் தருகிறோம்}

அந்தத் தொழிலைச் செய்தவர்கள் யார்?

கடவுளுக்கு இணையாக, படைக்கும் ஆற்றல் பெற்ற அவர்கள் யார்?

அவர்களும் கடவுள்கள்தானே?

அக் கடவுளர்கள் எத்தனை பேர்?  படைக்கப்படாமல் என்றென்றும் இருந்து கொண்டிருப்பவர்கள் என்பதால் அவர்களையும் போற்றிப் புகழ்ந்து வழிபடலாமா?

நம் கண் முன்னே நடக்கும் சில நிகழ்ச்சிகளை உதாரணம் காட்டி, புலன்களாலோ ஆறாவது அறிவாலோ அறியப்படாத, கடவுள் என்று சொல்லப்படுபவரை நிரூபிக்க முயல்வது எத்தனை தவறு என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

அறியப்பட்ட ஒன்றை ஒப்புமை காட்டி அறியப்படாத ஒன்றை விளக்கும் போது, அந்த ஒப்புமை முழுமையானதாக [’முழுமையாகஎன்று நாம் குறிப்பிடுவது, மூலப் பொருட்கள், துணைக்கருவிகள், துணை நின்றவர்கள், படைப்புத் தொழிலைச் செய்தவர் என்று ஒரு படைப்புக்குக் காரணமான அனைத்தையும்...அனைவரையும் உள்ளடக்கியது] இருத்தல் அவசியம்.

போகிற போக்கில், “பானையைப் படைக்க ஒரு குயவன் தேவை. அது போல், உலகத்தைப் படைக்கக் கடவுள் தேவை” என்று சொல்லிச் செல்வது ஏற்கத்தக்க விவாத முறையல்ல.

ஏற்புடைய பதில் தருவதைத் தவிர்த்து..............................

“உன்னுடைய அறிவைக் கொண்டு, கடவுள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டேன்” என்று எவராயினும் சவால் விடக்கூடும்

எம்மைப் பொருத்தவரை, ”கடவுள் இல்லை” என்று சொல்வதைத் தவிர்த்து, கடவுளானவர் அடிப்படை ஆதாரங்களுடன் நிரூபிக்கப் படவில்லை என்றுதான் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

”கடவுளை விமர்சனம் செய்வதற்கு, அவரினும் மேலான அறிவு படைத்தவர்க்கே தகுதி உண்டு” என்று வாதம் புரிபவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நாம் தரும் பதில்........................

“முதலில் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபியுங்கள். அதன்பிறகு, ஒரு போதும் அவர் குறித்து நாங்கள் வாய் திறக்க மாட்டோம்” என்பதுதான்.

தன்னளவில் ஒருவர் கடவுளை நம்பினால் அதைக் குற்றம் சாட்ட எமக்கோ பிறருக்கோ உரிமையில்லை. அதே அவர், பொது மக்கள் மனங்களில் தன் நம்பிக்கையைத் திணிக்க முயலும்போது, அதில் குறுக்கிட எல்லோருக்கும் உரிமை உண்டு.

கடவுளின் ‘இருப்பை' நிலைநாட்ட முயலும் ஆன்மிக அறிஞர்களுக்கு நாம் நினைவுபடுத்துவது......................................

துணைக் கருவிகளை வழங்கிய கடவுளர் எத்தனை பேர்?

நேரிடையான பதில் தேவை.

”நீ நாத்திகன். கடவுள் இல்லை என்று சொல்லித் திரிகிறாய். அப்படிச் சொல்லி என்ன சாதிச்சே? உன் குடும்பத்தில் உள்ளவர்கள் கோவிலுக்குப் போவதில்லையா? ஊருக்கும் உலகத்துக்கும் நீ என்ன செஞ்சி கிழிச்சே?” என்பதான கேள்விகளை முன் வைப்பது விவாதத்தின் போக்கைத் திசை திருப்பும் முயற்சியாகும்

மீண்டும் சொல்கிறோம்.

ஒரே ஒரு கேள்வியைத்தான்  முன் வைத்திருக்கிறோம்.

அறிஞர்களிடமிருந்து எதிர்பார்ப்பது அதற்கான பதிலை மட்டுமே.

இது சவால் அல்ல; வேண்டுகோள் மட்டுமே.

*******************************************************************************

அடுத்த பதிவுப் பொருள் [ நாள் குறிப்பிட இயலவில்லை]...............

//அண்டவெளியில் பெரும் அற்புதங்களை நிகழ்த்துகிற, மனித அறிவைக் காட்டிலும் மேம்பட்ட பேரறிவு வாய்க்கப் பெற்ற அந்த ‘ஏதோ.....’ நீங்கள் நம்புகிற கடவுள் அல்ல//

*******************************************************************************




24 கருத்துகள்:

  1. நல்ல அலசல்... பாராட்டுக்கள்...

    தங்களுக்கு ஒய்வு நேரம் இருந்தால் எனது " தெய்வம் இருப்பது எங்கே ?" பதிவை வாசிக்க வேண்டுகிறேன்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. நன்றி தனபாலன்.

    தங்கள் தளத்திற்கு நான் வருவது வழக்கமான ஒன்று.

    பின்னூட்டம் எழுதத் தவறுவதும் உண்டு.

    இக்குறையைத் தவிர்க்க முயல்வேன்.

    மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அறியப்பட்ட ஒன்றை ஒப்புமை காட்டி அறியப்படாத ஒன்றை விளக்கும் போது, அந்த ஒப்புமை முழுமையானதாக இருத்தல் அவசியம்.//

    மிக நெருக்கமாக பொருள் உணர்த்தும் வண்ணம் அமைக்கலாம். இதுதான் சாத்தியம். முழுமையானதாக இருக்க வாய்ப்பு இல்லை.

    //கடவுள் என்பவர் அடிப்படை ஆதாரங்களுடன் நிரூபிக்கப் படவில்லை என்றுதான் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.//

    என்பவர் என்ற வார்த்தை பிரயோகம் சரி எனில் இன்னும் விளக்கம் தேவை.,

    அடுத்த இடுகையின் தலைப்பு நிறைய விசயங்களை உள்ளடக்கி இருக்கிறது.

    வரட்டும். வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  4. //[ஒப்புமை] முழுமையானதாக இருக்க வாய்ப்பில்லை// என்ற தங்கள் கருத்தை முழுமையாக ஏற்கிறேன். இனி, இது போன்ற பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முயல்வேன்.

    ‘என்பவர்’ என்னும் சொல்லுக்கு மாற்றுச் சொல் தேவை என்பதை உணர்கிறேன்.

    உரிமையுடன், தயக்கமின்றித் தவறுகளைச் சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி சிவா.

    பதிலளிநீக்கு
  5. நண்பர் சிவாவுக்கு,

    ‘முழுமையாக’ என்ற சொல்லுக்கு,அடைப்பில் சிறு விளக்கம் சேர்த்திருக்கிறேன். இப்போதைக்கு இதுவே என்னால் முடிந்தது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ப்பூ இவ்வளவுதானா! முன்பு வினவில் நடந்த விவாதத்தை படித்து எங்களுடைய ஜெயதேவ் பாஸ் தத்துவத்தை செரித்து தெளியவும்.
    http://www.vinavu.com/2012/03/31/atheism/

    பதிலளிநீக்கு
  7. நன்றி சந்தானம்.

    ஜெயதேவ் என் நண்பர் மட்டுமல்ல, சிறந்த சிந்தனையாளரும்கூட.

    அவர் தத்துவங்களை நான் படித்துச் செரித்துத் தெளிவு பெற்று மகிழ்ந்திருக்கிறேன்.

    அவரை நீங்கள் எனக்கு அறியச் செய்ய வேண்டிய அவசியமில்லை.

    “ப்பூ.....இவ்வளவுதானா!” என்கிற உங்கள் தத்துவங்களை முன் வையுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. \\அது போல, கடவுள் தனக்குரிய மூலப் பொருள்களையும் துணைக் கருவிகளையும் எங்கிருந்து அல்லது எவரிடமிருந்து பெற்றார் என்று எம்மைப் போன்றவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, உரிய விளக்கம் தரப்படாத நிலையில்................\\

    படம் 16 வயதினிலே
    காட்சி:வெள்ளையும் சொள்ளையுமா கமல் ஒரு டீக்கடைக்கு போகிறார், அங்கே ரஜினி, கவுண்டமணி மற்றும் அந்த ஊர் டாக்டர் [மாட்டு டாக்டர்தான்!!] பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

    கமல் [டீக்கடைக்காரரிடம்]: யோவ், ஒரு டீ போடு, அப்படியே தலை கலஞ்சிருக்கா பாத்து சொல்லு?
    டீக்கடைக்காரர்: எதுக்கு?
    கமல்: கலஞ்சா வாரிக்கச் சொல்லி மயிலு சீப்பு குடுத்திருக்கு?
    அதுக்கு ரஜினி இடைமறிச்சு கேட்கிறார்...........
    ரஜினி: சீவிக்க சீப்பு குடுத்தாளே, டீக்குடிக்க நோட்டு குடுத்தாளா?

    Now,let us come to the point!! ஐயா, நீங்க கேள்வியைக் கேட்டீங்க, ஆனா அதுக்கான பதிலை சொல்றதுக்கு கமண்டு பொட்டிய குடுத்தீங்களா!! இருந்திருதால் நிச்சயம் பதிலளித்திருப்பேன். துரதிர்ஷ்டவசமாக தவறான புரிதல்களால் தங்களால் அதைச் செய்ய முடியவில்லை, எனக்கென்று பிளாக் இல்லாததால் என்னாலும் பதில் தர இயலவில்லை!!

    பதிலளிநீக்கு
  9. தங்கள் கேள்வி:
    இறைவன் உலகைப் படைக்க உபயோகப் படுத்திய கருவிகள் எவை? அதற்க்கான மூலப் பொருட்களை அவன் எங்கேயிருந்து பெற்றான்? அவனுக்கு யாரெல்லாம் படைப்பில் உதவியவர்கள்? [பெயர் லிஸ்ட் வேண்டும்!!]

    பேராசிரியர் கந்தசாமி ஐயா வலைபதிவில் நான் போட்டிருந்த பின்னூட்டம் தங்கள் மனதில் ஏற்ப்படுத்திய தாக்கமே இந்த பதிவு என நினைக்கிறேன்!! என்னை மடக்க நீங்கள் ரொம்பவெல்லாம் யோசிக்க வேண்டியதே இல்லை. ஜடம் தானாகவே complex வடிவங்களைப் பெரும் என்று நீங்கள் காண்பித்தாலே போதும், என் வாதம் தோற்று விடும். அதை என் செய்ய மாட்டேன்கிரீர்கள்? நான் செல்பேசியோ, கேமராவோ கூட தானாக உருவகியதாகக் காட்டும்படி உங்களைக் கேட்கவில்லை, ஒரு இட்லி /ஒரு மண்சட்டியாவது தானாகவே உருவாகிக் கொள்ளும் என்று காட்டுங்கள் என்றுதான் கேட்கிறேன் ஏன் முடியவில்லை?

    பதிலளிநீக்கு
  10. தாஸ்,

    தங்கள் பின்னூட்டத்திற்கு மேலே உள்ளதைப் பாருங்கள். நான் விரும்பி வெளியிட்ட கருத்து அது.

    நமக்கிடையேயான தவறான புரிதலுக்கு நாம் இருவருமே காரணம்தான்.

    பிறருடன் விவாதிக்கும் போது, கிண்டலான, நக்கலான சொற்களைப் பயன்படுத்தும் வழக்கம் இயல்பாகவே என்னிடம் இல்லை.

    என்னோடு வாதம் புரிபவர் அதைச் செய்யும் போது, நிதானம் இழந்துவிடுவதும் என் இயல்புதான்.

    நம்மிடையே முதன்முறையாக இடம்பெற்ற விவாதத்தின் போது.....

    “...மகிழ்ச்சி பொங்கி வழியும்” என்று நான் சொல்ல....

    “எங்கே வழியுது?” என்று கேட்டுக் கிண்டலடித்தீர்கள்.

    கோபப்பட்ட நான் தங்களைப் புண்படுத்தும் சொல்லைப் பயன்படுத்தினேன்.

    இதுவே நம் தவறான புரிதலுக்குக் காரணமாக அமைந்தது.

    ஒரு கருத்தை முன் வைத்தால், சிந்தித்துப் பதில் தருவதற்கு அவகாசமே தராமல், கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறீர்கள்.

    தங்களுடன் விவாதம் செய்ய நான் விரும்பாததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

    //உரிய விளக்கம் தரப்படாத நிலையில்....//- தங்களை மனதில் கொண்டு நான் இதைச் சொல்லவில்லை; இது நான் வழக்கமாகக் கையாளுகிற உத்தி[?]தான்.

    இந்த வரி எந்த வகையிலும் தங்களின் மதிப்பைக் குறைக்காது.

    என் கருத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கு நான் வருந்துவதே இல்லை.

    தவறு செய்தால் திருத்திக் கொள்ளத் தயங்கியதும் இல்லை.

    என் கருத்துகளுக்கு மாற்றுக் கருத்துகள் தர விரும்பினால் தயங்காமல் தாருங்கள்.

    நக்கல், நையாண்டிக்கு இடம் தராமல் எவ்வளவும் எழுதுங்கள்; சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லாமல், சுருக்கமாகச் சொல்லுங்கள்

    எழுதுங்கள் வெளியிடத் தயாராக உள்ளேன்.

    பதில் தர இயலாமலோ விருப்பம் இல்லாமலோ இருந்தாலும் வெளியிடுகிறேன்.

    இப்போது நாமக்கல்லில் நேரம் இரவு 12.15.

    தாங்கள் போடும் பின்னூட்டத்தை நாளை காலை பத்து மணி வாக்கில்தான் பார்த்து வெளியிட இயலும்.

    நான் ‘மதிப்பாய்வை’[moderation]நடைமுறைப் படுத்தத் தாங்கள் காரணமல்ல; வேறு யாரோ சிலர்.

    மிக்க நன்றி தாஸ்.

    பதிலளிநீக்கு
  11. தாஸ்’

    ”ஜடம் தானாகவே complex வடிவம் பெறும் என்று காண்பித்தாலே போதும். என் வாதம் தோற்றுவிடும்” என்கிறீர்கள்.

    இதை என்னால் காண்பிக்க முடியும் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. அதற்கான அறிவாற்றல் எனக்கு இல்லை என்பதையும் ஒத்துக் கொள்கிறேன். [இந்தப் பதில் தங்களுக்குத் திருப்தி தரும் என்று நம்புகிறேன்].

    வெகு அற்ப அறிவு படைத்த நான் சொல்வது.......

    குயவன் பானை படைத்தது போல, கடவுள் உலகங்களைப் படைத்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை; ஏற்க முடியவில்லை என்பதுதான். எடுத்துக்காட்டு முழுமையாகப் பொருந்தவில்லை என்பதுதான் [உரிய விளக்கம் பதிவில் இருக்கிறது].

    மீண்டும் சொல்கிறேன், பானை தானாகத் தோன்றும்; உலகம் தானாகத் தோன்றும் என்பதற்கெல்லாம் என்னால் ஆதாரம் காட்ட முடியாது.

    என்னால் முடியாது என்பதற்காக....

    ”பானையைக் குயவன் படைத்தது போல,உலகங்களைக் கடவுள் படைத்தார்’ என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை; அது கட்டாயமும் இல்லை ” என்று சொல்லக் கூடாதா?

    அதைத்தான் இந்தப் பதிவில் நான் செய்திருக்கிறேன்.[தலைப்பைவிட்டு நான் விலகவில்லை என்று நம்புகிறேன்]

    தாஸ்,

    இது நம் இருவருக்குமான கவுரவப் பிரச்சினை அல்ல.[தாங்கள் அப்படிச் சொல்லவும் இல்லை]

    பொருத்தமான எடுத்துக் காட்டுடன், உலகங்களைப் படைத்தது கடவுளே என்பதைத் தாங்கள் எனக்குப் புரிய வைத்தால், அறுபதைக் கடந்த நான், எஞ்சியுள்ள வாழ்நாளில், அவரைத் தொழுது பயன் பெற முயல்வேன்.

    இது உண்மை.

    தாங்கள் இது பற்றித் தொடர்ந்து சிந்திப்பீர்கள் என்பதை நான் அறிவேன்.

    உரிய முறையில், என் போன்றவர்களுக்குக் கடவுளைப் புரிய வைப்பதற்கான முயற்சியில், விரைந்து தாங்கள் வெற்றி பெற என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

    ஜடம் தானாகத் தோன்றுவதற்கு ஆதாரம் காட்ட இயலாததால்,இந்த விவாதத்தில் நான் தோற்றதாகக் கொண்டாலும் அதை நான் மனதார ஏற்கிறேன்.

    தங்களின் வாதத் திறமையை நான் நன்றாக அறிவேன்.

    அன்பு கொண்டு, பதிலுக்குப் பதில் தர வேண்டும் என்று நினைக்காதீர்கள்.

    தேவைப்பட்டால், மீண்டும் கருத்துப் பரிமாற்றம் செய்வோம்.

    என் பதிவிலும் பொருள் இருப்பதாக நம்பி, தங்களின் கருத்துகளை முன்வைத்ததற்கு என் மனம் நிறைந்த நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  12. எனக்கென்று பிளாக் இல்லாததால் என்னாலும் பதில் தர இயலவில்லை!! //

    @ Jayadev Das
    ஏன் வலைப்பதிவு ஆரம்பிப்பதில் என்ன தயக்கம். தொழில்நுட்ப ஏதேனும் தேவையா?

    ஏற்கனவே உருவாக்கி இருக்கறீர்கள். அதை பெயர் கொடுத்து இயக்கத்துக்கு கொண்டுவரலாமே..

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள ஐயா, தங்களது அன்பான பதிலுக்கு நன்றி. எனக்கு தங்கள் வலைத்தளத்தில் பின்னூட்டமிட வாய்ப்பு கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே ஒரு விஷயத்தை தெளிவு படுத்திவிட ஆசைப் படுகிறேன். தாங்கள் குறிப்பிட்டுள்ளது போலவே, நானும் தங்களை வாதத்தில் தோற்கடிக்க வேண்டுமென்பதற்காக என் பின்னூட்டங்களை தரப் போவதில்லை. தாங்கள் சில கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள், அதற்க்கு என்னுடைய புரிதல் என்ன என்பதை மட்டும் இங்கே தெரிவிக்கப் போகிறேன். தாங்கள் சொன்னது போலவே, தலைப்பை விட்டு விலகாமலும், தாங்கள் என் பதில்கள் மேல் எழும் சந்தேகங்களை தெரிவிக்க வேண்டிய இடைவெளி விட்டும் பின்னூட்டங்களை வெளியிடலாம் என இருக்கிறேன். நான் தங்கள் திருப்தியடையும் விதமாக பதில்களைத் தரமுடியும் என்றோ, தங்கள் சந்தேகங்கள் அத்தனையும் தீர்க்க முடியும் என்றோ எந்த உத்திரவாதமும் தர இயலாது என்ற உண்மையையும் இந்த இடத்தில் பதிவு செய்கிறேன். மேலும், என்னுடைய கருத்துக்களை தாங்கள் ஏற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை, தாராளமாக நிராகரிக்கலாம். மேலும் "கற்றது கைமண்ணளவு" என்ற தமிழ்ப் பழமொழி எனக்கும் பொருந்தும் என்பதை நான் உணர்தே இருக்கிறேன் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. \\குயவன் பானை படைத்தது போல, கடவுள் உலகங்களைப் படைத்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை; ஏற்க முடியவில்லை என்பதுதான். எடுத்துக்காட்டு முழுமையாகப் பொருந்தவில்லை என்பதுதான் [உரிய விளக்கம் பதிவில் இருக்கிறது].\\

    இதில் நான் என்ன சொல்ல நினைத்தேனோ அது தங்களைச் சென்றடையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. "குயவன் பானை படைத்தது போல, கடவுள் உலகங்களைப் படைத்தார்" இதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம், இதில் எந்த லாஜிக்கும் இல்லை. நான் இவ்வாறு சொல்ல வில்லை. புவியில் உயிர்கள் தோன்றியதை விளக்க இன்றைய விஞ்ஞானிகள் சிலர் கொடுக்கும் விளக்கம் என்னவெனில், ஆரம்பத்தில் இங்கே உயிர்கள் எதுவும் இருக்கவில்லை, செவ்வாய் கிரகத்தைப் போல கல்லும் மண்ணுமாகத்தான் இருந்தது, அவையே காலப் போக்கில் பிளான் பண்ணி தற்போதைய வடிவங்களுக்கு வந்துவிட்டன, ஆகையால் உயிர்கள் தோன்ற கடவுள் தேவையில்லை என்கிறார்கள். இதை மறுதலிக்க, நாம் வாழ்வில் பயன்படுத்தி வரும் பொருட்களில் மிகவும் எளிமையான வடிவமைப்பைக் கொண்ட ஒன்றை உதாரணம் சொல்ல நினைத்து அதற்க்கு பானையைத் தேர்ந்தெடுத்தேன். இதில் களிமண், நெருப்பில் சுடப் பட்டுள்ளது அவ்வளவு தான். இது தன்னைத் தானே வடிவமைத்துக் கொண்டது என்று ஒருவர் சொல்வதாக எடுத்துக் கொள்வோம். அதை நம்மில் யாராவது நம்புவோமா? நிச்சயம் நம்பமாட்டோம். அதே சமயம், நம் உடலில் உள்ள ஏதாவதொரு செல்லில் இருந்து, நம் உடலுறுப்புகள், இந்த பூமி, சூரிய குடும்பம், இந்த பிரபஞ்சம் வரை ஒவ்வொன்றும் பிளான் செய்து வடிவமைக்கப் பட்டுள்ளது. நீங்கள் இதை appreciate செய்ய வேண்டுமென்றால், இணையத்தில் நம் கண்கள் எப்படி செயல் படுகின்றன என்றும், ஒரு கேமரா எப்படி செயல் படுகிறது என்றும் பாருங்கள். கேமராவை விட கண் பலமடங்கு அற்புதமாகச் செயல் படுகிறது என்பதை உணர்வீர்கள், அதே மாதிரி நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் அற்புதமாக வடிவமைக்கப் பட்டு, அவை பாதுகாப்பாக இயங்க வேண்டிய ஏற்ப்பாடுகளோடும் வைக்கப் பட்டிருக்கிறது. இதயம், நுரையீரல், பாதுகாப்பாக இருக்க கடின எலும்புக்கூடு வேண்டும், மூளையைப் பாதுகாக்க கடின மண்டையோடு வேண்டும், உணவு செரிக்க 32 அடி குடல் வேண்டும் இதையெல்லாம் கல்லும் மண்ணும் தானாகவே சிந்தித்து அந்தந்த பொருள் தேவையான இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டிருக்குமா? அதற்கும் மேல், அவை ஒன்றாக ஒருங்கிணைக்கப் பட்டு நாம் ஒரு தனி entity ஆக இயங்க வைக்கப் பட்டுள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், மனிதனால் கண்டுபிடிக்கப் பட்ட எந்த ஒரு கருவியையும் விட இயற்கையில் செயல்படும் உறுப்புகள் பல மடங்கு நேர்த்தியாகவும், நுட்பமாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒரு எளிய வடிவமான பானையே ஒருத்தர் செய்யாமல் தானாக உருவாகாது என்றால் இத்தனை அற்புதமான நமது உடல் ஒருத்தர் பிளான் செய்யாமல் வந்திருக்க முடியுமா? இந்த பிளானிங் ஒரு தனி செல்லில் ஆரம்பித்து இந்த பிரபஞ்சம் வரை எல்லா கட்டத்திலும் இருக்கிறது. இவை தானாக உருவாகியிருக்க முடியாது, ஒரு புத்திசாலி பிளான் செய்து வடிவமைத்தால் மட்டுமே முடியும் என்பது எனது புரிதல்!! [இது சரியா தப்பா என்பதை தங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்!!]

    இன்னமும் தங்களுக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டுமானால், உங்கள் கனியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ON செய்து விட்டு எங்கேயோ சென்று விட்டீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் வீட்டுப் பூனை அதன் key-board மேல் குதித்து திரையில் எழுத்துக்கள் வருவதாக வைத்துக் கொள்வோம். அதில், வா... போ....... என்ற வார்த்தைகள் வருகிறது என்றால், இருக்கலாம் என்று நம்புவோம், அம்மா அப்பா... என்று வந்ததாகச் சொன்னால் நம்புவோம், ஆனாலும் சந்தேகம் வர ஆரம்பிக்கும், அப்படியே வைரமுத்து கவிதை ஒன்று வருகிறது என்றால் யாரும் நம்ப மாட்டோம். 1333 திருக்குறளும் வந்துச்சு என்றால், துண்டை உதற தோளில் போட்டுக் கொண்டு இடத்தை காலி செய்வோம். ஆனால், இவர்கள் சொல்வது, Encyclopedia Britanica வே அப்படித்தான் வந்தது நம்பு என்கிறார்கள், அதை என்னால் நம்ப முடியவில்லை. யாரவது ஒருத்தன் உட்கார்ந்து தட்டச்சு செய்தாள் மட்டும் தான் வரும் என்கிறோம்.

    இந்த பிரபஞ்சம், அதில் உள்ள ஆற்றல், இந்த சூரிய குடும்பம், அதில் புவியில் உள்ள உயிரினம் இவை தானாக உருவாகியிருக்க முடியாது, யாரோ பிளான் செய்தாள் மட்டுமே வர முடியும். இது எனது புரிதல். இதில் தங்களுக்கு கேள்விகள் இருந்தால் எழுப்பலாம். தாங்கள் நேற்று கேட்ட கேள்வியின் [கடவுள் பயன்படுத்திய கருவிகள் எது, அவனுக்கு உதவியவர்கள் யார்] பதிலை நாளை அடுத்த பின்னூட்டத்தில் தருகிறேன்.

    பதிலளிநீக்கு
  15. //தொழில் நுட்ப உதவி ஏதேனும் தேவையா?//

    உதவ முன் வந்த தங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன்.

    நன்றி சிவா.

    பதிலளிநீக்கு
  16. \\ஏன் வலைப்பதிவு ஆரம்பிப்பதில் என்ன தயக்கம். தொழில்நுட்ப ஏதேனும் தேவையா?\\ Exactly, I don't know the Technology, can you help me? jayadevdas2007@gmail.com

    பதிலளிநீக்கு
  17. நன்கு புரியும்படி சொல்லியிருக்கிறீர்கள் ஜெயதேவ்.

    இது பற்றியெல்லாம் இன்னும் ஆழமாகச் சிந்தித்து, தனிப்பதிவு போட எண்ணியுள்ளேன்.

    தேவை நேரும்போது தங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்வேன்.

    மிக்க மிக்க மிக்க நன்றி சகோதரரே.

    பதிலளிநீக்கு
  18. ஜயதேவ்,

    இதற்கு மேலும், எனக்கு விளக்கம் ஏதும் தர வேண்டாம் என்பது என் விருப்பம்

    விளக்கம் தேவைப்பட்டால், நானே தங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

    என் உணர்வைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    தாங்கள் சொல்ல நினைக்கிற அவ்வளவையும் என் தளத்திலேயே சொல்ல நினைப்பது முறையல்ல. தாங்கள் சொல்பவை ஏற்கனவே எனக்குத் தெரிதவையாகவும் இருக்கலாம். அவற்றையெல்லாம் பத்தி பத்தியாக நான் விளக்கிக் கொண்டிருக்க முடியாது.

    பதிவு செய்திருக்கிறீர்கள். வலைத்தளம் இல்லையென்கிறீர்கள்.தங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

    மீண்டும் சொல்கிறேன். என் மன உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள்.

    நன்றி. வணக்கம்.



    பதிலளிநீக்கு
  19. வாய்ப்புக்கு நன்றி ஐயா, வணக்கம், மீண்டும் இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம், சிந்திப்போம்!!

    பதிலளிநீக்கு
  20. நீங்கள் எழுதும் முறை முழுக்க முழுக்க சரி! நன்றாக எழுதுகிறீர்கள்; தொடர்ந்து எழுதுங்கள்!

    பதிலளிநீக்கு
  21. //நீங்கள் எழுதும் முறை முழுக்க முழுக்க முழுக்கச் சரி. நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்//

    நன்றி நம்பள்கி.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. மூட நம்பிக்கைகளை முறியடிக்கக் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். நன்று.என் வலைப்பதிவற்கு வருகை தந்து கருத்திட்டதற்கு மிக்க நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு